Published:Updated:

ரஜினி: `அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில்' டு `அரசியலுக்கு வர முடியவில்லை' - 1990 முதல் 2020 வரை!

ரஜினி அரசியல்
ரஜினி அரசியல்

பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்ட அரசியல்வாதிகூட சந்திக்காத கேள்வியை அரசியல் களத்துக்குள் வராமலேயே ரஜினி சந்தித்திருந்தார். அதுதான்... `நீங்கள் யார்?’

நீண்டகாலமாக `எப்போ வருவார்... எப்போ வருவார்' என்ற கேள்விகளோடு காத்திருந்த தனது ரசிகர்களுக்கு பதில் சொல்லும்விதமாக, டிசம்பர் 3-ம் தேதி `டிசம்பர் 31-ல் அறிவிப்பு; ஜனவரியில் கட்சித் தொடக்கம்' என்று பேட்டியளித்திருந்தார் ரஜினி. தற்போது, `உடல்நலம் சரியில்லை என்பதால் கட்சி தொடங்கப்போவதில்லை' என்கிற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் ரஜினி.

1990 முதல் தற்போது வரை ரஜினியின் அரசியல் நிலைப்பாடு என்னவாக இருந்தது என்பதை அலசும் டைம்லைன் கட்டுரை இது. அலசலாம் வாங்க!

1990-களின் தொடக்கம்... `தளபதி' படம் வெளியான சமயம்... தமிழகத்தின் சில மாவட்டங்களில், `வருங்கால முதல்வர்' என்று குறிப்பிடப்பட்ட ரஜினி போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அப்போது உச்ச நட்சத்திரமாக இருந்த ரஜினியை எப்படியாவது அரசியலுக்குள் கொண்டு வர வேண்டுமென ரஜினி மன்றத்தினர் ஒட்டிய போஸ்டர்கள்தான் அவை. 1992-ல் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குத் தமிழகத் திரைத்துறையின் சார்பில், ஒரு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அந்த விழாவில், ஜெயலலிதாவின் முன்பாகப் பேசிய ரஜினி,

``நேற்று பஸ் கண்டக்டர், இன்று சூப்பர் ஸ்டார், நாளை என்னவோ... அதே நேரத்தில், ஆண்டவா எந்தச் சூழ்நிலையிலும் என்னை அரசியலில் விட்டுடாதேன்னு வேண்டிக்கிறேன். ஏன்னா அரசியலுக்கு வந்தா நிம்மதி போயிடும்.’’
ரஜினிகாந்த்
ரஜினி
ரஜினி

அரசியலை வெறுத்தவர்போல அன்று பேசியிருந்தார் ரஜினி. பின்பு சில மாதங்கள் கழித்து, ``அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில்" என்று கூறினார்.

`தீப்பொறி' பறக்கும் அரசியல் வசனங்கள்!

1992-ம் ஆண்டு போயஸ் கார்டனில், அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் வருகைக்காக ரஜினியின் கார் தடுத்து நிறுத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. அதன் பிறகு 1992-ல் வெளியான `அண்ணாமலை' படத்தில் ``எம்பாட்டுக்கு என் வேலையை செஞ்சிக்கிட்டு சிவனேன்னு நான் ஒரு வழில போய்க்கிட்டிருக்கேன். என்னை வம்புக்கிழுக்காதீங்க. வம்புக்கிழுத்தா நான் சொன்னதையும் செய்வேன்... சொல்லாததையும் செய்வேன்" என்று சினிமாவில் தன் முதல் அரசியல் நெடி வீசும் வசனத்தைப் பதிவு செய்தார் ரஜினி!

அப்போது வந்த செய்திகளுக்கு ரஜினி எந்தக் கருத்தும் கூறவில்லையென்றாலும், இந்த வசனம் ஜெயலலிதாவுக்கு எதிராகப் பேசப்பட்டதாகவே பார்க்கப்பட்டது.

ஜூ.வி அட்டையில் ரஜினி
ஜூ.வி அட்டையில் ரஜினி
1992 டு 2020: கோடரியில் அடித்துக் கிணற்றில் தள்ளிய பாதிரியார்கள்... அபயா கொலை வழக்கில் நடந்தது என்ன?

அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் அரசியல் பிரவேசம் குறித்த வசனங்கள் இடம்பெற்றன. அதே ஆண்டில் வெளியான `உழைப்பாளி' படத்தில், ``நேற்று கூலி, இன்னைக்கு நடிகன், நாளை..." என்று பாதியில் முடித்துப் பரபரப்பைக் கிளப்பினார். 1995-ல் வெளியான `முத்து’ படத்தில், ``நான் எப்போ வருவேன் எப்டி வருவேன்னு தெரியாது... ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்..." என்று அவர் பேசிய வசனம் ரசிகர்கள் மனதில், `அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார்' என்றே நம்பவைத்தது. 2017, டிசம்பர் 31-ல் `நேரடி அரசியலுக்கு வருகிறேன்' என்று ரஜினிகாந்த் கூறும் வரையிலுமே, ``தலைவர் வர வேண்டிய நேரத்துல கண்டிப்பா வருவார்'' என்றே அவரது ரசிகர்களையும் சொல்லவைத்தது அந்த வசனம்.

நிஜ வாழ்வில் அரசியல்!

1995-ம் ஆண்டு வரையில், சினிமாவில் மட்டுமே அரசியல் பேசிய ரஜினி, முதன்முறையாக 1996-ல் வெளிப்படையாகவே அரசியல் பேசினார். அந்த ஆண்டில், ஜெயலலிதாவை எதிர்த்துப் பல கருத்துகளை முன்வைத்தார் ரஜினி. ``ஜெயலலிதா திரும்பவும் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது" என்று அவர் சொன்ன கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 1996 சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இது ரஜினியால் கிடைத்த வெற்றியாகவே அவருடைய ரசிகர்கள் கருதினார்கள்.

1996-க்குப் பிறகு ரஜினியின் அரசியல் கருத்துகள் எடுபடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். 1998-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் தி.மு.க-த.மா.கா கூட்டணிக்கு ரஜினி மீண்டும் ஆதரவளித்தும் வெற்றி கிட்டவில்லை.

`பாபா' ரஜினி
`பாபா' ரஜினி

2002-ல் வெளியான `பாபா' படத்தில், ரஜினி புகைபிடிக்கக் கூடாது என்று பா.ம.க கடுமையாக எதிர்த்தது. அதன் பிறகு 2004-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பா.ம.க-வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார் ரஜினிகாந்த். ஆனால், புதுச்சேரி உட்பட போட்டியிட்ட ஆறு இடங்களிலும் வெற்றிபெற்றது பா.ம.க. இதற்கிடையில், 2001-ம் ஆண்டு மீண்டும் முதல்வராகப் பதவியேற்ற ஜெயலலிதாவைச் சந்தித்து, பூங்கொத்துக் கொடுத்ததோடு, `தைரிய லட்சுமி' என்று ஜெயலலிதாவுக்குப் புகழாரமும் சூட்டினார் ரஜினி.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
``டிக்டேட்டர் வந்தா, நான் அரசியலுக்கு வருவேன்!'' - ரஜினியின் `கிளாசிக்' பேட்டி!

2010-ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் கருணாநிதிக்குத் தமிழக திரைத்துறையினர் சார்பில் நடைபெற்ற பாராட்டுவிழாவில் பேசிய அஜித், ``எந்தப் பிரச்னை வந்தாலும், சில அமைப்புகள் திடீரென்று ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்துறாங்க. அதுல எங்களையும் கலந்துக்கச் சொல்லி வற்புறுத்துறாங்க. மிரட்டுறாங்க. இது போன்ற விழாக்களுக்குக் கட்டாயம் வர வேண்டும் என்று மிரட்டப்படுவதை நீங்கள் தடுக்க வேண்டும்" என்று கருணாநிதி முன்பாகப் பேசினார். அந்த நிகழ்வில், கருணாநிதி அருகில் அமர்ந்திருந்த ரஜினிகாந்த், உடனே எழுந்து நின்று அஜித்தின் பேச்சை வரவேற்று கைதட்டினார். இந்தச் சம்பவம் அந்த சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் நடந்த சில நாள்களிலேயே ரஜினியும் அஜித்தும் அன்றைய முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்தனர். 2010, பிப்ரவரி 18-ம் தேதியன்று காலை வேளையில் ரஜினியும், மாலை வேளையில் அஜித்தும் கருணாநிதியை அவரது கோபாலபுரம் வீட்டில் சந்தித்தனர்.

`தி.மு.க-வினரால் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாகத்தான் ரஜினியும் அஜித்தும் கருணாநிதியை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டனர்' என்று அந்தச் சமயத்தில் வெளியான சில செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, ``என் மகள் சௌந்தர்யா நிச்சயதார்த்தத்துக்கு முதல்வர் குடும்பத்தோடு வந்து ஆசி வழங்கினார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கத்தான் நேரில் சந்தித்தேன்'' என்றார். `பாராட்டுவிழாவில் அஜித் பேசியது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என்ற கேள்விக்குப் பின்வருமாறு பதிலளித்திருந்தார் ரஜினிகாந்த்...

''அது அவருடைய உரிமை. அவர் உண்மையைப் பேசினார். அதற்காக நான் அவரைப் பாராட்டுகிறேன். நடிகர், நடிகைகள் விழாக்களுக்கு வரும்படி அழைக்கப்படுகிறார்கள். ஆனால், வர வேண்டும் என்று யாரும் நிர்பந்தம் செய்வதில்லை. அவர்களாகவே விரும்பித்தான் போராட்டங்கள், உண்ணாவிரதம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்கள். முதல்வர் கருணாநிதி பல்வேறு போராட்டங்களைச் சந்தித்தவர். அவர் யாரையும் நிர்பந்தம் செய்து அழைக்க வேண்டிய அவசியம் இல்லை.''
ரஜினி
மோடியுடன் ரஜினியும் விஜய்யும்
மோடியுடன் ரஜினியும் விஜய்யும்
விஜய்யின் `தலைவா'...`Time To Lead' மட்டும்தான் பிரச்னையா? `தலைவா டே' கொண்டாட்ட பின்னணி என்ன?

2010-ம் ஆண்டுக்குப் பிறகு சில காலம் அரசியல் குறித்த எந்த விஷயத்திலும் ரஜினி தலையிடவில்லை. 2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காகச் சென்னை வந்திருந்த மோடி, திடீரென ரஜினியைச் சந்தித்துப் பரபரப்பைக் கிளப்பினார். மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்று சொல்லப்பட்ட நிலையிலும், `மீண்டும் அரசியலில் ரஜினி' என்ற பேச்சுகள் எழத் தொடங்கின. தொடர்ந்து நடிகர் விஜய்யையும் கோயம்புத்தூரில் சந்தித்தார் மோடி. இதையடுத்து ரஜினி, விஜய் இருவரையும் மரியாதை நிமித்தமாகத்தான் மோடி சந்தித்திருக்கிறார் என்று செய்திகள் வெளியாகின.

மீண்டும் பற்றிய அரசியல் தீ!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த 2017-ம் ஆண்டு, மே மாதம் தன் ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினிகாந்த். ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது மேடையில், தாமரையின் மீது பாபா சின்னம் இருப்பது போன்ற படங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. அதனால் இம்முறை கண்டிப்பாகத் தலைவர் அரசியலுக்கு வருவார் என்று நம்பினார்கள் ரசிகர்கள். ஆனால், ``நான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில்தான் இருக்கிறது" என்று மீண்டும் குழப்பினார். இருந்தும் `சிஸ்டம் கெட்டுப்போச்சு', `போர் வரும்போது பார்த்துப்போம்' என்று அவர் பேசிய வார்த்தைகள், இன்னும் அரசியல் ரேஸில் ரஜினி இருக்கிறார் என்று அவருடைய ரசிகர்களை நம்பவைத்தன.

நான் பச்ச தமிழன்!
ரஜினி
 ரசிகர்கள் மத்தியில் ரஜினி பேச்சு
ரசிகர்கள் மத்தியில் ரஜினி பேச்சு
மேலும் ``எப்போது அரசியல் பிரவேசம் என்று தொடர்ந்து கேட்டுவருகிறார்கள். எம்.பி ஆக வேண்டும், எம்.எல்.ஏ ஆக வேண்டும் என்று ஆசைப்படுவதில் தவறேதும் இல்லை. ஆனால், பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் அரசியலுக்கு வர விரும்புபவர்களை நான் அருகில் வைத்துக்கொள்ள மாட்டேன். நான் தமிழனானு கேட்குறாங்க... நீங்க என்னைத் தமிழனாவே மாத்திட்டீங்க... எங்க மூதாதையர், அப்பா எல்லாம் கிருஷ்ணகிரில பிறந்தவங்கதான்... அதுனால நான் பச்ச தமிழன்" என்று ரஜினி பேசியது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

மீண்டும் அதே ஆண்டில், டிசம்பர் 31-ம் தேதி, இரண்டாவது முறையாக ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினி. இம்முறை எப்படியும் கட்சி தொடங்கிவிடுவார் என்ற நம்பிக்கையில் ராகவேந்திரா மண்டபத்துக்குப் படையெடுத்து வந்திருந்தனர் ரஜினி ரசிகர்கள். அனைத்து ரசிகர்களும் கட்சிப் பெயர் என்னவாக இருக்கும், கட்சியின் முக்கியப் பொறுப்புகள் யார் யாருக்குத் தரப்படும் என்பது போன்ற எதிர்பார்ப்புகளோடு காத்திருந்தனர்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
“விஜயகாந்த் மனிதர்... ரஜினி வியாபாரி... கமல் மனசாட்சியற்றவர்!”
அவர்கள் மத்தியில் பேச வந்தார் ரஜினிகாந்த், ``இது காலத்தின் கட்டாயம்... வரப்போற சட்டமன்றத் தேர்தல்ல தனிக் கட்சி ஆரம்பிச்சு, 234 தொகுதியிலேயும் நாம போட்டியிடுறோம்'' என்று அவர் சொன்னவுடன் அரங்கம் அதிர்ந்தது. 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து, ``கட்சி ஆரம்பிப்பது உறுதி, தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என்று கூறினார்

தொடர் விமர்சனங்கள்!

அதைத் தொடர்ந்து, 2018-ம் ஆண்டில், பல முறை பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். ட்விட்டரில் கருத்துகளைப் பதிவிட்டார். குறிப்பாக, சேப்பாக்கத்தில் நடைபெற்ற காவிரி மீட்புப் போராட்டத்தின்போது போலீஸார் சிலர் தாக்கப்பட்டபோது, ``வன்முறையின் உச்சக்கட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவதுதான். இத்தகைய வன்முறை கலாசாரத்தை உடனே கிள்ளி எறியவில்லையென்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்ற வேண்டும்" என்று அவர் பதிவிட்ட ட்வீட், அதிகாரவர்க்கத்துக்கு ஆதரவாக இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. `மக்களைத் தாக்கிய போலீஸாரைக் கண்டிக்காத ரஜினிகாந்த், இதற்கு மட்டும் ஏன் முன் வந்து நிற்கிறார்...' என்று பலரும் விமர்சித்த பிறகு, `போலீஸார் மக்களைத் தாக்கியதும் தவறான விஷயமே' என்று கூறினார்.

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடந்தவுடன் ``மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசின் அலட்சியப்போக்கின் விளைவாக இன்று பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. நடந்த வன்முறை மற்றும் பொது ஜன உயிரிழப்புகளுக்குத் தமிழக அரசே பொறுப்பு'' என்று அரசை விமர்சித்தார் ரஜினி. மே 30-ம் தேதி தூத்துக்குடிக்குச் செல்வதற்கு முன், ``நான் ஒரு நடிகனாகத்தான் தூத்துக்குடிக்குச் செல்கிறேன். என்னைப் பார்த்தால் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்'' என்றார்.

தூத்துக்குடி மருத்துவமனையில், போராட்டத்தில் காயம்பட்ட இளைஞர் ஒருவரை ரஜினி நேரில் சந்தித்தபோது, அந்த இளைஞர் ``நீங்க யார்... சென்னையிலிருந்து இங்கே வர 100 நாள்களா?'' என்றெல்லாம் கேள்வி கேட்டு ரஜினியைத் திணறடித்தார். எதிர்பாராத இந்தக் கேள்விகள் அவரை நிலைகுலையவைத்தன.

தூத்துக்குடியில் ரஜினி
தூத்துக்குடியில் ரஜினி

தூத்துக்குடியிலிருந்து சென்னை திரும்பியதும் பத்திரிகையாளர்களின் கேள்விகளைச் சமாளிக்க முடியாமல், ``மக்கள் எல்லாத்துக்கும் போராட்டம் போராட்டம்னு போனா... தமிழ்நாடு சுடுகாடா மாறிடும்" என்று ஆவேசமாகப் பேசிவிட்டுச் சென்றார் ரஜினி. ரஜினிகாந்தின் இந்தக் கருத்தால், அவர்மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. `ரஜினிகாந்த் சினிமாவைப்போலவே அரசியலை அணுகுகிறார். அங்கும் யாரோ எழுதிக் கொடுத்த வசனத்தைப் பேசுகிறார். இங்கும் யாருக்காகவோ பேசுகிறார்' என்ற விமர்சனங்கள் ரஜினியைச் சூழ்ந்தன.

பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்ட அரசியல்வாதிகூட சந்திக்காத கேள்வியை அரசியல் களத்துக்குள் வராமலேயே ரஜினி சந்தித்திருந்தார். அதுதான்... `நீங்கள் யார்?’

அதன் பிறகு பெரிதாக அரசியல் கருத்துகள் தெரிவிக்காமல், வாழ்த்து செய்திகள், இரங்கல் செய்திகளை மட்டுமே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுவந்தார்.

மீண்டும் மீண்டும்!

இந்த ஆண்டு மார்ச் மாதம் லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். முதல்வர் பதவி எனக்கு வேண்டாமென்று பேசினார். `மக்கள் மத்தியில் எழுச்சி வந்த பிறகு அரசியலுக்கு வருவேன்' என்று சொன்னார். இது மீண்டும் அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தது.

லீலா பேலஸ் செய்தியாளர் சந்திப்பில் ரஜினி பேசியதன் ஹைலைட்ஸை கீழே உள்ள லிங்க்கில் காணலாம்.

"நான் 'முதல்வர்' இல்லை... புரட்சிக்குப் பின் அரசியல்..." - ரஜினி உரையின் டாப் 25 ஹைலைட்ஸ்!

அதன் பிறகு கடந்த அக்டோபர் மாதத்தில், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த ஓர் அறிக்கை என்று ஒரு போலியான அறிக்கை சுற்றி வந்தது. சமூக ஊடகங்களில் பரவிவரும் அந்த அறிக்கை தன்னுடையது அல்ல என்று ட்விட்டரில் பதிவிட்டார் ரஜினி. இருப்பினும், அந்த அறிக்கையில் அவரது உடல்நிலை குறித்துச் சொல்லப்பட்ட விஷயங்கள் அனைத்தும் உண்மை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ரஜினி பேச்சு
ரஜினி பேச்சு
`அறிக்கை என்னுடையது அல்ல; தகவல்கள் உண்மை!’ - மௌனம் கலைத்த ரஜினி
``உங்களுக்கு (ரஜினிக்கு) சீறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால், மற்றவர்களைவிட உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். அதனால் கொரோனா தொற்று உங்களை எளிதில் தாக்கக்கூடிய வாய்ப்பு மிக அதிகம். அது உங்கள் சிறுநீரகத்தை மட்டுமல்ல, உங்கள் உடல்நலத்தையும் நிச்சயம் கடுமையாக பாதிக்கும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்'' என்று அந்த போலி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன் பிறகு கடந்த சில நாள்களாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் உள்ளிட்ட பலரிடமும் ஆலோசனை நடத்திய ரஜினி, ``என்னுடைய முடிவை எவ்வளவு சீக்கிரமோ முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அறிவிப்பேன்” என்று சொல்லியிருந்தார். அவர் சொன்னதைப்போலவே டிசம்பர் 3-ம் தேதி அவரது முடிவைத் தெரிவித்தார். ``ஜனவரியில் கட்சித் தொடக்கம், டிசம்பர் 31-ல் தேதி அறிவிப்பு'' என்று ட்விட்டரில் அறிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களையும் சந்தித்தார் ரஜினி. ``எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், கொரோனா காலத்தில் மக்களைச் சந்திக்க வேண்டாமென்று மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால், தமிழக மக்களுக்காக உயிரே போனாலும் நான் சந்தோஷப்படுவேன். அரசியல் மாற்றம் ரொம்பக் கட்டாயம். அது காலத்தின் தேவை. அது இப்போ இல்லைன்னா... எப்பவும் இல்லை. எல்லாத்தையும் மாத்தணும்'' என்று தன் அரசியல் வருகையை உறுதிப்படுத்தும்படியான வார்த்தைகளைப் பேசினார்.

`அண்ணாத்த' படப்பிடிப்பு!

தொடர்ந்து பேசிய ரஜினி ``கட்சி அறிவிப்புக்கு முன்பாக `அண்ணாத்த’ ஷூட்டிங்கை முடித்துக் கொடுக்க வேண்டியது என் கடமை'' என்று சொல்லியிருந்தார். இதைத் தொடர்ந்து டிசம்பர் மாத மத்தியில், ஹைதராபாத்தில் நடைபெற்ற `அண்ணாத்த' படப்பிடிப்பில் கலந்துகொண்டார் ரஜினி. கொரோனா விதிமுறைகளுடன் ஷூட்டிங் தொடர்ந்த நிலையில், படக்குழுவினர் சிலருக்குக் கடந்த 24-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாகப் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஹோட்டலில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டார் ரஜினி. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதியானாலும், ரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து ஹைதராபாத்திலுள்ள அப்போலோவில், டிசம்பர் 25-ம் தேதி (2020) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ரஜினி. மூன்று நாள்கள் சிகிச்சைக்குப் பின்னர் 27-ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

ரஜினி
ரஜினி
`கட்சி தொடங்கவில்லை; கூட வருபவர்களை பலிகடாவாக்க விரும்பவில்லை!’ - ரஜினி

கட்சி தொடங்கவில்லை!

இதையடுத்து இன்று (டிசம்பர் 29, 2020) `கட்சி தொடங்கவில்லை' என்று மூன்று பக்க அறிக்கையைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ரஜினி. அந்த அறிக்கையில், ``பிரசாரத்தின்போது என் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டால், என்னை நம்பி என்கூட வந்து, என்னுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் பல சிக்கல்களையும் சவால்களையும் எதிர்கொண்டு மனரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் பல துன்பங்களைச் சந்திக்க நேரிடும். இல்லை, நான் கொடுத்த வாக்கைத் தவற மாட்டேன். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி, இப்போது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலு விதமா என்னைப் பற்றிப் பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என்கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. ஆகையால், நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி, எனக்கு மட்டும்தான் தெரியும்'' என்று கூறியிருக்கிறார்.

மேலும் அந்த அறிக்கையில், ``மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்ய முடியுமோ, அதை நான் செய்வேன். என் நலத்தில் அக்கறை உள்ள என் மேல் அன்புகொண்ட என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களும் தமிழக மக்களும் என்னுடைய இந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்'' என்றும் ரஜினி தெரிவித்திருக்கிறார்.
அடுத்த கட்டுரைக்கு