Published:Updated:

"ஒரு பேச்சுத் துணைக்கு மட்டுமே பிரசாந்த் கிஷோர்!" - துரைமுருகன் சிறப்புப் பேட்டி

துரைமுருகன்
துரைமுருகன்

அப்படியல்ல... 1971-ல் நடைபெற்ற தேர்தலுக்கும் தற்போது நடைபெறுகிற தேர்தலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. 71-காலகட்டத்தில் எங்களிடம் வேகம் இருந்தது

அனலடிக்கும் சட்டசபை விவாதங்களின்போதும்கூட, தனது ஒற்றை அசைவினால் ஒட்டுமொத்த சபையையும் கலகலப்பாக்கிவிடுபவர் தி.மு.க பொருளாளர் துரைமுருகன். நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றிருக்கும் இந்தச் சூழலில், துரைமுருகனைச் சந்தித்தேன்...

"உண்மையைச் சொல்லுங்கள்... உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க பயந்ததுதானே?''

"திரும்பத் திரும்ப மீடியா இதுபோன்ற தவறான செய்திகளைப் பரப்பிவருகின்றன. 'உள்ளாட்சித் தேர்தல் கூடாது' என்று என்றைக்கும் நாங்கள் சொன்னதில்லை. 'முறையாக நடத்துங்கள்' என்றுதான் சொல்லிவந்தோம். வாக்கு எண்ணிக்கையை வீடியோவாகப் பதிவு செய்யவேண்டும் என்றுதான் மதுரை நீதிமன்றத்திலும் சொல்லியிருந்தோம். கடந்த பஞ்சாயத்துத் தேர்தலில், என் தொகுதியில்கூட, உண்மையாக ஜெயித்தவர்களை, 'ஜெயிக்கவில்லை' என்று முடிவை மாற்றி அறிவித்தார்கள்.

கூட்டுறவுத் தேர்தலில், தேர்தலையே நடத்தாமல், நடத்திவிட்டதாக நோட்டீஸ் ஒட்டிவிட்டுப் போனார்கள். அப்புறம் தேர்தல் ஆணையரிடம் முறையிட்டுத் தேர்தலை நடத்தி ஜெயிக்க வேண்டியதாக இருந்தது.

மற்றபடி, 'உள்ளாட்சித் தேர்தலைக் கண்டு அவர்களுக்கு பயம். தேர்தலில் நாங்கள்தான் ஜெயிப்போம்' என்று நாங்களும் சொல்வோம்; அவர்களும் சொல்வார்கள். இதெல்லாம் எலெக்‌ஷன் டைம்ல நடக்குற ஸ்டன்ட். இதையெல்லாம் நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது!''

> "தேர்தல் வியூக வல்லுநரான பிரசாந்த் கிஷோர் வந்துதான் தி.மு.க-வை வெற்றிபெற வைக்க வேண்டிய நிலையில் கட்சி இருக்கிறதா?''

"அப்படியல்ல... 1971-ல் நடைபெற்ற தேர்தலுக்கும் தற்போது நடைபெறுகிற தேர்தலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. 71-காலகட்டத்தில் எங்களிடம் வேகம் இருந்தது. இப்போது 'தி.மு.க-வுக்கும் வயசாகிவிட்டது' என்பதைக் காலமாற்றம் உணர்த்துகிறது. ஒளிவுமறைவின்றி இதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

எதுவும் சாத்தியம் இல்லை. ரஜினிகாந்த் பாவம் சார்... ஏதோ சொல்லிட்டுப் போறார். என்னைப் பொறுத்தவரை, அவர் அரசியலுக்கே வரமாட்டார்

இந்த மாற்றத்தைப் புரிந்துகொண்டு இன்றைய இளைஞர்கள் சிலரை உட்கார வைத்து 'என்ன சமாச்சாரம்' என்று கேட்கிறோமே தவிர, அவர்கள் வழிகாட்டுதலில் நாங்கள் கட்சியை நடத்தவில்லை.

லட்சியத்தை நோக்கிய எங்கள் பயணத்தில், 'போலாமா...' என்று கேட்டுச்செல்லும் இடத்தில்தான் அவர்களை வைத்திருக்கிறோமே தவிர, எங்களுக்கு யாரும் புத்தி சொல்லத் தேவையில்லை... எங்களுக்கு அது ஏற்கெனவே நிறைய இருக்கு. இருந்தாலும்கூட ஒரு பேச்சுத் துணைக்கு, லேட்டஸ்ட் டெக்னாலஜி துறையில் உள்ளவர்களிடமும் கேட்டுக்கொள்கிறோம், அவ்வளவுதான்!''

> "தகவல்தொடர்புகள் வளர்ச்சி பெறாத காலகட்டத்திலேயே திராவிடக் கொள்கைகளை வீரியமாக முன்னெடுத்துச் சென்ற கழகங்கள், இப்போது அந்தப் பணியில் பின்தங்கிவிட்டன என்பது உண்மைதானே?''

"முன்பு திராவிட இயக்கம் என்பது ஒரேயொரு கட்சியாக மட்டுமே இருந்தது. ஆனால், இப்போது அப்படியல்ல... திராவிட இயக்கம் என்ற பெயரில், பல நீர்த்துப்போன கட்சிகள் எல்லாம் வந்துவிட்டன. வெளிப்படையாகச் சொன்னால், அன்றைய காலகட்டத்தில், திராவிட இயக்கம் என்றாலே, 'பகுத்தறிவோடு இருப்பது'தான். அதனால் எங்க ஆட்களும் மிகச்சரியாக பகுத்தறிவுக் கொள்கைகளைக் கடைப்பிடித்தார்கள். ஆனால், இப்போது, 'பெரியார், அண்ணா, கலைஞர்' என்று சொல்லிக்கொண்டே நெற்றியிலும் பட்டை பட்டையாகப் போட்டுக்கொள்கிறார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வருகைக்குப் பிறகு ஏற்பட்ட இந்தச் சீரழிவினால் திராவிட இயக்கத்தின் பழைய வேகம் நீர்த்துப்போய்விட்டது.'' விரிவான பேட்டிக்கு க்ளிக் செய்க... http://bit.ly/2RmS0tu

> "மத்தியில் பா.ஜ.க ஆட்சி தொடர்ந்துகொண்டிருக்கும் இந்தச் சூழலில், பகுத்தறிவுக் கருத்துகளை முழுவீச்சில் பரப்பும் வாய்ப்பாகத்தானே இதைப் பார்க்க வேண்டும்?''

"இப்போது முழு மெஜாரிட்டியுடன் மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்கிறார்கள் பா.ஜ.க-வினர். அதனால் போனமுறை இருந்ததைவிடவும் அதிக வேகத்துடன் 'முத்தலாக் தடை, சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமைச் சட்டத் திருத்தம்' என 'டக் டக்'கெனச் செயல்படுகிறார்கள் அவர்கள். அடுத்து 'பொது சிவில் சட்ட'த்தையும் கொண்டுவந்துவிடுவார்கள்.

கிடுகிடுவென அவர்கள் போகும் வேகத்தைத் தடுத்து நிறுத்தி எதிர்க்கிற அளவுக்குக்கூடத் தமிழ்நாட்டில் தைரியம் இல்லை. எதிர்க்கட்சியாக இருந்துகொண்டு நாங்கள் எதிர்க்கிறோம். ஆனால், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கும் ஆளுங்கட்சியின் எதிர்ப்புக்கும் வித்தியாசம் உண்டு.

கேரளாவில், 'குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை அமல்படுத்த மாட்டோம்' என்று தீர்மானமே இயற்றி விட்டார்கள். மேற்கு வங்கம் மம்தா, பா.ஜ.க கூட்டணியில் இருந்த ஜெகன்மோகன் ரெட்டியும் கூட 'அமல்படுத்தமாட்டோம்' எனச் சொல்லி விட்டார்கள். ஆனால் இங்கேயோ, அதைப்பற்றி வாயைக்கூடத் திறக்கமாட்டேன் என்கிறார்களே!''

> "ரஜினிகாந்த், '2021-ல் அற்புதம் நிகழும் என்கிறார்; கமல்ஹாசனோ '2021 நமக்கான ஆட்சி' என்கிறார். இரண்டில் எது சாத்தியம்?''

"எதுவும் சாத்தியம் இல்லை. ரஜினிகாந்த் பாவம் சார்... ஏதோ சொல்லிட்டுப் போறார். என்னைப் பொறுத்தவரை, அவர் அரசியலுக்கே வரமாட்டார்; அப்படியே வந்தாலும் ஜொலிக்கமாட்டார்! 'ரஜினி' என்ற பெயர் உச்சரிப்புக்காகவே ஓராயிரம் இளைஞர்கள் திரண்ட அந்தக் காலமெல்லாம் முடிந்துபோய் விட்டது.

துரைமுருகன்
துரைமுருகன்

ரஜினி, கமல் இருவருமே நடிகர்கள். இந்த ஷூட்டிங்கில் ஒரு மாதிரியாக இருப்பார்கள்; அடுத்த ஷூட்டிங்கில் வேறு மாதிரியாக இருப்பார்கள். தொடர்ச்சியாக இவர்கள் இருவரும் எப்படி இருப்பார்கள் என்று சொல்லமுடியாது. நடிகராக இவர்கள் வாழ்ந்த வாழ்க்கையே வேறு.

அரசியலில் தினமும் காலையில் எழுந்ததும் மக்கள் பிரச்னையைத் தீர்க்கப் போராட்டம், பொதுக்கூட்டம் என்று சிரமப்பட்டு உழைக்க வேண்டும். தெருவோர டீக்கடையில் இறங்கி டீ குடிக்க வேண்டும். தொண்டர்களின் வீட்டு விசேஷம் என்றாலும் துக்க நிகழ்வு என்றாலும் மாலையை எடுத்துக்கொண்டு ஓடோடிப்போய் முதல் ஆளாக நிற்க வேண்டும். இதையெல்லாம், வெறும் நடிப்பாக வேண்டுமானால் ரஜினி, கமலால் செய்ய முடியுமே தவிர, இங்கே இயல்பாக நின்று நிலைத்திருக்க இவர்களால் முடியாது!''

> "கருணாநிதி இல்லாத இந்த ஒன்றரை ஆண்டுக்கால அரசியல் வாழ்க்கை எப்படி இருக்கிறது?''

> ''அறிவாளிகளைப் பக்கத்தில் வைத்துக்கொள்ளாத தலைவராக ஸ்டாலின் இருக்கிறார்' என்று பழ.கருப்பையா குற்றம் சாட்டிவிட்டு, கட்சியை விட்டு வெளியேறியிருக்கிறாரே?''

> "கடந்த 50 ஆண்டுக்காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த திராவிடக் கட்சிகள், மொழி, இன உணர்வை மக்களிடையே வளர்க்கத் தவறிவிட்டது என்று சொல்கிறீர்களா?''

> "தமிழ்நாடு பெரியார் மண் அல்ல; ஆன்மிக பூமி என்று சிலர் பேச ஆரம்பித்திருக்கிறார்களே?''

> "தமிழக ஆட்சியாளர்களை தொடர்ந்து சாடுகிறீர்கள். ஆனால், இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தமிழ்நாடுதானே விருது வாங்கியிருக்கிறது?''

- இந்தக் கேள்விகளுக்கு அளித்த விரிவான பதில்களை உள்ளடக்கிய முழுமையான பேட்டியை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > "தி.மு.க-வுக்கு வயதாகிவிட்டது!" https://www.vikatan.com/government-and-politics/politics/exclusive-interview-with-dmk-durai-murugan

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு