அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

உறுமும் கட்சித் தலைவரின் பிறந்தநாள் விழா, சில நாள்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது. நேரில் போய் வாழ்த்திவிட்டு வந்தார் முதன்மையானவர். அவர் சென்ற பிறகும் தொடர்ந்த விழா நிகழ்வில், உறுமும் தலைவரை ‘வருங்கால முதல்வர்’ எனப் புகழ்ந்து பலரும் வாழ்த்து மழை பொழிந்தார்களாம். விஷயம் முதன்மையானவர் கவனத்துக்கு தாமதமாகச் சொல்லப்பட, அந்த நிகழ்வின் மொத்த வீடியோ பதிவையும் தன் பார்வைக்கு அனுப்பச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறாராம். #பாவம்... அவர் தூக்கத்தைக் கெடுக்கிறதே எல்லாருக்கும் வேலையாப் போச்சு!

கிசுகிசு

இலைக் கட்சியில் இருக்கும் செம்மையான சீனியர் புள்ளி, ஆரம்பத்தில் துணிவானவரைக் கடுமையாக எதிர்த்தவர். சின்ன தலைவியிடமே நேரடியாகச் சொல்லிவிட்டு, பணிவானவர் பக்கம் தாவியவர். என்ன மாய மந்திரம் நடந்ததோ… இப்போது துணிவானவருக்கு அநியாயத் துதி பாடுகிற ஆளாக மாறிவிட்டாராம். இத்தனைக்கும் துணிவானவர், செம்மையான சீனியருக்குப் பதவி, அங்கீகாரம் என எதையும் வழங்கவில்லையாம். ஆனாலும், துணிவானவருக்குத் தூணாக அவர் நிற்பதால், பசைக்கு மசிந்துவிட்டாரோ எனப் பேசுகிறார்கள் இலைக் கட்சி நிர்வாகிகள். #Money என்றால் மலையும் சரியும்!

கிசுகிசு

காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை, நிலைக்குழு பதவிக்கான விஷயத்தில் வஞ்சிக்கும் பா.ஜ.க தரப்பு, இலைக் கட்சியில் பணிவானவர் பக்கம் இருக்கும் புதிய எம்.பி-ஐ ஜவுளி மற்றும் திறன் மேம்பாட்டுக்குழு உறுப்பினராக நியமித்து ஆச்சர்யப்படுத்தி யிருக்கிறது. இதைவைத்து டெல்லியின் ஆதரவு தங்கள் பக்கம் இருப்பதாகப் பணிவானவர் தரப்பு சொல்ல, ‘அப்ப, உங்க பையனுக்கு வாங்கிக் கொடுத்திருக்கலாமே…’ எனச் சீண்டுகிறது எதிர்த் தரப்பு. உண்மையில் நிலைக்குழு பதவி கிடைக்காத வருத்தம் பணிவானவரின் வாரிசுக்கும் இருக்கிறதாம். #ராமன் ஆண்டாலும்... ராவணன் ஆண்டாளும்...

கிசுகிசு

தீபாவளிக்குள் காக்கி வட்டாரத்தில் சரவெடி வெடிக்கக் காத்திருக்கிறது என்கிறார்கள். பல அதிகாரிகளைத் தூக்கியடிக்க லிஸ்ட் ரெடியாகிவிட்டதாம். நிறைய விஷயங்களை உளவுத்துறை கோட்டைவிடுவதாக முதன்மையானவர் அதிருப்தியில் இருப்பதால், இடத்தைப் பிடிக்கப் பெரிய போட்டி நடக்கிறதாம். சி.பி.சி.ஐ.டி-யில் முக்கியப் பொறுப்பைக் கைப்பற்ற ஏற்கெனவே சிட்டியில் கோலோச்சிய அதிகாரி தீவிரமாகக் காய்நகர்த்திவருகிறாராம். பவரில் இருக்கும் பலர் டம்மியாகவும், டம்மியான இடத்தில் இருக்கும் பலர் பவருக்கும் வர வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். #இந்த விஷயமாவது உளவுத்துறைக்குத் தெரியுமா?

கிசுகிசு

காவிக் கட்சியின் தமிழகத் தலைவர் பதவியில் மாற்றம் வரப்போகிறது எனத் திடீர் பரபரப்பு கிளம்பியிருக்கிறது. மாஜி காக்கியை மாற்றிவிட்டு, கோவையின் பெண் புள்ளியை நியமிக்கப்போவதாகக் கட்சி வட்டாரத்துக்குள் குய்யோ முய்யோவானது. இதற்கிடையில் முக்குலத்து வாக்குகளை வளைக்கும்விதமாக இலைக் கட்சியிலிருந்து காவிக் கட்சிக்குள் கலந்து எம்.எல்.ஏ-வும் ஆகிவிட்ட நெல்லைப் புள்ளியைத் தலைவராக அறிவிக்கப்போவதாக அடுத்தகட்ட பரபரப்பு கிளம்பியது. இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில், பசும்பொன் குருபூஜைக்கு பிரதமர் மோடி தமிழகம் வரப்போவதாகக் கிளப்பிவிடப்பட்டது. அமெரிக்காவிலிருந்து தமிழகம் திரும்பிய மாஜி காக்கியை இந்த மொத்தச் சூறாவளியும் சூழ்ந்துகொள்ள, மனிதர் விளக்கம் சொல்லியே ஓய்ந்துபோனாராம். பரபரப்புகளைப் பற்றவைத்தவர்கள் கட்சிக்குள்ளேயே இருக்கும் உள்ளடி ஆட்கள்தானாம். ‘நாடாளுமன்றத் தேர்தல் வரை நான்தான் தலைவர்’ எனத் தனது ஆதரவாளர்களிடம் சொன்ன மாஜி காக்கி, பரபரப்பு கிளப்பியவர்களைக் கண்டுபிடிக்கும் வேலையில் தீவிரமாகியிருக்கிறாராம். #டீக்கடை தீக்கடை ஆன மொமன்ட்!