அரசியல்
அலசல்
Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

பழக் கட்சியின் இளைஞரணிப் பதவியை பெல் பிரமுகரின் மகனுக்குக் கொடுத்தது கட்சி வட்டாரத்துக்குள் கடுமையான சலசலப்பைக் கிளப்பியிருக்கிறது. இதில் தனக்குச் சிக்கல் வந்துவிடக் கூடாது என்பதற்காக, தனக்கும் தந்தைக்கும் இடையே பனிப்போர் நிலவுவதாக, தோட்டத்துத் தலைவரின் மகனே செய்தி பரப்புகிறாராம். கட்சிக்குள் எதிரொலிக்கும் `காச் மூச்’ சத்தங்களுக்கும், “போய் அவர்கிட்டயே கேளுங்க…” எனத் தந்தையைக் கைகாட்டுகிறாராம். ‘கட்சிப் பணிகளில் இறங்கி வேலை பார்க்காத ஒருவருக்கு இந்த அங்கீகாரம் தேவையா?’ எனக் கேட்டுக் கொந்தளிக்கும் நிர்வாகிகள் சிலர், அணி மாறி தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தவும் தயாராகிவிட்டார்களாம். #பாடுபட்ட பாட்டாளிகள் நாங்க... பழம் பறிக்குறது அவரா?

கிசுகிசு

தன்னுடைய பேச்சு, பரபரப்பாகவும் சர்ச்சையாகவும் மாறுவதை எப்போதுமே ரசித்து ஏற்றுக்கொள்ளும் வழக்கம் கொண்டவராம் பவன்காரர். ஆனால், சமீபத்திய அவருடைய பேச்சை உறுமும் கட்சித் தலைவர் சர்ச்சையாக்கி மன்னிப்பு கேட்கச் சொல்ல, அது குறித்து மட்டும் பதறிப்போனாராம். “நான் தாழ்த்தப்பட்டவர்களைக் குறைத்துப் பேசவில்லையே… பிறகு ஏன் இந்த விவகாரத்தைச் சர்ச்சையாக்குகிறார்?” என உறுமும் கட்சித் தலைவர்மீது ஆவேசப்பட்டாராம். போனில் தொடர்புகொண்டு பேச நினைத்தவரை அதிகாரிகள்தான் அமைதிப்படுத்தினார்களாம். #ஷாக்கைக் குறைங்க சார்!

கிசுகிசு

கஞ்சா உள்ளிட்ட போதை விவகாரங்களைத் தீவிரமாக ஒடுக்கும்படி, தொடர்ந்து சொல்லிவருகிறார் முதன்மையானவர். பன்னாடுகளிலிருந்து சென்னைக்குள் கடுமையாக ஊடுருவிவரும் போதைப் பரிவர்த்தனை குறித்து, சமீபத்தில் வாரிசுப்புள்ளி கொடுத்த விவரங்கள் முதன்மையானவரை அதிரவைத்தனவாம். போதையால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தனக்கு நெருக்கமான சில பெரிய இடத்து நண்பர்களின் நிலை குறித்தும் வாரிசு விளக்கினாராம். அதனால்தான் அதிகாரிகளைத் தனியே அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்துகிற அளவுக்கு முதன்மையானவர் தீவிரம் காட்டிவருகிறாராம். #ரொம்பத் தாமதம்!

கிசுகிசு

அடுத்தடுத்து பல விஷயங்களைக் கோட்டைவிட்டதால், உளவுத்துறையின் பவர்ஃபுல் அதிகாரி விரைவில் மாற்றப்பட வாய்ப்பிருக்கிறது என பலமாக செய்தி அடிபட்டது. காக்கி வட்டாரமும் அந்தப் பரபரப்பை உறுதிசெய்து, “எந்த நேரத்திலும் டிரான்ஸ்ஃபர் ஆர்டர் வரலாம்” என்றது. இந்த நிலையில் கோவை விவகாரத்தைவைத்து, கடுமையாகக் கொந்தளித்த காவிக் கட்சியின் மாஜி காக்கி, “உளவுத்துறை அதிகாரிகளின் தோல்வி” எனக் குற்றம் சாட்டினார். காவிக் கட்சி மாஜி காக்கி இந்த அளவுக்குக் கொந்தளித்த பின்னர்தான் சற்றே ஆசுவாசமாக மூச்சுவிடுகிறாராம் உளவுத்துறையின் பவர்ஃபுல் அதிகாரி. காரணம், இந்த நேரத்தில் டிரான்ஸ்ஃபர் செய்தால், காவிக் கட்சியின் மாஜி காக்கிக்குக் கிடைத்த வெற்றியாகிவிடும் என்பதால், மாற்றல் அறிவிப்பைக் கிடப்பில் போடச்சொல்லிவிட்டாராம் முதன்மையானவர். ‘காலக்கொடுமை’ எனத் தலையிலடித்துக்கொள்கிறார்கள் காக்கி வட்டாரத்தில். #‘நடக்குறதெல்லாம் நமக்குச் சாதகமாத்தான் இருக்குடா சூனாபானா’ மொமன்ட்!

கிசுகிசு

ஒருபோதும் கட்சி நிர்வாகிகளுக்கு தீபாவளிப் பரிசுப் ‘பசை’ கொடுத்து தி.மு.க உற்சாகப்படுத்தியது கிடையாது. ஆனால், இந்த முறை கிளைச் செயலாளர் வரையிலான நிர்வாகிகளுக்கு ஸ்வீட் பாக்ஸும், பசையும் பக்காவாக செட்டில் செய்யப்பட்டிருக்கின்றன. இதில் இளைஞரணி நிர்வாகிகளுக்குத்தான் தாங்க முடியாத வருத்தமாம். பெயரளவில்கூட அவர்களுக்கு எந்தவிதப் பட்டுவாடாவும் செய்யப்படவில்லையாம். விஷயம் வாரிசு கவனத்துக்குச் சொல்லப்பட, ‘கட்சிக்குப் பசை கொடுக்கும் இடத்தில் இருக்கிற இளைஞரணி நிர்வாகிகள், தீபாவளிப் பசைக்கு ஆசைப்படலாமா?’ என்ற எகிறலே பதிலாகக் கிடைத்ததாம். #கிச்சான்னாலே இளிச்சவாயன்தானே?!