Published:Updated:

`ராகுல் காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை!' - திடீர் சந்திப்பின் பின்னணி என்ன?

ராகுல் காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை!
ராகுல் காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை!

2017 உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிக்கு பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தபோதும் பாஜக., அந்தத் தேர்தலில் காங்கிரஸை மண்ணை கவ்வச் செய்தது. பிரசாந்த் கிஷோரின் தேர்தல் உத்திகள் உ.பி தேர்தலில் அந்தக் கட்சிக்குக் கைகொடுக்கவில்லை.

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பிரபல அரசியல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் தமிழகத்தில் திமுக-வுக்கும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் தேர்தல் உத்தியை வகுத்துக் கொடுத்தது. பிரசாந்த் கிஷோரின் தேர்தல் வியூகங்கள் அந்தக் கட்சிகளுக்குக் கைகொடுத்தமையால் சொல்லி வைத்ததுபோல் வெற்றி வாகை சூடின. ஐபேக் நிறுவனத்தின் தேர்தல் கணிப்புகளின்படி தமிழகத்தில் திமுக-வும், மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸும் அமோக வெற்றிபெற்றன. இந்தநிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான நாள் அன்றே தேர்தல் ஆலோசகர் என்ற பணியிலிருந்து தான் ஒதுங்கிக்கொள்வதாகவும், தான் தொடங்கிய நிறுவனத்தைத் தனது நண்பர்கள்/சக பணியாளர்கள் நடத்துவார்கள் என்றும் பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு வெளியிட்டு திடீரென அரசியல் கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

ஐபேக் -  ஸ்டாலின்
ஐபேக் - ஸ்டாலின்

தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, திமுக தலைவர் ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோரைச் சந்தித்து பிரசாந்த் கிஷோர் வாழ்த்து தெரிவித்தார். அதன் பின்னர், அரசியல் தொடர்பாக யாரையும் சந்திக்காமம் இருந்துவந்த அவர் அண்மையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் ஆகியோரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பிரசாந்த் கிஷோரின் அந்தச் சந்திப்பு இந்திய அரசியலில் கவன ஈர்ப்பு நிகழ்வாக பார்க்கப்பட்டது. மேலும் அந்தச் சந்திப்பின் மூலம் பிரசாந்த் கிஷோர் அரசியல் உத்தி வகுப்பாளராகத் தொடர்ந்து செயல்படுவார் என்று பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், அவர் தரப்பிலிருந்து எந்தவித அறிவிப்பும் அது குறித்து வெளியாகவில்லை.

அதேபோல், பிரசாந்த் கிஷோர் அடுத்த ஆண்டு உ.பி-யில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கும், 2024-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக-வை மத்தியில் ஆட்சியிலிருந்து அகற்ற அந்தக் கட்சிக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கவும் உத்திகளை வகுத்துக் கொடுப்பார் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்தநிலையில், பிரசாந்த் கிஷோர் இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோரைச் சந்தித்து ஆலோசனை நடத்தியிருப்பது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பேசுபொருளாக மாறியிருக்கிறது.

டெல்லியிலுள்ள ராகுல் காந்தியின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சிலரும் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. பிரசாந்த் கிஷோரின் இந்த டெல்லி மீட்டிங்கில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து காங்கிரஸ் தலைமையிலிருந்து எந்தவித அறிவிப்பும் வெளியாகாத நிலையில், கூட்டத்தில் பாஜக அலையில் சிக்கி நாளுக்கு நாள் வலுவிழந்துவரும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பஞ்சாப் தேர்தலில் ஆட்சியைத் தக்கவைக்கவும், உ.பி தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், பிரசாந்த் கிஷோர் பஞ்சாப் உள்ளிட்ட காங்கிரஸ் ஆட்சி செய்துவரும் மாநிலங்களில் சமீபகாலமாக விஸ்வரூபம் எடுத்திருக்கும் உட்கட்சிப் பூசல்கள் குறித்து ராகுல் காந்தியிடம் அதிருப்தி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் செயலாளராகப் பதவி வகித்துவரும் பிரியங்கா காந்தி இன்னும் சில நாள்களில் லக்னோ செல்ல திட்டமிட்டிருக்கும் நிலையில், பிரசாந்த் கிஷோரின் இந்த திடீர் சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ராகுல் காந்தி - பிரசாந்த் கிஷோர்
ராகுல் காந்தி - பிரசாந்த் கிஷோர்

அண்மையில், அரசியல் உத்தி வகுப்பாளார் பிரசாந்த் கிஷோர் புதிதாகப் பயன்பாட்டுக்கு வந்திருக்கும் 'கிளப் ஹவுஸ்' செயலியின் உரையாடல் ஒன்றில் 'பாஜக-வுக்கு எதிரான ஒருமித்த கருத்தையும், நிலைப்பாட்டையும் கொண்ட அரசியல் கட்சிகளுடன்தான் எப்போதும் இருப்பேன். அவர்களுக்குத்தான் பணியாற்றுவேன்' என்று பேசியிருந்தார்.

முன்னதாக, சரத் பவாருடனான பிரசாந்த் கிஷோரின் சந்திப்பின்போது பாஜக-வுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி அமையவிருப்பதாகப் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால், சரத் பவார், காங்கிரஸை இணைப்பதன் மூலம் மட்டுமே பாஜக-வுக்கு எதிரான வலுவான அணியை உருவாக்க முடியும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், ராகுல் காந்தியுடனான இந்தச் சந்திப்பு வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வுக்கு எதிரான வலுவான கூட்டணியை அமைப்பதற்கான முன்னெடுப்பு என்று அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாபிக்காகப் பேசப்பட்டுவருகிறது.

மோடி அரசின் மாஸ்டர் ஸ்ட்ரோக்- பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கான திட்டத்தை விமர்சிக்கும் பிரஷாந்த் கிஷோர்
அடுத்த கட்டுரைக்கு