Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

மயிலாடுதுறை போன பவன் புள்ளிக்கு எதிர்ப்பு தெரிவிக்க சிலர் ஒன்று திரண்டதை, மாவட்ட போலீஸும் உளவுத்துறையும் வழக்கமான ஒன்றாக நினைத்துவிட்டதுதான் இப்போது பெரும் சிக்கலாகியிருக்கிறது. போராட்டப் புள்ளிகளைத் தடுத்து, எவ்வித பிரச்னையும் ஏற்படாதபடி போலீஸ் பார்த்துக்கொண்டாலும், சிலர் கொடிகளைத் தூக்கி வீசிய விவகாரம் டெல்லியின் கவனம் வரை போய்விட்டது. ‘பவன் புள்ளியுடன் பனிப்போர் நிலவும் சூழலில், உளவுத்துறை இந்த அளவுக்குக் கோட்டைவிடலாமா?’ எனக் கொதித்துப்போனாராம் முதன்மையானவர். அதன் பிறகுதான் காக்கித் தரப்பில் விளக்க அறிக்கை வெளியானதாம். #‘டீக்கடைய தீக்கடையாக்கிட்டாய்ங்க’ மொமன்ட்!

கிசுகிசு

தனக்கு ஆதரவாக அணிந்துரை எழுதிய ஞானிக்கு, திடீரென ஒரு முக்கிய அழைப்பு. எடுத்துப் பேசியவருக்குத் தாங்க முடியாத ஆச்சர்யம். எதிர்முனையில் டெல்லியின் ஆளுமைப்புள்ளி. “உங்கள் பாராட்டை நான் பாக்கியமாக எண்ணுகிறேன். எனக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்ததால், உங்களுக்கு நிறைய எதிர்ப்பு எனக் கேள்விப்பட்டேன். நான் எப்போதும் உங்களுக்குத் துணையாக இருப்பேன்” என ஆளுமைப்புள்ளி சொல்ல, நெகிழ்ந்துபோய் நன்றி சொல்லியிருக்கிறார் ஞானி. இந்த உரையாடல் குறித்து இருவருமே வெளியில் சொல்லாமல் இருப்பதுதான் ஆச்சர்யம். #நீ பார்த்த ‘வேலை’க்கொரு நன்றி... நமைச் சேர்த்த சர்ச்சைக்கொரு நன்றி!

கிசுகிசு

‘இரண்டரைக் கோடியை ஏமாற்றிவிட்டார்கள்’ என முன்னாள் டி.ஜி.பி ஒருவர்மீது பரோட்டா காமெடி நடிகர் புகார் கொடுத்தார்; நீதிமன்றப் படியேறினார். நீதிமன்றமும் ஆறு மாத காலத்துக்குள் விசாரணையை முடிக்க உத்தரவிட்டது. முன்னாள் காவல்துறை அதிகாரிக்கு எதிரான புகார் என்பதால், நடிகரை அநியாயத்துக்கு இழுத்தடித்து விசாரிக்கிறதாம் போலீஸ். “விசாரணைக்காக அலைந்த நாள்களில் ஷூட்டிங் போயிருந்தால், இழந்த கோடிகளைச் சம்பளமாகவே பெற்றிருக்க முடியும்” என்கிறார்கள் விசாரணையை கவனிப்பவர்கள். மாஜி அதிகாரி கொடுக்கும் அழுத்தத்தினால்தான் இந்த அலைக்கழிப்பாம். #விசாரணையை எப்ப சார் முடிப்பீங்க? ஓவர்... ஓவர்...

கிசுகிசு

சமீபத்தில் ஆவடிப் பக்கம் போய், ஓர் எளிய குடிசை வீட்டில் கறிக்குழம்பு சாப்பிட்டார் முதன்மையானவர். “எளிய வீட்டில் சாப்பிட்டது உண்மை. ஆனால், அங்கே சமைத்த உணவைச் சாப்பிடவில்லை. ஹோட்டலிலிருந்து வரவழைக்கப்பட்ட உணவையே முதன்மையானவர் சாப்பிட்டார்” எனப் பரபரப்பு கிளம்பியது. உண்மையில், முதன்மையானவர் சாப்பிட்டது அந்த வீட்டில் சமைக்கப்பட்ட உணவைத்தானாம். யாரோ விஷமிகள் கிளப்பிவிட்ட தகவலைச் சில ஊடகமும் பரப்பியதில், முதன்மையானவருக்குக் கடுமையான வருத்தமாம். ‘நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த மில்க் மினிஸ்டர் இந்த மாதிரியான பரபரப்புகள் ஏதும் ஏற்படாமல் பார்த்திருக்க வேண்டுமல்லவா…’ எனக் கொதிக்கிறார்கள் சீனியர் நிர்வாகிகள். #கறிக்குழம்பு சாப்பிட்ட விவகாரம் காரசாரமா இருக்கே!

கிசுகிசு

அண்ணன் தலைவரின் புது இல்ல நிகழ்வுக்கு, சின்ன தலைவியின் சார்பில் விவேகமான வாரிசு அனுப்பிவைக்கப்பட்டாராம். மொத்த உறவுகளும் திரண்டிருந்த நிலையில், அனைவரையும் காக்கவைத்துவிட்டு அரை மணி நேரம் விவேகமான வாரிசிடம் மனம்விட்டுப் பேசிக்கொண்டிருந்தாராம் அண்ணன் தலைவர். ‘உடல்நலம் குறித்த விசாரிப்பு’ என வெளியே வந்து சொன்னாலும், கட்சி, எதிர்காலம் குறித்த பேச்சுவார்த்தையே நடந்ததாகக் காதைக் கடிக்கிறார்கள் தம்பிகள். #எதிர்காலம்னா ப்யூச்சர்தான பாஸ்?!

கிசுகிசு

“இடமாறுதலுக்கு ஒரு பைசாகூட லஞ்சம் வாங்கக் கூடாது என்பதில் கறாராக இருக்கிறார். சிபாரிசுகளை மதிக்காமல் தகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். ஆனால், ஓர் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு அது குறித்து அதிகாரிகளிடம் கலந்து பேசாமல் இஷ்டத்துக்குப் பேசி, குளறுபடிகளை உருவாக்கிவிடுகிறார். அதுதான் வேதனையாக இருக்கிறது” என, ‘சொல்லிக்கொடுக்கும்’ துறையின் அன்பான அமைச்சர் குறித்து ஆதங்கப்படுகிறார்கள் அதிகாரிகள். துறையில் புதுமைகளைச் செய்கிறேன் என்கிற பெயரில், நாளுக்கு நாள் புதுப்புது அறிவிப்புகளை வெளியிடும் அமைச்சர், தான் செய்வதெல்லாம் சரி எனத் தலையாட்டும் அதிகாரிகளை மட்டுமே அருகில் வைத்துக்கொள்கிறாராம். அதுதான் அமைச்சர் மீதான ஆதங்கமாக வெடிக்கிறதாம். #தலையாட்டம்மா... தலையாட்டு... அமைச்சர் சொல்றார் தலையாட்டு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism