Election bannerElection banner
Published:Updated:

``என் பேச்சை கவனித்து, ஜெயலலிதா கொண்டுவந்த திட்டம்" - ரவிக்குமார் பகிர்வு

ரவிக்குமார்
ரவிக்குமார்

'ரவிக்குமார் எவ்வளவு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசியிருக்கிறார் பாருங்கள்... இதுபோன்ற விஷயங்களை நீங்களும் பேசவேண்டும்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ரவிக்குமார் - (வி.சி.க மக்களவை உறுப்பினர்):

''2008-ம் வருடம் ஜூனியர் விகடனில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தேன். அதில், 'இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் கருப்பைப் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாவோர் எண்ணிக்கை அதிகம்' என்ற புள்ளிவிவரத்தோடு கூடிய கட்டுரை ஒன்றை எழுதியிருந்தேன்.

பின்னர் சட்டமன்றத்திலும், இப்பிரச்னை குறித்துக் கேள்வி எழுப்பி, 'இந்த நோய்த்தொற்று ஏற்படுவதற்கு பெண்களுக்கான மாதவிடாய் சுகாதாரம் முக்கிய காரணியாக இருக்கிறது. எனவே, மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக நாப்கின்கள் தயார் செய்து பள்ளி மாணவிகளுக்கு அரசே இலவசமாக வழங்கவேண்டும்' என்று சட்டமன்றத்திலும் பேசியிருந்தேன்.

அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தங்கள் கட்சி உறுப்பினர்களை அழைத்து, 'ரவிக்குமார் எவ்வளவு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசியிருக்கிறார் பாருங்கள்... இதுபோன்ற விஷயங்களை நீங்களும் பேசவேண்டும்' என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த விஷயத்தை, பொள்ளாச்சி ஜெயராமன் அப்போது சட்டசபையில் நட்பின் அடிப்படையில் என்னிடம் தெரிவித்திருந்தார்.

``என் பேச்சை கவனித்து, ஜெயலலிதா கொண்டுவந்த திட்டம்" - ரவிக்குமார் பகிர்வு

பின்னர், 2011-ல் அ.தி.மு.க வெற்றியடைந்து ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், முதல் பட்ஜெட்டிலேயே இந்த இலவச சானிட்டரி நாப்கின் திட்டத்தை அறிவிக்கவும் செய்தார்.''

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் - (தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்)

"10 வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் சார்பில், சென்னையில் நடைபெற்ற விழா மேடையில் நான் பேசி முடித்த பிறகு, கலைஞர் பேசினார்.

அப்போது, 'ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேச்சைக் கேட்டதும் அவரின் தந்தை ஈ.வெ.கி.சம்பத் உடனான பழைய ஞாபகங்கள் எல்லாம் என் நினைவுக்கு வருகின்றன. தந்தையைப் போன்றே பேச்சுத்திறன், சொல்லவரும் கருத்துகளை யாருக்கும் அஞ்சாமல் முன்வைக்கும் துணிச்சல் என அனைத்திலும் தந்தையை அப்படியே பிரதிபலிக்கிறார்.

ஈ.வி.கே.எஸ் இளங்கோவ
ஈ.வி.கே.எஸ் இளங்கோவ

அதனால்தானோ என்னவோ, பல சமயங்களில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் எதிர்க்கட்சியாக இருந்துகொண்டு எங்களை விமர்சித்தபோதும்கூட, அவர்மீதான என் பாசம், அன்பு குறையவேயில்லை. அவரைத் 'தோழர்' என்று கூப்பிடுவதா அல்லது 'மகனே' என்று அழைப்பதா என்றுதான் தெரியவில்லை...' என்று உணர்ச்சிவசப்பட்டார்.

மேடையில் அமர்ந்திருந்த நான் உடனே எழுந்துநின்று, 'மகன் என்றே கூப்பிடுங்கள்' என்றேன். அந்தக் கணம் இருவருமே நெகிழ்ந்து போனோம்!''

- 'மாற்றுக்கட்சியினர் உங்களைப் பாராட்டியிருக்கிறார்களா' என்ற கேள்வியை தலைவர்கள் சிலரிடம் முன்வைத்தோம். அதற்கு அவர்கள் சொன்ன நெகிழ்ச்சியான பதில்கள் இவை. இதே கேள்விக்கு வைகோ - (ம.தி.மு.க பொதுச்செயலாளர்), அமைச்சர் ஜெயக்குமார் (அ.தி.மு.க), பீட்டர் அல்போன்ஸ் - (காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்), திருச்சி சிவா (தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்) மற்றும்

பொன் ராதாகிருஷ்ணன் - (பா.ஜ.க - முன்னாள் மத்திய அமைச்சர்) ஆகியோர் பகிர்ந்த சுவாரஸ்யமான தருணங்களை முழுமையாக ஆனந்த விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... > மாற்றான் தோட்டத்து மலர்மாலை! https://bit.ly/3hItpvU

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு