அலசல்
சமூகம்
Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

ஆளுங்கட்சியின் சீனியர் மில்க் புள்ளிக்குச் சமீபத்தில் விருது அறிவித்து நெகிழவைத்தார் முதன்மையானவர். விருதாக மில்க் புள்ளி எதிர்பார்த்தது, தன் மகனுக்கு மந்திரி பதவியைத்தானாம். அது குறித்த கோரிக்கை பன்னெடுங்காலமாக பெண்டிங்கில் இருக்கும் நிலையில், அதிருப்தி மனநிலைக்குப் போய்விட்டாராம் மில்க் புள்ளி. அவரை சகஜமாக்கத்தான் விருது அறிவிப்பு வெளியிடப்பட்டதாம். இதற்காக முதன்மையானவரைச் சந்தித்து நன்றி சொன்ன மில்க் புள்ளி, அப்போதும் அமைச்சர் பதவி குறித்து நினைவூட்டினாராம். மில்க் புள்ளி அங்கிருந்து நகர்ந்த பிறகு மொத்தக் கூட்டமும் வயிறு வலிக்கச் சிரித்திருக்கிறது. #அழுதுக்கிட்டிருந்தாலும் உழுதுக்கிட்டிருக்கணும்!

கிசுகிசு

தமிழ்த் திரைப்பட விருதுகள் பல வருடங்களாக அறிவிக்கப்படாமல் இருந்தது குறித்தும், கடந்த ஆட்சியிலேயே விருது களுக்கான தங்கம் வாங்கி பத்திரப்படுத்திவைக்கப்பட்டிருப்பது குறித்தும் நம் ‘கிசு கிசு’ பகுதியில் எழுதியிருந்தோம். செய்தி முதன்மையானவரின் கவனத்துக்குப் போக, துறைரீதியான அமைச்சரிடம் விசாரித்தாராம். ‘இலைக் கட்சி ஆட்கள் அவர்களுக்கு ஆதரவான ஆட்களைத் தேர்வுசெய்து பட்டியல் ரெடி செய்திருக்கிறார்கள்’ என்றாராம் அமைச்சர். ஆனாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட விருதாளர்களை மாற்றாமல், அவற்றையே அரசின் தேர்வாக அறிவிக்கச் சொன்னாராம் முதன்மையானவர். இலைக் கட்சி, காவிக் கட்சிக்கு ஆதரவான பல ஆட்கள் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னணி இதுதானாம். #மாற்றான் தோட்டத்து மல்லிகைகளுக்கும் விருது உண்டு!

கிசுகிசு

இனிஷியல் தலைவருக்கு திடீரென வயிற்று உபாதை ஏற்பட, தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இலைக் கட்சியில் குளறுபடி நடக்கும் நிலையில், இனிஷியல் புள்ளி வேறேதும் வியூகம் வகுக்கிறாரோ எனப் பலரும் படபடக்கத் தொடங்கினார்கள். குறிப்பாக இலைக் கட்சியின் துணிவுப் புள்ளி, நீதிமன்ற விவகாரத்தைக் காட்டிலும் மருத்துவமனை குறித்த விஷயத்தைத்தான் அதிகம் விசாரித்தாராம். “இரண்டு மாதங்களாக வயிற்றுவலியால் இனிஷியல் புள்ளி படாதபாடுபட்டிருக்கிறார். வயிற்று உபாதை என்பது உண்மைதான்…” என நெருங்கியவர்கள் சொன்ன பிறகே, துணிவானவருக்கு நிம்மதி வந்ததாம். #அவருக்கும் கண்ணுல வந்துபோவுமா இல்லியா?!

கிசுகிசு

‘செப்டம்பர் 2 அன்று தீர்ப்பு’ எனத் தெரிந்தபோதே, தனக்கு எதிராகத்தான் வரும் எனச் சொன்னாராம் இலைக் கட்சியின் பணிவானவர். காரணம், அன்றைக்கு அவருடைய மீன ராசிக்கு சந்திராஷ்டமாம். அதனால், எதிரான தீர்ப்பு வந்தபோதும் எதிர்பார்த்த ஒன்றாகவே இருந்ததாம் பணிவானவருக்கு. மேல் முறையீடு போனாலும், சட்டரீதியான சாதகத்தை இனிப் பெற முடியாது என்பதையும் தெளிவாக உணர்ந்து வைத்திருக்கும் பணிவானவர் தரப்பு, தேர்தல் ஆணையத்தைத் தான் தீவிரமாக நம்புகிறதாம். காவிக் கட்சியின் மீடியேட்டர்களைச் சந்தித்து, லாபி வேலைகளையும் கையில் எடுக்கத் தொடங்கியிருக்கிறது பணிவுத் தரப்பு. #ஒன்பது கிரகங்களிலும் உச்சம் பெற்றவர் ஒருவர்... ஒருவர்..!

கிசுகிசு

‘போதைப்பொருள்களின் புழக்கத்துக்குக் காரணமே காவிக் கட்சிதான்’ என ஆளும் அரசின் சீனியர் அமைச்சர் சீற, முதன்மையானவருக்கே ஜர்க் ஆகிவிட்டதாம். காவிக் கட்சி குறித்த தாக்குதல் வாதங்களைப் பேசுவதற்கு முன்பு தன் கவனத்துக்குத் தெரிவிக்கும்படி அமைச்சர்களுக்கு உத்தரவே போட்டுவிட்டாராம் முதன்மையானவர். ‘பாராட்டவும் கூடாது; திட்டவும் கூடாது’ என்பதுதான் காவிக் கட்சி குறித்த ஆளும் அரசின் தற்போதைய நிலைப்பாடாம். #‘ஆணியே புடுங்க வேண்டாம்’ மொமன்ட்!