Published:Updated:

"இனி இந்த மனிதருக்குப் பின்னால் கடைசி வரை நிற்பதுதான் வாழ்வு என முடிவெடுத்தேன்!"- தமிழருவி மணியன்

தமிழருவி மணியன்

காமராஜரின் தோற்றதால் ஏராளமான மக்கள் தலைவிரி கோலத்தோடு அழுதுக்கொண்டிருந்ததை இன்றும் என்னால் மறக்க முடியாது - தமிழருவி மணியன்

"இனி இந்த மனிதருக்குப் பின்னால் கடைசி வரை நிற்பதுதான் வாழ்வு என முடிவெடுத்தேன்!"- தமிழருவி மணியன்

காமராஜரின் தோற்றதால் ஏராளமான மக்கள் தலைவிரி கோலத்தோடு அழுதுக்கொண்டிருந்ததை இன்றும் என்னால் மறக்க முடியாது - தமிழருவி மணியன்

Published:Updated:
தமிழருவி மணியன்
தமிழகத்தில் காந்தியத்தை கடைப்பிடிப்பவர்கள் என்று ஒரு பட்டியல் போட்டால் தவறாது இவர் பெயர் தான் அங்கு முதன்மை வகிக்கும். ஆரம்பத்தில் காங்கிரஸ், பின்பு தமிழ் மாநில காங்கிரஸ், தற்போது காந்திய மக்கள் இயக்கம் என்று தமிழக அரசியலில் தொடர்ந்து 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருபவர் தமிழருவி மணியன். அவருடன் ஆனந்த விகடன் யூ-டியூப் சேனலில் கதைப்போமா நிகழ்ச்சியில் பேராசிரியர் பர்வீன் சுல்தானா நடத்திய உரையாடல் இதோ...

நீங்கள் ஒரு எழுத்தாளர், பேச்சாளர். தமிழில் ஆழ்ந்த பற்றுக்கொண்டவர். தமிழ் மீது இவ்வளவு பற்று உண்டாகக் காரணம் என்ன?

கதைப்போமா நிகழ்ச்சியில்
கதைப்போமா நிகழ்ச்சியில்

என்னுடைய வாழ்க்கையை திரும்ப எடுத்துப் பார்த்தால் அதைச் சுற்றி தோல்விதான் இருக்குமே தவிர, வெற்றி என்பதே இருக்காது. ஆனாலும் அதனால் துவண்டுவிடாமல் இன்றும் நான் வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம், தமிழ் தான். எப்போதும் நான் கண்ணதாசன் அல்லது ந. பா வின் ஏதாவது ஒரு புத்தகத்தையே படித்துக்கொண்டிருப்பேன். நான் எப்போதுமே மொழிநடைக்காக படிப்பதில்லை. அதிலிருந்து நம் அறிவுக்கு என்ன கிடைக்கிறது என்று எண்ணி தான் புத்தகங்கள் படிப்பேன். இதுவரை சுஜாதாவின் புத்தகங்கள் ஒன்றுகூட நான் படித்ததில்லை. இதை நான் அவரிடமே சொல்லியிருக்கிறேன். ந. பா, ஜெயகாந்தன், தி ஜானகிராமன் இவர்கள் மூவரைத் தாண்டி தான் நான் எப்போதும் படிப்பேன். ந. பா வினுடைய குறிஞ்சி மலரையும், பொன்விலங்கையும் படித்ததனால் தான் இன்று வரை நூற் பிடித்தாற் போல் நேர்பட என் வாழ்க்கை அமைந்திருக்கிறது. இந்த இரண்டு நாவல்கள் தான் இந்த தமிழருவி மணியனை உருவாக்கியது.

நீங்கள் காங்கிரசில் இருந்தபோது காமராஜரின் சீடராய் இருந்திருக்கிறீர்கள். காமராஜருடனான அந்த நெருக்கம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?

தமிழருவி மணியன்
தமிழருவி மணியன்

மறந்தும் அரசியலில் அடியெடுத்து வைக்கக்கூடாது என என் தந்தை என்னிடம் அடிக்கடி சொல்வார். எனக்கும் அரசியலில் மிகப்பெரிய நாட்டம் எல்லாம் கிடையாது. ஆனால் நான் மிகவும் நெஞ்சுக்குள் வைத்து ஆராதித்த மகத்தான ஒரு தலைவன், ஒரு துறவியாகவே நம் கண் முன்னே வலம்வந்த அந்த தலைவன் தன் சொந்த தொகுதியிலே தோற்கடிக்கப்பட்டார் என்ற சோகத்தை சுமக்க முடியாமல் பத்து மாணவர்களோடு மாநில கல்லுரியில் இருந்து புறப்பட்டு திருமலை சென்றோம். அங்கு ஏராளமான மக்கள் தலைவிரி கோலத்தோடு அழுதுக்கொண்டிருந்ததை இன்றும் என்னால் மறக்க முடியாது. அந்தத் தோல்வியை அறிஞர் அண்ணாவால் கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்போது தான் நான் அவரிடம் சென்று, அவர் காலில் விழுந்து, `இனி இந்த மனிதருக்குப் பின்னால் கடைசி வரை நிற்பது தான் நம் வாழ்வு' என்று முடிவெடுத்தேன்.

நீங்கள் காந்தியவாதியாக ஆன தருணம் எது?

தமிழருவி மணியன்
தமிழருவி மணியன்

1966-ல் தான் நான் மாநில கல்லூரிக்கு சென்றேன். எப்போதுமே எனக்கு தீவிர வாசிப்புதான் பிடிக்கும். பொழுதுபோக்கிற்காக வாசிப்பது பிடிக்காது. அப்போது தான் சத்திய சோதனையைப் படிக்க ஆரம்பித்தேன். அதில் தான் காந்தி என்னை புரட்டிப் போட்டுவிட்டார். இப்போது எனக்கென்று ஒரு சதுரஅடி சொத்து கிடையாது. இது நானாக நேர்த்துக்கொண்டது. உடைமையற்றவர்களின் உள்ளத்தில் இருந்து தான் உண்மையான அன்பு பிறக்கும். எப்போது நீங்கள் உங்கள் உடைமைகளை பெருக்கிக் கொண்டே போகிறீர்களோ, அப்போதே நீங்கள் மனதளவில் சுருங்கி விடுகிறீர்கள் என்று கூறியிருப்பார். அதன்படி தான் இன்று எனக்கென்று நான் சொத்து சேர்க்கவில்லை. இன்றும் நான் வாடகை வீட்டில் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். காந்தியை பின்பற்றுகிறேன். ஆனால் அதே சமயம் காந்தியின் மீது எனக்கு சில விமர்சனங்களும் உண்டு.

நீங்கள் ஆசிரியராகவும், வழக்கறிஞராகவும் பணியாற்றியிருக்கிறீர்கள்; அந்த அனுபவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்

தமிழருவி மணியன்
தமிழருவி மணியன்

ஆம், இந்து ஒற்றுமை கழக மேல்நிலைப்பள்ளியில் நான் வரலாறு, புவியியல் மற்றும் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினேன். ஆசிரியராக நான் 24 ஆண்டுகள் பணியாற்றினேன். அதன்பின் விருப்ப ஓய்வு பெற்றுவிட்டேன். உடனே அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் என்னை அழைத்து, "இன்னும் ஒரு வருடம் நீங்கள் பணியாற்றினால் முப்பது வருடங்களாக பணியாற்றியதற்கான ஓய்வூதியம் கிடைக்கும். நீங்கள் மெடிக்கல் லீவ் போட்டுட்டு வீட்ல இருங்க" என்று கூறினார். ஆனால் அதைப்பற்றி எதுவும் கவலை கொள்ளாத நான் உடனடியாக விருப்ப ஓய்வு பெற்றேன். நான் ஓய்வு பெற்ற ஒரு வாரத்திலேயே பே கமிஷன் போட்டார்கள். நான் பள்ளியில் பணியாற்றும்போது இடையில் தான் வழக்கறிஞர் படிப்பையும் முடித்தேன்.

இன்னும் பல கேள்விகளுக்கு பல சுவாரஸ்யமான பதில்களை தமிழருவி மணியன் வழங்கியிருக்கிறார். அதைக் காண...