Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

நான் ஒண்ணும் சும்மா பதவிக்கு வரலை. பல கோடிகளைக் கொட்டிக் கொடுத்துட்டுத்தான் வந்திருக்கேன்

கிசுகிசு

நான் ஒண்ணும் சும்மா பதவிக்கு வரலை. பல கோடிகளைக் கொட்டிக் கொடுத்துட்டுத்தான் வந்திருக்கேன்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

சிகிச்சைக்காக முதன்மையானவர் விரைவில் வெளிநாடு கிளம்பப்போகிறாராம். ‘சிகிச்சைக்காக…’ எனச் சொல்லாமல், துணிவானவர் பாணியில் வெளிநாட்டுத் தொழில் பிரமுகர்களைச் சந்திக்கச் செல்வதாகச் சொல்கிறார்களாம். தொழில் வாய்ப்புகளைப் பெருக்குகிற சந்திப்புகளை முடித்துவிட்டு, அப்படியே சிகிச்சையையும் மேற்கொள்வதுதான் முதன்மையானவரின் திட்டமாம். #கண்ணா... ரெண்டு லட்டு தின்ன ஆசையா..!

“நான் ஒண்ணும் சும்மா பதவிக்கு வரலை. பல கோடிகளைக் கொட்டிக் கொடுத்துட்டுத்தான் வந்திருக்கேன்” என அதிகாரிகளிடமும் கட்சிக்காரர்களிடமும் அடிக்கடி வார்த்தைகளை விடுகிறாராம் தென் மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர். அமைச்சருக்கு ஆகாத சிலர், இந்த விஷயத்தை மேலிடத்தின் கவனத்துக்குக் கொண்டுசெல்ல, “அவர் பேச்சைப் பதிவாக்கிக் கொடுங்கள்” என உத்தரவு வந்ததாம். அமைச்சர் மறுபடி எப்போது இது சம்பந்தமாகப் பேசுவார் என செல்போனும் கையுமாகக் காத்திருக்கிறார்கள் உள்ளடி உடன்பிறப்புகள். #‘பத்திரமா’ இருங்க பாஸ்!

கிசுகிசு

சிறையிலிருந்து வெளியே வந்த சின்ன தலைவி அரசியலிலும் ஆடியோ வெளியிடுவதிலும் தீவிரமாகிவிட்டார். ஆனால், அவரோடு சிறையிலிருந்த முன்னாள் வளர்ப்பு மகனை மீட்க 10 கோடி ரூபாய் அபராதம் கட்டினால்தான் முடியும் என்கிற நிலை நீடிக்கிறது. வளர்ப்பு மகனின் மனைவி, உறவினர்களிடம் அந்தத் தொகைக்காகப் போராடிப் பார்த்திருக்கிறார். யாரும் உதவ முன்வராத நிலையில், “அபராதம் கட்டலைன்னா கூடுதலா ஒரு வருடம்தான் ஜெயில். இப்பவே அஞ்சாறு மாசம் ஓடிப்போச்சு. இன்னும் சில மாசம்தானே… நான் உள்ளேயே இருந்துட்டு வரேன்” எனச் சொல்லிவிட்டாராம் வளர்ப்பு மகன். #ஊரத் தெரிஞ்சுக்கிட்டேன்... உலகம் புரிஞ்சுக்கிட்டேன் கண்மணி!

‘தான் உண்டு தன் வேலை உண்டு’ என இருப்பவர், தற்போது ரகசியத் துறையைக் கையில்வைத்திருக்கும் அதிகாரி. இதனால், முதன்மையானவரின் கவனத்துக்கு உரிய தகவல்கள் மட்டுமே அவர் வழியே போகின்றன. இதை உடைக்க, ரகசியத் துறைக்கு வேறு அதிகாரியைக் கொண்டுவரத் துடிக்கிறார்கள் காக்கி வட்டாரத்தின் அதிகாரப் புள்ளிகள். அதற்கான சூழ்ச்சிகளிலும் இறங்கிவிட்டார்கள். #ஒட்டுக் கேக்குறதும் ஓட்டு கேக்குறதும்தான் பாலிட்டிக்ஸ்!

“பக்கத்து மாநிலத்தில் பாசிட்டிவ் கேஸ்கள் அதிகமாகிக்கொண்டே போவதால், அந்த அளவு பாதிப்பு இங்கே வருவதற்குள் லாக்டௌன் போட்டுவிடலாம்” என ஆலோசனை சொன்னாராம் ஹெல்த்தான அதிகாரி. உரிய துறையின் அமைச்சரும் முதன்மையானவருக்கு இந்தத் தகவலைச் சொல்ல, மற்ற துறை அதிகாரிகளிடம் ஆஃப் தி ரெக்கார்ட் ஆலோசனை நடத்தப்பட்டிருக்கிறது. ‘இன்னும் ஒரு மாதம் கழித்து லாக்டௌன் குறித்து முடிவெடுக்கலாம்’ எனத் தும்பைவிட்டு வாலைப் பிடிக்கிற ஆலோசனைக்கே அதிக ஆதரவு கிடைக்க, முதன்மையானவர் லாக்டௌன் முடிவைக் கைவிட்டாராம். #கொரோனாவை ‘லாக்’ பண்ணலைன்னா... வாழ்க்கை டௌன் ஆகிடும் பரவால்லயா?

டெல்டா மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர், ஆட்சி மாறினாலும் இலைக் கட்சியின் ட்ரீட்மென்ட் புள்ளியிடம் தொடர்ந்து தொடர்பில் இருந்தாராம். விஷயம் வெளியே கசிவதாகச் சிலர் சொன்னபோது, “நான் ராஜ்பவன் ஆதரவு பெற்ற ஆள். அதனால், என்னை மாற்ற மாட்டார்கள்” என்றாராம். சொன்ன, அடுத்த வாரத்திலேயே அந்த அதிகாரியைப் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டத்துக்கு மாற்றியிருக்கிறார்கள். #அவ்வளவு சத்தமாவா கேட்டூஊஊச்சு?!

கிசுகிசு

பணிவானவருக்குத் துணையாக இருந்தும் எவ்விதப் பலனும் அனுபவிக்க முடியாததால், ஏற்கெனவே வருத்தத்தில் இருந்தார் காவிக் கட்சியிலிருந்து இலைக் கட்சிக்கு மாறி எம்.பி-யாக இருந்த புள்ளி. ஆளுங்கட்சிக்கு மாறப்போகும் அடுத்த விக்கெட்டாக இவரைத்தான் சொல்கிறார்கள். ‘பதவியெல்லாம் வேண்டாம். மரியாதை கிடைத்தால் போதும்’ என முதற்கட்டப் பேச்சுவார்த்தையில் சொல்லியிருக்கிறாராம் அந்த முன்னாள் எம்.பி. #மரியாதைக்காக மரியாதையை இழக்காதீங்கனு சொன்னா... மரியாதையாவா இருக்கும்?!

நாள்தோறும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளிடம் போனில் பேசுகிறார் துணிவானவர். அவர்கள் சொல்லும் குறைகளைப் பொறுமையாகக் கேட்கிறார். கட்சிப் பிரச்னைகளைத் தீர்த்துவைக்கிறார். பணரீதியான நெருக்கடிகளுக்கு, ‘இவர்களிடம் பேசுங்கள்’ என தாராளம் காட்டி செல்போன் எண்களை அனுப்புகிறார். “உச்சபட்ச ராஜதந்திரமா இருக்கே” என வியந்துபோகிறார்கள் இலைக் கட்சியின் நிர்வாகிகள் பலரும். #அண்ணன்கிட்டதானே கேக்குறீங்க... சும்மா கேளுங்க!