Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

காவிக் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் மாஜி காக்கி என்பதால், காவல்துறை வட்டாரத்திலிருந்து அரசின் முக்கிய முடிவுகள் குறித்த தகவல்கள் அவர் கவனத்துக்குப் போய்விடுகின்றனவாம். அரசு ரகசியங்களைக் கசியவிடுகிற காக்கி அதிகாரிகள் யார் எனத் துருவத் தொடங்கியிருக்கிறது உளவுத்துறை. ‘என் தொலைபேசியை ஒட்டுக்கேட்கிறாங்க’ எனக் காவிக் கட்சித் தலைவர் சில நாள்களுக்கு முன் காரசாரம் காட்டிய பின்னணி இதுதானாம். #காதோடுதான் நான் பேசுவேன்... காக்கியோடுதான் உறவாடுவேன்!

கிசுகிசு

இலைக் கட்சிக்கான இரு ராஜ்ய சபா எம்.பி-க்கள் பதவியை, பணிவானவருக்கு ஒன்று, துணிவானவருக்கு ஒன்று எனப் பிரித்துக்கொண்டது பழைய கதை. இப்போது திடீரென இரண்டு பதவிகளுக்கும் தன்னுடைய ஆதரவாளர்களையே கொண்டுவர நினைக்கிறாராம் துணிவானவர். மொத்த எம்.எல்.ஏ-க்களின் ஆதரவும் தனக்கு மட்டுமே இருக்கிறது என்றும் சொல்கிறாராம். மீண்டும் பனிப்போர், பஞ்சாயத்து என இலைக் கட்சியில் ரகளை கிளம்ப வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். #இதுக்கு இல்லியா ஒரு எண்டு!?

கிசுகிசு

“ஆன்மிக விஷயங்களில் அரசு தலையீடு செய்யக் கூடாது” எனச் சமீபத்தில் சின்ன தலைவி மீடியாக்களிடம் பேசிய பேச்சு, ஆன்லைனில் வைரலானது. ஸ்ரீரங்கம் தொடங்கி திருவொற்றியூர் வடிவுடையம்மன் வரையிலான கோயில்களைச் சொல்லி, அங்கு எப்படியெல்லாம் வழிபாடு நடக்கும் என்பது வரையிலான விஷயங்களைச் சின்ன தலைவி விளக்கமாகப் பேச, காவிக் கட்சியின் தமிழகத் தலைவர்களுக்கு அது ரொம்பவே பிடித்துப்போய்விட்டதாம். விரைவில் ஆளும் அரசின் ஆன்மிகத் தலையீடுகளைக் கண்டித்து தனிக் கூட்டம் நடத்தத் திட்டமிட்டிருக்கும் காவிக் கட்சி, அதில் சிறப்பு அழைப்பாளராகச் சின்ன தலைவியைப் பங்கேற்க வைக்கவும் முடிவுசெய்திருக்கிறதாம். #ம்... குட் காம்பினேஷன்!

கிசுகிசு

‘தாலிக்குத் தங்கம்’ திட்டத்தைப்போலவே இலவச சைக்கிள் திட்டமும் நிறுத்தப்படப்போவதாகப் பரபரப்பு கிளம்பியது. இலவச சைக்கிள் திட்டம், கடந்த எட்டு மாதங்களாகத் தாமதமாவதற்குத் துறைரீதியான சில அதிகாரிகள்தான் காரணமாம். ஆனால், தாமதம் குறித்து யார் கேட்டாலும், கோட்டையின் முக்கிய அதிகாரி பெயரைச் சொல்லி, ‘ஃபைல் அங்கேதான் மூவ் ஆகாமல் இருக்கு’ என அநியாயப் பழிபோட்டார்களாம். இத்தனைக்கும் இலவச சைக்கிள் திட்டத்தைச் சீக்கிரமே நிறைவேற்ற வேண்டும் என உத்தரவு போட்டவரே அந்த முக்கிய அதிகாரிதானாம். ‘பாவம் ஒரு பக்கம்… பழி ஒரு பக்கமா?’ எனக் கொந்தளித்த முக்கிய அதிகாரி, ‘திட்டத்தை விரைவில் செயல்படுத்துங்கள்’ எனக் கறார் காட்டினாராம். #பார்த்து... சீக்கிரம் கொடுங்க பஞ்சராகிடப்போகுது... நான் சைக்கிளைச் சொன்னேன்!

கிசுகிசு

`கபடி’ படத்தில் நடித்த காக்கி அதிகாரியின் மகனுக்கும், பரோட்டா காமெடி நடிகருக்கும் இடையிலான பிரச்னையில் ஆளுங்கட்சி வாரிசுப்புள்ளியின் பெயர் பெரிதாக அடிபடுகிறது. இருவருக்கும் நெருக்கமான வாரிசுப்புள்ளி நினைத்திருந்தால், இது என்றைக்கோ தீர்வுக்கு வந்திருக்குமாம். ஆனால் சமாதானம், பேச்சுவார்த்தை என இழுத்தடித்த வாரிசுப்புள்ளி எந்தத் தீர்வையும் செய்து கொடுக்கவில்லையாம். காமெடி நடிகர் தேடிவந்து அணுகியபோது, நாள்கணக்கில் அவரை அலையவிட்ட வாரிசு, தன் கட்சிக்காரர்களைச் சந்திக்கச் சொல்லியும் போக்குக்காட்டினாராம். வாரிசை நம்பியே வருடங்கள் ஓடிய நிலையில்தான் போலீஸ், கோர்ட் என ட்ராக் மாறினாராம் காமெடி நடிகர். “அதான் கோர்ட்டுக்குப் போயிட்டீங்களே… அப்புறம் நான் எப்படி அதில் தலையிட முடியும்?” என இப்போது பக்காவாக பல்டி அடிக்கிறாராம் வாரிசு. #கட்சிக்காரன் கால்ல விழுறதுக்கு...

கிசுகிசு

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம் மிக விரைவில் நடக்கவிருக்கிறதாம். துறைரீதியான அதிகாரிகளைச் சமாளிக்க முடியாமல் திண்டாடும் அமைச்சர்கள் பலரும், தங்களுக்குத் தேவையான ஐ.ஏ.எஸ்-களின் பெயர்களை முதன்மையானவர் பார்வைக்கு எழுதிக் கொடுத்திருக்கிறார்களாம். தங்களுக்குவேண்டிய எஸ்.பி-க்களை நியமிக்கக் கோரி, மாவட்டச் செயலாளர்களும் அமைச்சர்களும் தொடர்ந்து வேண்டிவருகிறார்களாம். பல காலமாக இத்தகைய கோரிக்கைகளைக் கிடப்பில் போட்டுவந்த முதன்மையானவர், இப்போது இந்த விஷயத்தில் வேகம் காட்டச் சொல்லிவிட்டாராம். அதனால், அடுத்த சில நாள்களிலேயே அதிகாரிகள் மாற்றம் இருக்கும் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில். #ஸ்டார்ட் த மியூசிக்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism