Published:Updated:

இரண்டு தேர்தல்களும் இடியாக வந்த சோதனைகளும்... சாகும் வரை சாதித்த ஜெயலலிதா! அரசியல் அப்போ அப்படி-8

2001-ம் ஆண்டு அரசியல் களம் ஜெயலலிதாவுக்குச் சாதகமாக மாறியது. ஆனாலும், அந்தத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட முடியாத நிலை. காரணம், ஜெயலலிதா மீது தொடரப்பட்ட டான்சி வழக்கு.

அரசியலில் எத்தகைய தோல்வியிலிருந்தும் மீண்டு வர வேறு எந்த குணம் இருக்கிறதோ இல்லையோ, `மீண்டு விடலாம்’ என்ற தளராத தன்னம்பிக்கையும், அதை அடைவதற்கான போராட்டக்குணமும் கட்டாயம் தேவை. அத்தகைய குணநலன்களைக்கொண்டிருந்த தமிழக அரசியல் தலைவர்களில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் ஒருவர்.

1991 முதல் 1996 வரையிலான அவரது தலைமையிலான அதிமுக ஆட்சி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளும், அதிகார துஷ்பிரயோகப் புகார்களும் அன்றைய பத்திரிகைகளில் பரபரப்பாகப் பேசப்பட்டவை. ஆட்சி முடிவடையும் தறுவாயில் அதிமுக அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர்களுக்கு மட்டுமல்லாமல், ஜெயலலிதாவுக்குமே ஒரு விஷயம் நன்றாகத் தெரியவந்தது, அது, அடுத்த தேர்தல் நிச்சயம் அதிமுக-வுக்கு வெற்றி வாய்ப்பு இல்லாததாகத்தான் இருக்கும். அது மட்டுமல்லாமல், அடுத்து வரும் நாள்களில் கடும் சோதனைகளையும் நெருக்கடிகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதுதான்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

அவர் கணித்தபடியேதான் நடந்தது. 1996 சட்டசபைத் தேர்தல் பிரசாரத்துக்குச் சென்ற அதிமுக அமைச்சர்களில் பெரும்பாலானோர், தாங்கள் போட்டியிடும் தொகுதிகளுக்குள்ளேயே ஓட்டுக் கேட்டுச் செல்ல முடியாத அளவுக்கு மக்கள் எதிர்ப்பு. விளைவு, அந்தத் தேர்தலில் அதிமுக படுதோல்வியடைந்தது. அமைச்சர்கள் அனைவருமே மண்ணைக் கவ்வினர். அவ்வளவு ஏன், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவே, தான் போட்டியிட்ட பர்கூர் தொகுதியில் தோல்வியடைந்தார். திமுக கூட்டணி மகத்தான வெற்றியுடன் ஆட்சியில் அமர்ந்தது.

நெருப்பாற்றில் நீந்திய காலம்

ஜெயலலிதாவுக்கு அப்போதிருந்து தொடங்கிய சோதனைக்காலம், 2001 சட்டசபைத் தேர்தல் முடியும் வரை நீடித்தது. அரசியல் தலைவர்களின் மேடைப் பேச்சுகளில் ஒரு சொற்றொடர் மிகவும் பிரபலம். அது, ``நெருப்பாற்றில் நீந்தி வந்தேன்"என்பதுதான் அது. அந்தச் சொற்றொடர் அந்தக் காலகட்டத்தில் ஜெயலலிதாவுக்கு ரொம்பவே பொருத்தமாக அமைந்தது. ஆம், அந்த ஐந்தாண்டு காலத்தையும் அவர் நெருப்பாற்றில் நீந்தியதைப் போன்றுதான் கடந்துவந்தார்.

1996, மே மாதம் நடந்த தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சி அமைத்த உடனேயே, ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர்களின் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க, மூன்று தனிச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. ஜெயலலிதா மற்றும் பல அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன. ஜெயலலிதாவே டிசம்பர் 7, 1996-ம் ஆண்டு ஊழல் வழக்குகளில் கைதுசெய்யப்பட்டார். பின்னர், ஜனவரி 3, 1997-ல் ஜாமீனில் விடுதலையானார். ஒவ்வொரு வழக்கு விசாரணையின்போதும், நீதிமன்றங்களின் நெடிய படிக்கட்டுகளில் ஏறி இறங்கினார். ஜெயலலிதா நீதிமன்றத்துக்கு வந்து செல்வது, பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் தலைப்புச் செய்திகளாகின.

ஜெயலலிதா
ஜெயலலிதா

இது ஜெயலலிதாவைக் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. அ.திமு.க-வினரும் மனதளவில் சோர்ந்துபோயினர். பல சமயங்களில், ஜெயலலிதா வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்துக்கு வராமல் வாய்தா வாங்கினார். ஆனாலும் சில விசாரணைகளின்போது, ``கட்டாயம் ஆஜராகியே தீர வேண்டும்" என நீதிபதிகள் கடுமை காட்டினர். அத்தகைய தருணங்களில் ஜெயலலிதா மன வருத்தத்துடனும் மன உளைச்சலுடனும் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டுத் திரும்புகையில், தொலைக்காட்சிச் செய்தியாளர்கள் அவரிடம் அது குறித்து கருத்து கேட்டு, மைக்கை நீட்டினால் சமயங்களில் அவர் அனல் கக்கினார். குறிப்பாக, தி.மு.க ஆதரவு தொலைக்காட்சிச் செய்தியாளர்கள், அப்படிப் பல முறை ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளாகி, வாங்கிக் கட்டிக்கொண்டனர்.

தடைக்கற்களை விலக்கவைத்த தன்னம்பிக்கை

இத்தகைய சூழலில் முன்னணி வழக்கறிஞர்களைக் களமிறக்கி மேற்கொண்ட சட்டப் போராட்டத்தின் பலனாக, சொத்துக்குவிப்பு வழக்கு தவிர, கிட்டத்தட்ட மற்ற அனைத்து வழக்குகளிலிருந்தும் ஜெயலலிதா விடுதலை ஆனார்.

இந்தப் போராட்டம் ஐந்தாண்டுக் காலத்துக்கு நீடித்த நிலையில், 2001 சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா சுதாரித்தார். இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவில்லையென்றால், தனது அரசியல் வாழ்க்கை அவ்வளவுதான் என்பதை உணர்ந்துகொண்ட ஜெயலலிதா, முந்தைய தேர்தலில் எத்தகைய கூட்டணி உத்தியைப் பின்பற்றி தி.மு.க ஆட்சியைப் பிடித்ததோ, அதே உத்தியை 2001 தேர்தலில் பின்பற்ற முடிவு செய்தார்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

சூழலும் அப்போது மெல்ல மெல்ல அவருக்குச் சாதகமாக மாறத் தொடங்கி இருந்தது. முந்தைய தேர்தலில் தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்திருந்த த.மா.கா., கம்யூனிஸ்ட் கட்சிகள் தி.மு.க மீது அதிருப்தியில் இருந்தன. இருப்பினும், அவர்கள் ஜெயலலிதா மீதான ஊழல் குற்றச்சாட்டுக் காரணமாக அ.தி.மு.க பக்கம் நெருங்கத் தயக்கம் காட்டிவந்தனர். லட்சியத்தை நோக்கி நம்பிக்கையுடன் நடக்கத் தொடங்கினால் வெற்றிக்கான வெளிச்சம் தென்படும்தானே..?

ஜெயலலிதாவுக்கும் அது நடந்தது. தடைக்கற்கள் விலகத் தொடங்கின.

நிலைமையைப் புரிந்துகொண்டு ஈகோ பார்க்காமல், த.மா.கா தலைவர் ஜி.கே.மூப்பனார் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் தானே முதலில் வலிய பேசி, கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினார். இதைப் பார்த்து பா.ம.கா-வும், காங்கிரஸ் கட்சியுமே அ.தி.மு.க கூட்டணியில் சேர முன்வந்தன. அவ்வளவுதான், தி.மு.க-வுக்கு எதிராக பலமான கூட்டணி உருவானது. எந்த அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைப்பதை எதிர்த்து 1996-ல் த.மா.கா உருவானதோ, அதே த.மா.க-வை தனது கூட்டணிக்குள் கொண்டு வந்ததிலிருந்தே ஜெயலலிதாவின் வியூகம் அவருக்கு இந்தத் தேர்தலில் வெற்றியைத் தேடித்தரலாம் என்ற நம்பிக்கை விதையை அ.தி.மு.க-வினரிடையே ஊன்றியது. விளைவு, அவர்களும் உற்சாமாகக் களம் இறங்கினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கருணாநிதிக்கு எதிரான அஸ்திரம்

அதேசமயம், 1996 - 2001 வரையிலான தி.மு.க-வின் ஆட்சி சிறப்பாகவே இருந்தது. 1999-ம் ஆண்டு நடந்த தாமிரபரணி கலவரம் உள்ளிட்ட ஓரிரு குற்றச்சாட்டுகளைத் தவிர பெரிய அளவிலான குற்றச்சாட்டுகள் எதுவும் தி.மு.க ஆட்சி மீது இல்லை. இதனால், மீண்டும் தி.மு.க-வுக்கே மக்கள் வாக்களிப்பார்கள் என்ற அதீத நம்பிக்கையில், கூட்டணி அமைப்பதில் கோட்டைவிட்டார் கருணாநிதி.

விளைவு 2001 அரசியல் களம் ஜெயலலிதாவுக்குச் சாதகமாக மாறியது. ஆனாலும், அந்தத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட முடியாத நிலை. காரணம், ஜெயலலிதா மீது தொடரப்பட்ட டான்சி வழக்கில் அவருக்கு மூன்று ஆண்டுகளும், கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே வழக்கில் இரண்டு ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. மேல் முறையீடு செய்யப்பட்டு, ஜாமீனில் இருந்தாலும், சட்டப்படி மூன்று ஆண்டுகள் தண்டனை பெற்றவரது வேட்புமனு நிராகரிக்கப்படும்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

என்ன செய்வது என்று யோசித்தார் ஜெயலலிதா. `இத்தனை போராடியாயிற்று இனியும் போராடிப் பார்த்துவிடுவோம்... வெற்றிக்கனி கையில் எட்டும் தூரத்தில் இருக்கையில், அதை எப்படிக் கைகொள்ளாமல் இருப்பது..?’ எனத் தீர்மானித்த அவர், இந்தியாவின் முன்னணி சட்ட நிபுணர்களையெல்லாம் வரவழைத்து கலந்தாலோசித்தார். அவர்கள் தலையணை சைஸ் கொண்ட தடிமனான சட்டப் புத்தகங்களையெல்லாம் பக்கம் பக்கமாகப் புரட்டி, தங்களுக்குத் தெரிந்த சட்ட பாயின்ட்டுகளையெல்லாம் தூக்கிப்போட்டு, ``பார்த்துக் கொள்ளலாம், வேட்புமனுவைத் தாக்கல் செய்யுங்கள்" என்ற ரீதியில் சொன்னார்கள். ஆனால் ஜெயலலிதாவோ, ``இந்த 'பார்த்துக்கொள்ளலாம்...’ என்ற சமாசாரமெல்லாம் எனக்கு வேண்டாம். தாக்கல் செய்யலாமா, வேண்டாமா அதை மட்டும் தெளிவாகச் சொல்லுங்கள்" எனக் கேட்டார். அவர்கள் மென்று முழுங்கியபடியே, `` வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது" எனத் தயங்கி தயங்கிச் சொன்னார்கள்.

அதைக் கேட்ட ஜெயலலிதா, `` ஆல் ரைட். விடுங்கள் பார்த்துக்கொள்ளலாம்" என்றபடியே இன்னும் சில வழக்கறிஞர்களுடனும் கலந்தாலோசித்தார். சட்ட விதிகள் ஒருபுறம் இருந்தாலும், `அரசியல் உத்தி' என ஒன்று இருக்கிறது அல்லவா? எது தனக்கு எதிராக இருக்கிறதோ அதையே கருணாநிதிக்கு எதிரான அஸ்திரமாக மாற்றி, ஆட்டத்தை ஆடிப்பார்த்துவிடுவது என்ற முடிவுக்கு வந்தார் ஜெயலலிதா.

வெற்றியைக் கொடுத்த எம்.ஜி.ஆர் உத்தி

இந்தச் சூழலில் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. ஒருவர் இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடக் கூடாது. மீறி அதற்கும் கூடுதலான தொகுதிகளில் தாக்கல் செய்தால், வேட்பு மனு நிராகரிக்கப்படும் என்ற விதிமுறை இருப்பது நன்கு தெரிந்துமே, ஜெயலலிதா நான்கு தொகுதிகளில் போட்டியிட மனுத் தாக்கல் செய்தார். நான்கு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

அதற்கு முன்னதாக பெயரளவுக்கு, தனி நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறுத்திவைத்து, தன்னைத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி, 11.4.2001 அன்று தள்ளுபடி செய்தார். தலைமை தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில்லும், இது தொடர்பாக ஆலோசித்து, நீதிமன்றம் தடை விதிக்காத நிலையில், சட்டசபைத் தேர்தலில் போட்டியிட ஜெயலலிதாவுக்குத் தகுதி இல்லை என்று முடிவு எடுத்தார். இது தொடர்பான ஆலோசனை டெல்லியில் நடந்துகொண்டிருந்த, அதே நாளில், கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட ஜெயலலிதா வேட்பு மனுத் தாக்கல் செய்துவிட்டார். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து மேலும் மூன்று தொகுதிகளில் அவர் தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடியாகின.

ஜெயலலிதா
ஜெயலலிதா

அதைத்தானே ஜெயலலிதா எதிர்பார்த்தார்..? ``ஆட்சியில் இருப்பதால், நான் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு கருணாநிதி அதிகாரிகள் மூலம் சதி செய்கிறார். அதனால்தான் எனது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன..." என்ற பிரசாரத்தை மக்களிடையே அவர் முன்வைத்தபோது, `அரசியல் சாணக்கியர்' எனப் பார்க்கப்படும் கருணாநிதியே ஆடித்தான் போனார்.

ஆனால், ஜெயலலிதா போட்ட கணக்கு கனகச்சிதமாக வேலை செய்தது. ஜெயலலிதாவின் பிரசாரம் மக்களிடம் எடுபட்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு ஜெயலலிதா நன்றி சொல்ல வேண்டுமென்றால், அவர் தனது அரசியல் குருநாதரான முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்குத்தான் சொல்லியிருக்க வேண்டும். அவர்தான், அ.தி.மு.க-வை ஆரம்பித்த காலம் தொட்டே, கருணாநிதியை மட்டுமே முன்னிறுத்தி, அவருக்கு எதிராக மட்டுமே பேசி, தனது அரசியல் வெற்றிகளைக் குவித்தார். அதே உத்தியைத்தான் அப்போதும் ஜெயலலிதா கையில் எடுத்தார். விளைவாக 2001 தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

சாகும்வரை முதல்வர்

ஆனால், ``ஜெயலலிதாதான் தேர்தலிலேயே போட்டியிடவில்லையே. அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் முதலமைச்சராக யாரைத் தேர்வு செய்வார்கள்?" என்ற குழப்பம் ஏற்பட்டது. ஆனால், ஜெயலலிதாவுக்கு குழப்பம் ஏதும் இல்லை.

'முதலமைச்சராக பதவியேற்பவர் சட்டமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும், ஆறு மாத காலத்துக்குள் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாகி பதவியில் தொடரலாம்' என்ற விதிமுறையைப் பயன்படுத்தி, அப்போதைய கவர்னர் பாத்திமா பீவியைச் சந்தித்து, எம்.எல்.ஏ-களின் ஆதரவுக் கடிதத்தை ஜெயலலிதா கொடுத்து, ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

ஆனால், தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை எப்படி முதல்வராகக்க முடியும் என்ற விவாதங்கள் கிளம்பி, சர்ச்சைகள் ஒருபுறம் சலங்கைகட்டி ஆடின. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் பாத்திமா பீவி, ஜெயலிதாவைப் பதவியேற்க அழைத்தார். ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றார். இது குறித்து பாத்திமா பீவிக்கு எதிராகக் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

ஜெயலலிதா பதவியேற்றதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த ஐந்து நீதிபதிகள் அமர்வு, ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றது செல்லாது எனத் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து, வேறு வழியில்லாமல், ஜெயலலிதா பதவி விலகினார். தமிழக மக்களுக்கு அவ்வளவாக அறிமுகமில்லாத ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராகப் பதவியேற்கச் செய்தார். எனினும், அடுத்த சில மாதங்களில் வழக்குகளிலிருந்து நிவாரணம் பெற்று, மீண்டும் முதல்வராகி, ஆட்சியை நிறைவு செய்தார் ஜெயலலிதா.

பின்னர் 2006 தேர்தலில் அவர் ஆட்சியை இழந்தாலும், முந்தைய காலகட்டங்களில் சந்தித்த போராட்டங்களும், மன உறுதியுமே அவரை மீண்டும் 2011-ல் ஆட்சியைப் பிடிக்கவைத்து, சாகும்வரை முதல்வராகவே அவரை நீடிக்கவைத்தது!

பகுதி 7க்கு செல்ல...

தேர்தல் தோல்வி; திடீரென காணாமல்போன அண்ணா; திரும்ப வந்து சொன்ன அந்த வார்த்தை!- அரசியல் அப்போ அப்படி-7
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு