அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

சட்டமும் சவடாலுமாகப் பேசும் மாஜியிடம் இடைவெளியைக் கடைப்பிடித்த இலைக் கட்சியின் துணிவானவர், அவரை வீட்டுக்கே வரவழைத்துத் தனி ஆலோசனை நடத்துகிற அளவுக்கு இப்போது நெருங்கியிருக்கிறார். தனக்கு நெருக்கமான வளையத்திலிருந்த சில மாஜிக்கள் சைலன்ட் மோடுக்குப் போனதால், தற்காப்பு நடவடிக்கையாக சவடால் மாஜியை அழைத்து மனமுருகப் பேசினாராம் துணிவானவர். சவடால் மாஜியின் கண்ணசைவில் இயங்கும் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கங்களைத் தாண்டுகிறதாம். அழைத்துப் பேசிய பின்னணிக்கு அதுவும் ஒரு காரணமாம். #பயப்படுறியா குமாரு?!

தீபாவளி நேரத்தில் தீ மற்றும் வெடி விபத்துகள் நேராதபடி தடுக்க, அதிகாரிகளைத் தீவிரமாக முடுக்கிவிட்டிருக்கிறாராம் கோட்டையின் உச்ச அதிகாரி. கடந்த ஆண்டு அடுத்தடுத்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியும், சில வெடி விபத்துகள் நிகழ்ந்ததைக் குறிப்பிட்டுக் காட்டி, “இந்த முறை எவ்வித அசம்பாவிதமும் நிகழாதபடி தடுத்துக் காட்டுங்கள்” எனச் சொல்லியிருக்கிறாராம். வெடிக் கடைகளுக்கு 30 விதிமுறைகளைப் பிறப்பித்து, தீயணைப்புத் துறை கெடுபிடி காட்டியதற்குக் காரணமே உச்ச அதிகாரி இந்த விஷயத்தில் காட்டும் அதீத அக்கறைதானாம். #சரவெடி!

கிசுகிசு

முதன்மையானவரிடம் நம்பர் ஒன் ஆளாக அபிமானம் பெற்றுவிடத் துடிக்கும் அணில் அமைச்சர், அதற்கான அனைத்து ரூட்டுகளையும் அணுகிவருகிறார். இனிஷியல் அமைச்சரைத் தாண்டி இல்லத்தை நெருங்குவது மட்டும் அணில் அமைச்சரால் முடியாத காரியமாக இருக்கிறதாம். காரணம், அள்ளி இறைக்கும் வித்தையில் அணில் அமைச்சரை விஞ்சக்கூடியவர் இனிஷியல் அமைச்சர் என்கிறார்கள். அதனால், ஆன்மிக ரூட்டில் வேண்டுதல், பூஜை, பிரசாதம் என இல்லத்து ஆசி பெற மெனக்கெடுகிறார் அணில் அமைச்சர். “பத்துப் பேர் பண்ணக்கூடிய வித்தைகளை இந்த ஒத்த ஆளு பண்றார்யா…” என இனிஷியல் அமைச்சரே சமீபத்தில் சொல்லிச் சிரித்தாராம். #‘என்னா ஒரு வில்லத்தனம்’ மொமன்ட்!

நாடாளுமன்ற நிலைக்குழு பதவிகளுக்கான ஒதுக்கீட்டில், தி.மு.க-வுக்குக் கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருப்பதை, சந்தேகக் கண்ணோடு பார்க்கிறது கதர்க் கட்சித் தலைமை. இதைவைத்தே குட்டையைக் குழப்பும் வேலையை லாகவமாகச் செய்யத் தொடங்கியிருக்கிறார் கதர்க் கட்சியின் ஆலோசனைப் புள்ளி. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் கூட்டணியை மாற்றிக் காட்ட சபதம் போட்டிருக்கும் ஆலோசனைப் புள்ளி, கதர்க் கட்சியின் வாரிசிடம் நிலைக்குழு விவகாரத்தை பூதாகரப்படுத்திச் சொல்லியிருக்கிறாராம். #வெள்ளச்சாமியண்ணே... விஷயம் தெரியுமா?

கிசுகிசு

ஆளுங்கட்சியின் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த முதன்மையானவர், ராகுகாலம் முடிந்து சரியாக 12:05 மணிக்கு வந்தார். முன்பெல்லாம் ‘நல்ல நேரம்’ குறித்து யார் சொன்னாலும் காதில் வாங்கிக்கொள்வதோடு நிறுத்திக்கொள்ளும் முதன்மையானவர், இப்போது அதைக் கடைப்பிடிக்கவும் தொடங்கியிருக்கிறார் என்கிறார்கள். ‘நான் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறேன். என்னை ஆதரியுங்கள்’ எனச் சம்பிரதாயமாகக் கட்சி நிர்வாகிகளிடம் பேசுவது வழக்கமாம். யார் யாரிடம் பேச வேண்டும் என்பதையும் நல்ல நேரம் பார்த்த ஆட்கள்தான் தீர்மானித்தார்களாம். #நீங்களுமா யுவர் ஆனர்?