
நடிகர்கள் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள், முதன்மையானவரைச் சந்தித்து வாழ்த்து பெற நேரம் கேட்டார்கள். அடுத்த நிமிடமே அனுமதி கிடைக்க, வெற்றிபெற்ற நிர்வாகிகள் நேரில் சந்தித்தார்கள். எல்லோரும் வந்த நிலையில் ஒரு நிர்வாகி மட்டும் மிஸ்ஸிங். சினிமாவில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடிக்கும் அவர், அரசியலிலும் கோலோச்சுகிற நபர். ‘அவர் ஏன் என்னைச் சந்திக்க வரவில்லை?’ எனக் கேட்டிருக்கிறார் முதன்மையானவர். ‘எல்லோரும் வருவதாகத்தான் சொன்னார்கள். கடைசி நேரத்தில் அவர் மட்டும் கழன்றுகொண்டார். காரணம் சொல்லவில்லை. அந்தத் தேதியில் அவருக்கு ஷூட்டிங் உள்ளிட்ட எந்த வேலையும் இல்லை’ எனத் தெளிவாக `நோட்’ வைத்திருக்கிறது உளவுத்துறை. #புலி ஏன் பதுங்குது?

சீக்கிரமே நடக்கவிருக்கும் ராஜ்ய சபா தேர்தலில், இலைக் கட்சிக்கு இரண்டு உறுப்பினர்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதற்கான போட்டி பலமாக நடக்கத் தொடங்கியிருக்கிறது. பணிவானவருக்கு ஒரு சீட், துணிவானவருக்கு ஒரு சீட் எனப் பிரிக்கப்பட்டிருக்கிறதாம். துணிவானவர் எம்.ஜி.ஆர் காலத்து ‘மலை’ பிரமுகரை எம்.பி-யாக்குவதாக வெளிப்படையாகவே சொல்லிவிட்டாராம். ஆனால், பணிவானவர் யாரை மனதில் நினைக்கிறார் என்பது இப்போது வரை தெரியவில்லையாம். இதற்கிடையில் காவிக் கட்சி சார்பில் பணிவானவரிடம் ராஜ்யசபா சீட் குறித்த பேச்சுவார்த்தை நடக்கிறதாம். அந்தக் கட்சிக்கு ராஜ்யசபா சீட்டைப் பணிவானவர் தாரை வார்த்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கிறார்கள். #எவ்வளவோ பண்ணிட்டார்... இதைப் பண்ண மாட்டாரா!

ஜனாதிபதி தேர்தல் இன்னும் இரு மாதங்களில் நடக்கவிருக்கும் நிலையில், அதுவரை மாநில அரசைப் பெரிதாகச் சீண்ட வேண்டாம் எனப் பவன்காரருக்கு உத்தரவிட்டிருக்கிறதாம் டெல்லி. ஜனாதிபதி தேர்தலில் டெல்லி கைகாட்டும் நபர் வெற்றிபெற, தமிழகத்தின் ஆளுங்கட்சி ஆதரவும் தேவை. அதனால், இப்போதைக்குத் தடாலடி வேலைகளைச் செய்ய வேண்டாம் எனப் பவன்காரருக்குச் சொல்லியிருக் கிறார்களாம். #கொஞ்சம் கேப் விட்டு அடிப்போம்!

ரெய்டு, வழக்கு என அடுத்தடுத்துப் பாய்ச்சினாலும், கம்பீரமாக நெஞ்சை நிமிர்த்தி நின்றார் பெல் மாஜி. ஆனால், சொத்து விவரங்களை மொத்தமாக வளைத்துக் குடைச்சல் கொடுக்கப் படுவதால், சமாதானத்துக்கு ரெடியாகிவிட்டாராம் அவர். மருமகன் ரூட்டில் சோர்ஸ் பிடித்து, ‘போதும்… வலிக்குது… அழுதுடுவேன்’ என்கிற ரேஞ்சுக்கு இறங்கிவந்ததாம் பெல் மாஜி தரப்பு. ஆனாலும் இந்த நிமிடம் வரை மருமகனிடம் நேரடியாகப் பேசுகிற சூழல் கிட்டவில்லையாம். வேறு சோர்ஸ் பிடிக்க வேலை நடக்கிறது. #‘வார்டன்னா அடிப்போம்’ மொமன்ட்!

‘பட்ஜெட் அறிவிப்புகள் மக்கள் மத்தியில் எத்தகைய வரவேற்பைப் பெற்றிருக்கின்றன?’ எனத் தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் சர்வே எடுக்கப்பட்டதாம். “பட்ஜெட்டை விடுங்க… நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்த அடுத்த நாளே டாஸ்மாக் மதுபான விலையை உயர்த்தியது ஏமாற்றுத்தனமா... இல்லையா?” எனக் குடிமகன்கள் பலரும் கொந்தளித்தார்களாம். சர்வேயில் குடிமகன்களின் அதிருப்தியைக் குறிப்பிடுவதா வேண்டாமா எனத் தனியார் நிறுவனம் தயங்கிய நிலையில், குடிமகன்களின் அதிருப்தி குறித்து முதன்மையானவர் கவனத்துக்கு சீனியர் நிர்வாகிகள் சிலரும் தகவல் சொன்னார்களாம். அதனால், சர்வேயில் டாஸ்மாக் ஆதங்கத்தையும் சேர்த்து முதன்மையானவர் கவனத்துக்கு வைத்திருக்கிறார்களாம். #என்னைப் பார்த்து கோப்பை தள்ளாடும்... காசு தீர்ந்தாலே கண்ணீரும் கள்ளாகும்!

பம்பரக் கட்சியில் நடக்கும் பனிப்போருக்கு ஆளுங்கட்சியின் ராஜதந்திர வேலைகளும் காரணமோ என யோசிக்கிறாராம் கறுப்புத்துண்டு தலைவர். ‘பம்பரக் கட்சியை ஆளுங்கட்சியோடு இணைக்க வேண்டும்’ என்கிற கோரிக்கை வலியுறுத்தப்படுகிற பின்னணி குறித்து விசாரிக்கச் சொல்லியிருக்கிறாராம். அதேநேரம் மகனை முதன்மையானவரிடம் தனிப்பட்ட விதத்தில் பேசச் சொல்லியிருக்கிறாராம். கலகக்குரல் இன்னும் பல மாவட்டங்களில் பரவ வாய்ப்பிருப்பதாகத் தகவல் வந்ததால், முதன்மையானவர் மூலமாகவே அமைதிப்படுத்த முடியும் என நினைக்கிறாராம் கறுப்புத்துண்டுத் தலைவர். #ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா?!