அரசியல்
அலசல்
Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

நம்பவே முடியாத செய்தி… ஆனால், நம்பித்தான் ஆக வேண்டும். லாபத்தில் செழித்துக்கொண்டிருந்த தன் சினிமா நிறுவனத்தை நல்ல விலைக்கு விற்றுவிட்டார் சின்ன தலைவி. ‘இனியும் பசையைக் கண்ணில் காட்டாமல் இருந்தால், அடுத்தகட்டத்தை நோக்கி நகர முடியாது’ என ஆளாளுக்கு அறிவுரை பகர, அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியாமல் ரொம்பவே திண்டாடினாராம் சின்ன தலைவி. பல சொத்துகள் வழக்குகளில் சிக்கியிருப்பதால், எந்தச் சிக்கலும் இல்லாத சினிமா நிறுவனத்தை விலை பேசினாராம். இத்தனைக்கும் வாங்கிய காலத்திலிருந்து நல்ல லாபத்தைக் கொடுக்கிற நிறுவனம் அது. ஆனாலும், வேறு வழியில்லாமல் நிறுவனத்தைக் கைமாற்றி, செலவுக்கான பசையை ஏற்பாடு செய்திருக்கிறாராம். ‘இனி பசை பாயும்…’ என்கிறார்கள் உறவுகள் வட்டாரத்தில். #சின்ன மீனை இழப்பது... பெரிய மீன்களைப் பிடிக்கத்தானே?!

கிசுகிசு

வேண்டாம் விபரீதம்’ என முன்னாள் உளவுப் புள்ளி உஷார்படுத்திய பிறகே, தென் மண்டல விழாவுக்குச் செல்வதைத் தவிர்த்தாராம் இலைக் கட்சியின் துணிவுப் புள்ளி. பத்துக்கும் மேற்பட்ட மாஜிக்கள் உத்தரவாதம் கொடுத்து அழைத்தபோதும், முன்னாள் உளவுப் புள்ளி சொன்ன கருத்தையே ஏற்று விழாவுக்கு வராமல் விலகினாராம். ‘எதுவாயினும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என கெட்டப் மாஜி நம்பிக்கை கொடுக்க, ‘என்னால் உங்கள் சமூகத்து விழாவுக்குச் சிக்கல் வந்துவிடக் கூடாது’ எனச் சொன்னாராம் துணிவுப் புள்ளி. #அட வாங்க பாஸ்... பயந்தா தொழில் பண்ண முடியுமா?!

கிசுகிசு

ஆணையத்தால் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பட்டியலில் ஒருவராக இருந்தாலும், பழைய ஹெல்த் அதிகாரிக்கு அது குறித்த எந்தக் கவலையும் இல்லையாம். அடிக்கடி செனடாப் ரோடு வீட்டுக்குப் போய் ஆஜராகி, தன்னிலை விளக்கம் கொடுத்துவிட்டு வருகிற அவர், எப்போதும்போல் பவராகத்தான் இருக்கிறாராம். முதன்மையானவரைச் சந்திக்க முடியாவிட்டாலும், இல்லத்து ஆட்களைப் பார்த்து இன்முகம் காட்டிவிட்டு வருகிறாராம். அதிகாரிகள் தரப்பு குறித்த விஷயங்களை இல்லத்துக்கு வெட்ட வெளிச்சமாக்குவது இவர்தான் என்கிறார்கள். #சும்மாவா... சுனாமியிலயே சும்மிங்க போடுவாப்ல!

கிசுகிசு

அரசியலைத் தாண்டி சினிமாவில்தான் அதிக ஆர்வம் காட்டுகிறாராம் வாரிசு. பைக் நடிகர் படத்தின் தமிழ்நாடு ரைட்ஸை, அடக்கமான விலைக்குள் வாரிசு முடித்த சாமர்த்தியத்தைச் சொல்லிச் சொல்லி வியக்கிறார்களாம் பலரும். அதேநேரம் பைக் நடிகரின் படத்துக்குப் போட்டியாக ரிலீஸாகும் உச்ச நடிகரின் படத்தை அடக்கிவாசிக்க வைக்கும்விதமான வியூகங்களையும் அட்டகாசமாக வகுத்துக் கொடுத்திருக்கிறாராம் வாரிசு. #துணிவான வாரிசுதான்!

கிசுகிசு

கதர்க் கட்சியின் அகில இந்திய வழிகாட்டுதல்குழுவில், தமிழகத் தலைவரின் பெயர் இடம்பெறவில்லை. அதேநேரம் தன் மகன் மூலமாக உள்ளடி வேலை பார்த்த ரகசியத் தலைவரின் பெயர் இடம்பெற்றிருந்தது. இதனால், ‘நல்லதுக்கே காலம் இல்லை…’ என ரொம்பவே புலம்பத் தொடங்கிவிட்டாராம் தமிழகத் தலைவர். சந்தடி சாக்கில் யாரும் யூகிக்காத இருவர் தமிழகத்தின் சார்பில் இந்தக் குழுவில் இடம்பிடித்ததுதான் தமிழகத் தலைவரை ரொம்பவே ஆதங்கப்படவைத்துவிட்டதாம். #வேணாம்... அழுதுருவேன்!