Published:Updated:

சுருட்டும் சுனில்... அலறும் அ.தி.மு.க!

சுனில்
பிரீமியம் ஸ்டோரி
சுனில்

முதலில் தனிநபராகக் கட்சிக்குள் நுழைபவர், பிறகு தனக்கென ஒரு டீம் அமைத்துக்கொண்டு, அவர்களுக்கு மாதம் பெரும் தொகை தர வேண்டும் எனப் பணத்தைக் கறக்க ஆரம்பித்துவிடுவார்

சுருட்டும் சுனில்... அலறும் அ.தி.மு.க!

முதலில் தனிநபராகக் கட்சிக்குள் நுழைபவர், பிறகு தனக்கென ஒரு டீம் அமைத்துக்கொண்டு, அவர்களுக்கு மாதம் பெரும் தொகை தர வேண்டும் எனப் பணத்தைக் கறக்க ஆரம்பித்துவிடுவார்

Published:Updated:
சுனில்
பிரீமியம் ஸ்டோரி
சுனில்

தி.மு.க-வில் எப்படியோர் அட்ராசிட்டியை ‘ஐபேக்’ நிகழ்த்திக்கொண்டிருக்கிறதோ, அதற்குச் சற்றும் குறையாத சித்து விளையாட்டுகளை அ.தி.மு.க-வில் நடத்தி, கழகத்தையே கதறவைக்கிறார் சுனில். 2016 சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க-வின் வியூக வகுப்பாளராகச் சுழன்ற சுனில், அக்கட்சித் தலைமையின் குடும்பத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கேயிருந்து பிரிந்து வந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஒட்டிக்கொண்டார். இன்று அ.தி.மு.க-வுக்குள் அவர் வைத்ததுதான் வியூகம், சட்டம் என்றாகிவிட்ட பிறகு, 33 வருடங்கள் தமிழகத்தின் அரியணையை அலங்கரித்த அந்தக் கட்சி தள்ளாட்டத்தைச் சந்தித்திருக்கிறது!

யார் இந்த சுனில்?

கர்நாடகாவின் பெல்லாரியை பூர்வீகமாகக் கொண்ட சுனில் கணுகோலு, பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைதான். அமெரிக்காவில் மேற்படிப்பை முடித்தவர், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பிரசாந்த் கிஷோருடன் சேர்ந்து மோடிக்காகத் தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்தார். பிறகு, ‘ஒன் மைண்ட் ஜெனரேஷன்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கி, தி.மு.க-வின் வியூக வகுப்பாளராக அறிவாலயம் புகுந்தவர், ஸ்டாலினின் ‘நமக்கு நாமே’ பிரசார வியூகத்தை வடிவமைத்தார். 2016 சட்டமன்றத் தேர்தலின்போது, சீட் பெற்றுத் தருவதாகக் கூறி பெரும் ஆதாயம் அடைந்ததாக அன்றே பரபரப்பு புகார் எழுந்தது.

அந்தத் தேர்தலில் தி.மு.க தோல்வியடைந்தது. வெகுண்டெழுந்த தி.மு.க குடும்ப உறுப்பினர் ஒருவர், “உங்களால்தான் கட்சி தோற்றது” என்று சுனிலிடம் நேரடியாக எகிற, கூடவே கட்சி சீனியர்களும் சுனிலுக்கு எதிராக நின்றார்கள். இதன் விளைவாக, 2019 நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க பிரசாரங்களில் சுனிலை கட்சித் தலைமை பொருட்படுத்தவில்லை. தேர்தல் முடிந்தவுடன் அந்தக் கட்சியுடனான உறவையே முறித்துக்கொண்டார் சுனில்.

இந்தச் சூழலில்தான், அரசியல் விமர்சகர் ஒருவர் மூலமாக அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜின் அறிமுகம் சுனிலுக்குக் கிடைத்தது. அவர் மூலமாக முதல்வர் பழனிசாமியின் மகன் மிதுனை நெருங்கிய சுனில், தன் பேச்சு சாதுர்யத்தால், பழனிசாமியின் வியூக வகுப்பாளரானார். இன்றுவரை அவர் பழனிசாமிக்கு மட்டும்தான் ஆலோசகரே தவிர, அ.தி.மு.க-வின் வியூக வகுப்பாளர் அல்ல. ஒருமுறை சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், “என் ஏரியாவுக்குள்ள வந்தா தொலைச்சுப்புடுவேன்” என்று சுனில் பற்றி பழனிசாமியிடம் வெளிப்படையாகச் சீறியதுண்டு. அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செல்லூர் ராஜூ என்று பலருக்கும் சுனிலைக் கண்டாலே ஆகாது. ஆனாலும், தி.மு.க-வின் ப்ளஸ், மைனஸ் அறிந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக, சுனிலை அருகில் வைத்துக்கொண்டார் பழனிசாமி. இந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, சுனில் அடையும் ஆதாயங்கள் கொஞ்ச நஞ்சமல்ல என்று அலறுகிறது அ.தி.மு.க!

‘டிக்’-குக்கு மூன்று ஸ்வீட் பாக்ஸ்!

சுனில் அட்ராசிட்டி குறித்து அ.தி.மு.க சீனியர்கள் சிலரிடம் பேசினோம். “சுனில் காய்களை உருட்டும் பாணியே வித்தியாசமானது. முதலில் தனிநபராகக் கட்சிக்குள் நுழைபவர், பிறகு தனக்கென ஒரு டீம் அமைத்துக்கொண்டு, அவர்களுக்கு மாதம் பெரும் தொகை தர வேண்டும் எனப் பணத்தைக் கறக்க ஆரம்பித்துவிடுவார். தி.மு.க-விடம் ‘ஓ.எம்.ஜி’ என்கிற பெயரில் இயங்கிய சுனில் டீம், அ.தி.மு.க-விடம் ‘டெமோஸ் புராஜெக்ட் கம்பெனி’ என்ற பெயரில் இயங்குகிறது. இவர்கள், வெவ்வேறு சிறு நிறுவனங்களுக்கு சர்வே எடுக்கவும், விளம்பரங்கள் செய்யவும் ‘சப் கான்ட்ராக்ட்’ தருவார்கள். அவையும் சுனிலின் பினாமி நிறுவனங்கள்தான். இப்படி, கட்சி கொடுக்கும் பணம் முழுவதையும் தன் நிறுவனங்கள் மூலமாக மொத்தமாகச் சுருட்டுவது சுனிலின் வாடிக்கை.

சுனில் டீமைச் சேர்ந்தவர்கள் தொகுதிக்கு மூன்று பேர்கொண்ட வேட்பாளர் பட்டியலைத் தயாரிக்கிறார்கள். இந்தப் பட்டியலில் இடம்பெற ஒருவருக்கு 25 லட்டுகளும், வேட்பாளராக ‘டிக்’ செய்யப்படுவதற்கு மூன்று ஸ்வீட் பாக்ஸ்களுமாக வசூல் வேட்டையை நடத்துகிறது சுனில் தரப்பு. இதுபோக, ‘சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தி.மு.க-வுக்கு அவர்கள் சென்றுவிடாமல் தடுக்கிறோம்’ என்று கூறி அதற்கும் தனியாகக் கறக்கிறார்கள். சமீபத்தில், ஒரு முக்கியக் கட்சியின் தலைவரிடம் பேச்சுவார்த்தைக்குச் சென்றது சுனில் தரப்பு. ‘அ.தி.மு.க போட்டியிடும் தொகுதிகளில் ‘வீக்’கான வேட்பாளர்களைக் களமிறக்குங்கள். இதற்காக 50 ஸ்வீட் பாக்ஸ்கள் வரை பெற்றுத் தருகிறோம்’ என்று அந்த தலைவரிடம் டீல் பேசியிருக்கிறார்கள். கனமாகச் சிரித்த அந்தத் தலைவர், ‘அடுத்த தடவை வந்தீங்கன்னா, பிரியாணிக்கு பதிலா உங்களைக் கிண்டிருவோம் தம்பி’ என்று மிரட்டி அனுப்பியிருக்கிறார்” என்றனர்.

சுனில்
சுனில்

சர்வேயிலும் தில்லுமுல்லு!

சுனிலின் பலமே சர்வேதான் என்கிறார்கள். தொகுதிவாரியாகத் துல்லியமாக சர்வே எடுத்துத் தந்ததால்தான், அவர்மீதான விமர்சனங்களையும் புறந்தள்ளிவிட்டு அருகில் வைத்துக்கொண்டாராம் தி.மு.க தலைவர் ஸ்டாலின். 2021 சட்டமன்றத் தேர்தலையொட்டி, மக்களின் பல்ஸ் அறிவதற்காக 234 தொகுதிகளிலும், தொகுதிக்கு 1,000 படிவங்கள் வீதம் சர்வே எடுத்துத் தரும்படி சுனிலுக்கு அ.தி.மு.க தலைமை உத்தரவிட்டிருந்தது. இதற்காக ஒரு தொகுதிக்கு 3 லட்சம் ரூபாய் கேட்ட சுனில் தரப்பு, மாதம் 7 கோடி ரூபாய் செலவுக் கணக்கைக் காட்டியிருக்கிறது. ஆனால், உண்மையில் செலவானது

1.5 கோடி ரூபாய்தான் என்கிறது அ.தி.மு.க வட்டாரம். இது குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க இளைஞரணித் தலைவர் ஒருவர், “சுனில் டீம் அனுப்பும் ஆட்களுக்கு வசதியாக ரூம் போட்டுத் தருவதில் தொடங்கி, அவர்கள் கேட்கும் வசதிகள் அனைத்தையும் மாவட்டச் செயலாளர்கள்தான் செய்ய வேண்டும். சர்வேக்காகச் செலவாகும் பணம் தவிர, மீதியெல்லாம் ஸ்வாஹாதான். கடந்த எட்டு மாதங்களாக இதுதான் நடக்கிறது. இதைவிடப் பெரிய தில்லுமுல்லாக, 2016, 2019-ல் தாங்கள் சேகரித்த தகவல்களில் சிறு சிறு மாற்றங்களைச் செய்து புதிதாகக் கண்டுபிடித்ததுபோல, முதல்வரிடம் சுனில் தரப்பு ரிசல்ட் அளிக்கிறது. இதனால், சரியான களநிலவரங்களை கணிக்க முடியவில்லை.

ஊடகங்களில் பழனிசாமியின் ஆளுமையை வெளிப்படுத்தும்விதமான செய்திகளை வரவழைக்கிறோம் என்ற பெயரில், மாதம் ஒரு கணிசமான தொகையை ஊடகவியலாளர்களின் பெயரைச் சொல்லி பில் போடுகிறார்கள். சரி, இவ்வளவு சுருட்டியும் அவர்கள் எடுத்துவைத்த வியூகமாவது வெற்றி பெற்றிருக்கிறதா என்றால் இல்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, காஸ் சிலிண்டர் விலையேற்றம் மக்களின் குரல்வளையை நெரிக்கும் நிலையில், ‘வெற்றி நடைபோடும் தமிழகமே’ என்று பாட்டை ஒலிக்கவிட்டிருக்கிறார் சுனில். 2014 நாடாளுமன்றத் தேர்தலில், விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னை பெரிதான சமயத்தில் ‘இந்தியா ஒளிர்கிறது’ என்கிற பிரசாரத்தை அப்போதைய ஆளும் பா.ஜ.க முன்னெடுத்தது. இதனாலேயே, அந்தத் தேர்தலில் வாஜ்பாய் படுதோல்வியைச் சந்தித்தார். சுனிலின் சொதப்பல்களால் பழனிசாமிக்கும் அது நிகழ்ந்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை” என்றார் வருத்தத்துடன்.

கட்சி பிளவுற காரணம் சுனில்!

‘‘கட்சி இன்று இரண்டு துண்டாகப் பிரிந்துகிடப்பதற்குக் காரணமே சுனில்தான்’’ என்கிற கருத்தும் அ.தி.மு.க வட்டாரங்களில் ஓங்கி ஒலிக்கிறது. நம்மிடம் பேசிய தென்மாவட்ட அமைச்சர் ஒருவர், “துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு எதிராக பழனிசாமியை கொம்பு சீவிவிட்டதே சுனில்தான். எங்களுக்குள் பேசி சுமுகமாக முடிந்திருக்க வேண்டிய ‘யார் முதல்வர் வேட்பாளர்?’ பஞ்சாயத்தை, ஊதிப் பெரிதாக்கி பன்னீரை உசுப்பேற்றிவிட்டார். இன்று தனியாகத் தனக்கென விளம்பரம் செய்துகொண்டு, பழனிசாமிக்கு பன்னீர் குடைச்சல் கொடுப்பது சுனிலின் தவறான வழிகாட்டுதலால்தான். கட்சி இன்று தென் தமிழகம் Vs மேற்கு மண்டலம் என்று பிரிந்துகிடப்பதும் அவரது சொதப்பல் ஐடியாக்களால்தான். குறிப்பாக, சுனில் மீது பன்னீர் கடுங்கோபத்தில் இருக்கிறார். இப்படிப்பட்டவரிடம்தான், கட்சியின் தேர்தல் பூந்தி பட்டுவாடாக்களை அளிக்க வேண்டுமெனச் சொல்கிறது கட்சித் தலைமை. அதில் எவ்வளவு ஸ்வீட் பாக்ஸ்கள் காணாமல் போகப்போகின்றனவோ?” என்றார் ஆதங்கத்துடன்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வியூக வகுப்பாளராகக் கட்சிக்குள் சுனில் நுழைந்த நேரத்தில், அ.தி.மு.க சீனியர்கள், அமைச்சர்கள், ஐடி விங் நிர்வாகிகள் எனப் பலருக்கும் அவரைப் பிடிக்கவில்லை. பலரும், ‘சுனில் ஓர் உளவாளியாக நம் கட்சிக்குள் வந்திருக்கலாம்’ என்று ஓப்பன் கமென்ட் அடித்தனர். இந்தச் சூழலில், ஸ்வீட் பாக்ஸ் பஞ்சாயத்து, சர்வே தில்லுமுல்லுகளால் சுனிலின் பெயர் பஞ்சராகிக் கிடக்கிறது. ‘எடப்பாடியும் பஞ்சராகாமல் தப்பித்தால் சரி’ என்பதே அமைச்சர்களின் கவலை. ஆனால், குடகுப் பகுதியில் புதிதாக எஸ்டேட் வாங்கியிருக்கும் சுனில், எந்தக் கவலையும் இல்லாமல் செட்டில் ஆகும் ஏற்பாடுகளில் பரபரப்பாக இருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism