Published:Updated:

இஸ்லாமியர்களை அவமதித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி! வலுக்கும் எதிர்ப்பு

இடைத்தேர்தல் பணிக்காக நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் முகாமிட்டுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மனு அளிக்கச் சென்ற இஸ்லாமிய இளைஞர்களை அவமதித்து அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் காரணமாக தமிழகம் முழுவதும் அமைச்சருக்கு எதிராகப் போராட்டங்கள் நடக்கத் தொடங்கியுள்ளன.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. காங்கிரஸும் அ.தி.மு.க-வும் நேரடியாக மோதிக்கொள்ளும் இந்தத் தொகுதியில் 15 அமைச்சர்கள் முகாமிட்டுத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பால்வளத்துறை அமைச்சரான ராஜேந்திர பாலாஜிக்கு களக்காடு ஒன்றியத்தின் வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

களக்காடு ஒன்றியம் கேசவனேரி கிராமத்துக்கான பொறுப்பும் ராஜேந்திர பாலாஜியிடம் கொடுக்கப்பட்டிருந்தது. அதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஜமாத் தலைவர் முகமது ஷெரிப் என்கிற ஃபைசல் உள்ளிட்ட சிலர், அமைச்சரை சந்தித்து தங்கள் பகுதியில் ரேஷன் கடை அமைத்துத் தருமாறு மனு அளிக்கச் சென்றுள்ளனர்.

மனு அளிக்கச் சென்றவர்களிடம் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாய மக்களையும் அவமதிக்கும் வகையில் அவர் பேசியுள்ளார். அத்துடன், தமிழகத்தின் ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களையும் காஷ்மீரத்தில் நடந்தது போல செய்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளார். அதற்கு, தமிழகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமிய சமுதாயத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்ததுடன், போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

ஜமாத் நிர்வாகிகளின் கோரிக்கை மனு
ஜமாத் நிர்வாகிகளின் கோரிக்கை மனு

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என்னதான் பேசினார் என்பது குறித்து களக்காடு ஒன்றியம் கேசவனேரி பகுதியின் ஜமாத் தலைவர் முகமது ஷெரிப் என்கிற ஃபைசலிடம் பேசினோம். “அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இந்தப் பகுதியில் தங்கியிருந்து வாக்கு சேகரித்துவருகிறார். 18-ம் தேதி இந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் எங்களிடம் வந்து, ‘அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உங்களைச் சந்திக்க விரும்புகிறார். ஜமாத் சார்பாக அவரைச் சந்தித்து கோரிக்கை மனுவைக் கொடுங்கள்’ என்றார்.

நாங்கள் அவரிடம், ‘எங்களுக்கு பள்ளிவாசல் தொடர்பாக எந்தக் கோரிக்கையும் கிடையாது. ஆனால், இந்தப் பகுதியில் இருக்கும் இஸ்லாமிய மற்றும் தலித் மக்கள், ரேஷன் கடை இல்லாததால் மிகுந்த சிரமப்படுகிறார்கள். கேசவனேரி, கீழ கேசவனேரி, கட்டார்குளம் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ரேஷன் கடைக்கு நான்கு கிலோமீட்டர் தூரம் செல்லவேண்டியதிருக்கிறது. அதனால் எங்கள் பகுதியில் ஒரு கடை அமைத்துக் கொடுக்க மனு அளிக்கிறோம்’ என்று சொன்னோம்.

எங்களைச் சந்தித்து கோரிக்கைகள் குறித்துக் கேட்க அமைச்சர் விரும்புவதாகச் சொன்னதாலேயே அவரைச் சந்திக்கச் சென்றோம்.
ஜமாத் நிர்வாகிகள்

அதன்படி நானும் எங்கள் ஜமாத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் அமைச்சரை சந்திக்கச் சென்றோம். மனுவையும் தயாராக எழுதி வைத்திருந்தோம். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அருகில் உள்ள கருவேலங்குளத்தில் தங்கியிருப்பதால் அங்கே சென்றோம். ஒரு மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருந்த நிலையில், மாடியிலிருந்து இறங்கிய அமைச்சர், எங்களைக் கண்டுகொள்ளாதது போல நேராக காருக்குச் சென்று விட்டார். அப்போது, எங்களை அங்கு அழைத்துச்சென்றவர், அமைச்சரிடம் சென்று நாங்கள் வந்திருக்கும் விவரத்தைச் சொன்னார்.

எங்களைப் பார்த்ததும் காரில் இருந்தபடியே திடீரென ஆத்திரத்துடன் கத்தத் தொடங்கினார். ‘முஸ்லிம்கள் எங்களுக்கு ஓட்டுப்போட மாட்டீங்களே... நாங்க ஏன் உங்களுக்கு உதவி செய்யணும்? யாருக்கு ஓட்டுப் போட்டீங்களோ அவங்கள்ட்டயே மனுவைக் குடுங்க. நீங்க ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த தி.மு.க எம்.பி ஞானதிரவியத்திடம் மனுவைக் கொடுங்க. நீங்களும் ஓட்டுப்போட மாட்டீங்க. கிறிஸ்டினும் எங்களுக்கு ஓட்டுப் போட மாட்டான். பிஷப், பாதிரியார்கள் எல்லோரையும் கூப்பிட்டுச் சொல்லிடுவாங்க. நீங்க ரெண்டு பேரும் எங்களுக்கு ஓட்டுப் போட மாட்டீங்க. அப்புறம் ஏன் உங்களுக்கு நான் செஞ்சு தரணும்?

அமைச்சரைச் சந்திக்கச் சென்றவர்கள்
அமைச்சரைச் சந்திக்கச் சென்றவர்கள்

பி.ஜே.பி கூட்டணியில் நாங்க இருக்கிறதால தமிழ்நாட்டில் மோடி ஆட்சி செய்யுற மாதிரி நீங்க நினைக்கிறீங்க. இப்படி நீங்க எங்களைப் புறக்கணிச்சா ஜம்மு-காஷ்மீர்ல உங்களை ஒதுக்கி வச்சது மாதிரி இங்கேயும் ஒதுக்கிவைக்க வேண்டியிருக்கும்’’ என்று சரமாரியாகப் பேசினார். மனுவைக் கையால்கூட தொட மறுத்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த நாங்கள், அங்கிருந்து வந்துவிட்டோம்’’ என்று அந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.

இந்த விவகாரம், இஸ்லாமிய மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் அப்துர் ரஹ்மான், ‘’இஸ்லாமியர்கள், பல சந்தர்ப்பங்களில் அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக வாக்களித்து வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள். ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்தபோது, அ.தி.மு.க -வுக்கு ஆதரவாகப் பெருவாரியான முஸ்லிம்கள் இருந்தார்கள்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, அ.தி.மு.க கூட்டணியில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் இருந்தன. ஆனால், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இஸ்லாமிய சமுதாயத்தினர் எப்போதுமே அ.தி.மு.க-வுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதுபோன்ற தோற்றத்தை உருவாக்கும் வகையில் பேசியிருக்கிறார்.

பொறுப்பு மிகுந்த பதவியில் இருக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. காஷ்மீரைப் போல இங்குள்ள முஸ்லிம்களையும் ஒதுக்கிவைப்போம் என்று அவர் கூறியிருப்பது சிறுபான்மை மக்களை அச்சப்படுத்தக்கூடிய செயலாகவே பார்க்கவேண்டியதிருக்கிறது.

பொறுப்பு மிகுந்த அமைச்சரே இப்படி பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.
அப்துர் ரஹ்மான், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

அமைச்சர் ஒருவர் இதுபோன்று பேசுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. மக்கள் பிரதிநிதியான அவர், வாக்களித்த மக்களுக்கு மட்டும் அல்லாமல் வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்தே அமைச்சராக இருக்கிறார். அதனால் அனைவருக்கும் பொதுவாகச் செயல்பட வேண்டுமே தவிர, குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராகப் பேசுவது கண்டிக்கத்தக்கது.

அரசியல் பரபரப்புக்காக அவர் இதுபோன்று தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிவருகிறார். அவரது நடவடிக்கை காரணமாக சமூக நல்லிணக்கம் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருடைய அமைச்சர் பதவியைப் பறிக்க வேண்டும்’’ என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

நெல்லையில் எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்
நெல்லையில் எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், எஸ்.டி.பி.ஐ போன்ற அமைப்புகளும், மனிதநேய மக்கள் கட்சித் தலைவரான பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், மனிதநேய ஜனநாயக கட்சியின் எம்.எல்.ஏ -வான தமீமுன் அன்சாரி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும் அமைச்சரைக் கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டுவருகின்றனர். எஸ்.டி.பி.ஐ அமைப்பின் சார்பாக பல்வேறு நகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

`பாகிஸ்தான் செய்யும் வேலையை எதிர்க்கட்சிகள் செய்கின்றன!' - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி