அரசியல்
அலசல்
Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

போக்கும் வரத்துமான துறையில், ‘டிரான்ஸ்ஃபர் தொடங்கி பலவிதமான சிபாரிசுகளுக்கும் முனிவர் பெயர்கொண்ட புள்ளி சொன்னால் போதும்’ என்கிறார்கள். சாதிரீதியான பாசத்தில், துறையின் அமைச்சர் முனிவர் புள்ளியை அநியாயத்துக்கு நம்புகிறாராம். ஆனால், ‘சமூக ஆர்வலர்’ அவதாரத்தில் முனிவர் புள்ளி வசூலில் சகட்டுமேனிக்கு விளையாடுவதாகத் துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குமுறிக் கொட்டுகிறார்கள். இத்தனைக்கும் கடந்த ஆட்சியிலும் இலைக் கட்சி ஆட்களோடு இதே டீல் வித்தைகளை விளையாடிப் பசை பார்த்தவராம் இந்த முனிவர் புள்ளி. ‘அமைச்சருக்கு இவரைப் பற்றிப் புரியலையே…’ என நொந்துகொள்கிறார்கள் அதிகாரிகள் தரப்பில். #முனிவர்னாலே சித்து விளையாட்டுகள்தானே!?

கிசுகிசு

‘ஆட்சிக்கு எதிராக என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளுங்கள். ஆனால், முதன்மையானவருக்கு எதிராக அடக்கி வாசியுங்கள்’ என அண்ணன் தலைவரிடம் இல்லத்து ஆட்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்களாம். “நான் பேசுறது அந்த அளவுக்கு அவருக்கு வலிக்குதா?” என அதையும் பெருமை பேசும்விதமாகவே விசாரித்தாராம் அண்ணன் தலைவர். ‘பேச்சுவார்த்தைக்கு’ இசைவு தெரிவிக்காமல், ‘இனி நாகரிகம் காக்கப்படும்’ என்று மட்டும் சொல்லி அனுப்பினாராம். பேச்சுவார்த்தைக்குப் போனவர்கள் முகம் சுருங்கி வெளியே வந்திருக்கிறார்கள். #யார் நாகரிகம்னு சொல்லவே இல்லையே... புஹாஹா!

காவிக் கட்சியில் கம்பீரமான நடிகைக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவெடுக்கப்பட்டிருக்கிறதாம். பல கட்சிகளுக்குப் போய் வந்த வகையில், அம்மணிக்கு அவ்வளவு நல்ல பெயர் இல்லாவிட்டாலும், தடாலடிப் பேச்சிலும் தைரியத்திலும் அவரை வியந்து பார்க்கிறதாம் டெல்லி தலைமை. இந்த விஷயம் காக்கி மாஜி தலைவருக்குத் தெரியவர, இவ்வளவு காலம் பட்டும்படாமல் இருந்தவர், இப்போது அம்மணியிடம் கட்சி குறித்த ஆலோசனைகளை நடத்துகிற அளவுக்கு இணக்கம் காட்டத் தொடங்கியிருக்கிறாராம். #றெக்க கட்டி பறக்குதய்யா..!

கிசுகிசு

‘இலைக் கட்சி மாஜிக்களில் நான்கு பேருக்கு மன்னிப்பே இல்லை’ எனச் சொல்லி அவர்கள் சம்பந்தமாக யார் பேச்சுவார்த்தைக்கு வந்தாலும் அதைத் தவிர்க்கும்படி சொல்லிவிட்டாராம் முதன்மையானவர். துணிவானவர், பெல் மாஜி, குட்கா புள்ளி, மஞ்சள் மாஜி ஆகியோர்தான் முதன்மையானவரின் ஹிட் லிஸ்ட்டில் இருக்கும் ஆட்களாம். இந்த நால்வர் செய்த, பேசிய கடந்தகால விஷயங்கள்தான் முதன்மையானவரை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்திவிட்டனவாம். சமீபத்தில் துணிவானவர் பேசிய பேச்சும் முதன்மையானவரை நிம்மதியிழக்க வைத்ததாம். அதனால்தான், சீனியர் இனிஷியல் புள்ளி மூலமாக வெளுக்கச் சொன்னாராம். சட்டரீதியான நடவடிக்கைகளையும் தீவிரமாக்கச் சொல்லியிருக்கிறாராம். #‘புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் அந்தாளை’ மொமன்ட்!

“டிசம்பர் மாதம் முடிசூட்டு விழா நிச்சயம். அதற்குள் திரைப்படங்கள் சம்பந்தமான வேலைகளை முடித்துக்கொள்’” எனப் பாசமான உத்தரவு போட்டாராம் அன்னை. ஆனாலும், அடுத்தடுத்து கதைகள் கேட்டுவருகிறார் வாரிசு. “பதவிக்கு வந்தால் இன்னும் பொறுப்பு கூடிவிடும். சினிமாவில் இருக்கும் நிம்மதி பதவியில் இருக்காது” என அதற்கு விளக்கமும் சொல்கிறாராம் வாரிசு. உடனிருக்கும் ஆட்களை வீட்டுக்கு வரவழைத்து, “அவர் மனதை மாற்றவேண்டியது உங்கள் பொறுப்பு” என எச்சரித்து அனுப்பினாராம் இல்லத்து அன்னை. #இதுவே என் கட்டளை... என் கட்டளையே சாசனம்!