Published:Updated:

குஷ்புவின் `கதர் டு காவி' அரசியல் வரலாறு!

குஷ்பு
குஷ்பு

`காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க-வில் இணையப்போகிறார் குஷ்பு' என்ற வதந்தியை உண்மையாக்கியிருக்கிறார் நடிகை குஷ்பு. திரையுலகிலிருந்து தமிழக அரசியல் வரையிலான அவரது பயணங்கள் குறித்த மீள்பார்வை இந்தக் கட்டுரை.

``காங்கிரஸ் கட்சியில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை; மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால், ஒரு ட்வீட்டுக்கு 2 ரூபாய் வாங்கிக்கொண்டு, `நான் பா.ஜ.க-வில் சேரப்போவதாக’ச் சிலர் வதந்தி பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்’’ என்று கடந்த வாரம் டெல்லியில் பேட்டி கொடுத்த குஷ்பு, இப்போது அதே டெல்லியில், பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறார்.

குஷ்பு
குஷ்பு

தமிழ்த் திரையுலகில், 80-களின் இறுதியில் இளம் கதாநாயகியாக அறிமுகமான குஷ்பு, 90-களில் முன்னணிக் கதாநாயகியாக வலம்வந்தார். கோயில் கட்டும் அளவுக்கு, கதாநாயகர்களுக்கு ஈடான ரசிகர்களைக்கொண்டிருந்தவர். திரையுலகில் பிரபலமாக இருந்தபோதே, அ.தி.மு.க ஆதரவு தொலைக்காட்சியான ஜெயா டி.வி-யில் 'ஜாக்பாட்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதோடு, சின்னத்திரை தொடர்களிலும் பிஸியான நடிகையாக வலம்வந்தார்.

இந்த நிலையில்தான், தமிழக அரசியலுக்குள்ளும் காலடி எடுத்துவைக்க நினைத்தார். ஜெயா டி.வி-யில் நிகழ்ச்சித் தொகுப்பு, ஜெயலலிதாவின் துணிச்சலைப் பாராட்டிப் பேசிய பேச்சுகள் என குஷ்புவின் செயல்பாடுகளைவைத்து அவரது அரசியல் ஈர்ப்பை கணித்தவர்கள், `அ.தி.மு.க-வில் இணைவார் குஷ்பு' என்று ஆரூடம் எழுதினர். ஆனால், அவரோ யாருமே எதிர்பாராதவகையில், தடாலடியாக தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

குஷ்பு
குஷ்பு

அங்கேயும்கூட, 2013-ம் ஆண்டில், கட்சியின் தலைமை குறித்து அவர் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறி, தி.மு.க தொண்டர்களாலேயே கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இதையடுத்து கட்சியிலிருந்து விலகியவர், 2014-ம் ஆண்டு ராகுல் காந்தி, சோனியா காந்தி முன்னிலையில் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார். தமிழ்நாட்டில், அப்போது மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்துவந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் தீவிர ஆதரவாளராகவும் தன்னைக் காட்டிக்கொண்டார்.

`நாட்டுக்கு எது நல்லது எனப் புரிந்தது; கொள்கை மாறவில்லை!’ - பா.ஜ.க-வில் இணைந்த குஷ்பு

இந்தநிலையில், தமிழக காங்கிரஸ் தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்குப் பிறகு பொறுப்பேற்றவர்கள், தன்னைப் பெரிதாக மதிக்கவில்லை என்ற மனக்குறை அவருக்குள் எழ ஆரம்பித்தது. இதை வெளிப்படுத்தும்விதமாக, ``காங்கிரஸ் கட்சியை நம்பி நான் இல்லை'', ``தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் என்னை மதிப்பதில்லை'' என்று தனது அதிருப்திகளை அவ்வப்போது பேட்டியாகக் கொடுத்துவந்தார்.

குஷ்பு
குஷ்பு

ஆனால், கட்சித் தரப்பிலோ, ``கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்தாலும்கூட, மாநில அளவிலான கட்சிச் செயல்பாடுகளில் அவர் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. தேர்தல் சமயங்களில் மட்டுமே தலைகாட்டுகிறார். மக்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான போராட்டக் களங்களில் கலந்துகொள்வதையே தவிர்க்கிறார்'' என்று குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.

ஆனால், குஷ்புவோ ``ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னாள் தலைவர் அல்ல... அவர்தான் எந்நாளும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்!'' என்றார் அதிரடியாக. மேலும், கட்சிக் கொள்கைகளுக்கு மாறான தனது தனிப்பட்ட கருத்துகளையும் ட்விட்டரில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.

குஷ்பு
குஷ்பு

`முத்தலாக் முறையால் முஸ்லிம் பெண்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இனியும் அதைப் பொறுத்துக்கொள்ள முடியாது' என்று கூறி `முத்தலாக் தடைச் சட்டத்தை'க் கொண்டுவந்தது மத்திய பா.ஜ.க அரசு. இந்தச் சட்டத்தை காங்கிரஸ் கட்சி மிகக் கடுமையாக எதிர்த்துவந்தபோதும், ``பெண்களின் உரிமையைக் காக்குவிதத்தில், முத்தலாக் முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும்'' என்று கூறி முத்தலாக் தடைச் சட்டத்தை ஆதரித்தார் குஷ்பு.

இது குறித்து, கடந்த 2017-ம் ஆண்டு விகடன் டிஜிட்டல் தளத்தில், ``முத்தலாக் விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிரான உங்களது கருத்தில் இப்போதும் உறுதியாக இருக்கிறீர்களா?’’ என்ற கேள்விக்கு பதிலளித்தவர்,

குஷ்பு
குஷ்பு

``நான் எப்போதும் கட்சிக்கு எதிராகப் பேசியதே கிடையாது. `மாற்றங்கள் வர வேண்டும். அந்த மாற்றங்களும் அந்தந்த மதங்களைச் சார்ந்தவர்களை அழைத்துப் பேசியே கொண்டுவரப்பட வேண்டும்’ என்றுதான் நாங்கள் எல்லோருமே சொல்லிவருகிறோம். இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில் ஏற்கெனவே அம்பேத்கர் தனியாக ஒரு சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறார். அதாவது, அவரவர் மத நம்பிக்கைகள் சார்ந்து முடிவு எடுக்கக்கூடிய உரிமைகள் மக்களுக்கு இருக்கின்றன. காலங்கள் மாறும்போது, மாற்றங்களும் வரும். அது எந்தவிதமான மாற்றம் என்பதை அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்'' என்றார்.

பா.ஜ.க-வின் அடிப்படைக் கொள்கைகளின் ஒன்றான, `பொது சிவில் சட்டம் சிறுபான்மையினரின் உரிமையைப் பறிக்கும் செயல்' எனக் கூறி எதிர்க்கட்சிகள் ஒருசேர எதிர்ப்பு குரல் எழுப்பிவந்த வேளையிலும், ஆதரவுக் குரல் கொடுத்து அனைவரையும் அதிரவைத்தார் குஷ்பு.

குஷ்பு
குஷ்பு

2019 தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியின் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி. ஆனாலும் `தலைவராக ராகுல் காந்திதான் மீண்டும் பொறுப்பேற்க வேண்டும்' என்ற ஆதரவுக் குரல்கள் கட்சிக்குள் பெரும்பான்மையாக இருந்துவரும் சூழலிலும், ``அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஜோதிராதித்ய சிந்தியா அல்லது சச்சின் பைலட் ஆகிய இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கலாம்’' என்று அதிரடியாகக் கருத்து தெரிவித்து கட்சியின் அகில இந்தியத் தலைமையின் வெறுப்பையும் சம்பாதித்தார்.

`மதிப்பு அப்படியே இருக்கும்!’- சோனியாவுக்குக் கடிதம்; காங்கிரஸிலிருந்து விலகிய குஷ்பு

அண்மையில், பா.ஜ.க கொண்டுவந்திருந்த `புதிய கல்விக் கொள்கை'யின் மும்மொழித் திட்டம் தமிழ்நாட்டில் கடும் கொந்தளிப்பு சூழலை உருவாக்கியிருக்கும் நிலையிலும்கூட, புதிய கல்விக் கொள்கை, மும்மொழித் திட்டத்தை வரவேற்று ட்விட்டரில் பதிவிட்டார் குஷ்பு.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கு மாறான அவரது கருத்துகள் மாநிலத் தலைமைக்கு கடும் கோபத்தை வரவழைத்தது. `காங்கிரஸில் கருத்து சுதந்திரம் உண்டு. கட்சியின் அமைப்புக்குள் பேசினால் அதற்கு வரவேற்பு உண்டு. வெளியில் பேசினால், அதன் பெயர் முதிர்சியின்மை. விரக்தி, ஒழுக்கமின்மையிலிருந்து வருகிறது. விரக்திக்குச் சிறந்த மருந்து யோகா!' என்று ட்விட்டரிலேயே காரசார பதிலடி கொடுத்தார் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி.

ஆனால், இப்படிச் சொந்தக் கட்சிக்குள்ளாகவே அவர் தெரிவித்துவரும் எதிர்க் கருத்துகள் குறித்த கேள்விகள் எழும்போதெல்லாம், `அது என்னுடைய நேரடியான கருத்து இல்லை' என்றோ அல்லது `இது என்னுடைய தனிப்பட்ட கருத்து' என்றோ வார்த்தை ஜாலங்களினால் தன் நிலைப்பாட்டை நியாயப்படுத்திவந்தார் குஷ்பு.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

சொந்தக் கட்சிக்குள்ளாகவே கலகக் கருத்துகளை வெளியிட்டுவந்தவர், எதிர்க்கட்சியான பா.ஜ.க-வை விட்டுவைப்பாரா என்ன... பா.ஜ.க-வையும் அதன் தலைவர்களையும் மிகக் கடுமையான வார்த்தைகளால் வதம் செய்தார்.

``தாம்பரத்தைத் தாண்டினா தாமரைன்னா என்னன்னு யாருக்கும் தெரியாது'' என்று சில வருடங்களுக்கு முன்னர் கிண்டலடித்தவர், பா.ஜ.க-வின் தேசியச் செயலாளரான ஹெச்.ராஜாவைப் பற்றிக் குறிப்பிடும்போது, ``ஹெச்.ராஜா லெவலுக்குப் பேச வேண்டுமென்றால், பாதாளச் சாக்கடையில் இறங்கி நின்றுதான் பேச வேண்டும்'' என்று நேரடியாகப் போட்டுத் தாக்கியிருந்தார். அண்மையில், ஜூனியர் விகடனுக்கு அவர் அளித்திருந்த பேட்டியில், ``ஹெச்.ராஜாவுக்கு பதில் கொடுப்பது என் கௌரவத்துக்கு இழுக்கு” என்று `கெத்து' காட்டியிருந்தார்.

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

பிரதமர் நரேந்திர மோடி குறித்துப் பேசும்போது, ``பிரதமர் மோடி, ஆடம்பரமாக 10 லட்சம் ரூபாய் செலவில் ஆடை அணிகிறார்; உலகம் சுற்றும் வாலிபராக இருக்கிறார். மோடி மஸ்தான் வேலை காட்டி, ஆட்சியைப் பிடித்தவர் நரேந்திர மோடி'' என்றெல்லாம் கடந்த காலங்களில், மிகக் கடுமையான வார்த்தைகளில் விளாசியிருக்கிறார் குஷ்பு.

`மதிப்பு அப்படியே இருக்கும்!’- சோனியாவுக்குக் கடிதம்; காங்கிரஸிலிருந்து விலகிய குஷ்பு

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இதுநாள்வரை தன்னை ஒரு பகுத்தறிவாளராகக் காட்டிவந்தவர் குஷ்பு. மேலும், `நான் ஒரு பெரியாரிஸ்ட்' என்று வெளிப்படையாகவே அறிவித்துக்கொண்டவர். `பெரியார்' திரைப்படத்தில் மணியம்மை பாத்திரத்தில் தான் நடித்திருந்ததைப் பற்றிப் பேசும்போது, அதைத் தனது திரையுலக வாழ்வின் பெருமையாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

சத்யராஜ்-குஷ்பு
சத்யராஜ்-குஷ்பு

காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கருத்துகளை அவர் தெரிவித்தபோதெல்லாம், `பா.ஜ.க-வில் இணைகிறார் குஷ்பு' என்ற செய்திகள் படபடக்கும். ஆனால், `காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கு மாறாக எனது தனிப்பட்ட கருத்துகளை நான் தெரிவிப்பதாலேயே பா.ஜ.க-வில் நான் இணையப்போவதாக எண்ணிவிடாதீர்கள். அது ஒருபோதும் நடக்காது' என்று திட்டவட்டமாகப் பேசிவந்தவர் குஷ்பு.

Vikatan

இயல்பாகவே முற்போக்குச் சிந்தனைகளைக்கொண்டிருந்த குஷ்பு, இந்துத்துவா அரசியலை முன்னிறுத்தும் பா.ஜ.க-வில் தற்போது அடைக்கலமாகியிருப்பது, பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

குஷ்பு
குஷ்பு

இப்போதும்கூட, 'குஷ்புவின் கணவர் சுந்தர்.சி-க்கு பணப் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. கணவர் கொடுத்த அழுத்தத்தினாலேயே அவர் பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறார்' என்றெல்லாம் காங்கிரஸ் தலைவர்களே பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், உண்மை என்னவென்பதை குஷ்புதான் வாய் திறந்து சொல்ல வேண்டும்!

அடுத்த கட்டுரைக்கு