Published:Updated:

மாற்றான் தோட்டத்து மலர்மாலை!

வைகோ, பீட்டர் அல்போன்ஸ், அமைச்சர் ஜெயக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
வைகோ, பீட்டர் அல்போன்ஸ், அமைச்சர் ஜெயக்குமார்

எதிரிகளையும் நண்பர்களாக மாற்றிவிடக்கூடிய ராஜதந்திரக் கலை கலைஞருக்கு மட்டுமே கைவந்த கலை!

மாற்றான் தோட்டத்து மலர்மாலை!

எதிரிகளையும் நண்பர்களாக மாற்றிவிடக்கூடிய ராஜதந்திரக் கலை கலைஞருக்கு மட்டுமே கைவந்த கலை!

Published:Updated:
வைகோ, பீட்டர் அல்போன்ஸ், அமைச்சர் ஜெயக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
வைகோ, பீட்டர் அல்போன்ஸ், அமைச்சர் ஜெயக்குமார்
‘மாற்றுக்கட்சியினர் உங்களைப் பாராட்டியிருக்கிறார்களா’ என்ற கேள்வியை தலைவர்கள் சிலரிடம் முன்வைத்தோம். அதற்கு அவர்கள் சொன்ன நெகிழ்ச்சியான பதில்கள் இவை.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வைகோ -  (ம.தி.மு.க பொதுச்செயலாளர்)

‘`2005-ல் திண்டுக்கல்லில் தி.மு.க மாநாடு நடைபெற்றது. அதில், கலைஞரோடு எனக்கு ஏற்பட்ட ஓர் அனுபவத்தை விவரித்துப் பேசினேன். அந்தப் பேச்சைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்ட கலைஞர், கூட்டத்துக்குப் பிறகு தன் சகாக்களிடம் என் பேச்சைக் குறிப்பிட்டு ரொம்பவே உருகியிருக்கிறார்.

வைகோ
வைகோ

நான் அன்றைக்குப் பேசிய அந்தப் பேச்சுக்கான சம்பவம் என்னவென்று முதலில் சொல்லிவிடுகிறேன்.அதாவது, ‘கலைஞரும் தயாளு அம்மாளும் மதுரையிலிருந்து சென்னைக்கு ரயிலில் பயணம் செய்வதாக ஏற்பாடு. அதே ரயிலில், அ.தி.மு.க அமைச்சர் ஒருவரும் தனியாகப் பயணம் செய்ய கூபே பதிவு செய்திருந்தார். ஆனால், அவரது பயணம் திடீரென ரத்தானதைத் தொடர்ந்து, அமைச்சர் பயணம் செய்ய வேண்டிய கூபேயை கலைஞருக்கு ஒதுக்கித் தந்தனர். நானும் அதே ரயிலில்தான் சென்னைக்கு வந்துகொண்டிருந்தேன்.

ரயில் கிளம்பி திண்டுக்கல் ஸ்டேஷனை வந்தடைந்தது. அங்கே ஏற்கெனவே பயணத்தை ரத்து செய்திருந்த அ.தி.மு.க அமைச்சர், ரயிலில் ஏறுவதற்காகக் காத்துக்கொண்டிருந்தார். தான் பதிவு செய்திருந்த கூபேயில், கலைஞர் பயணம் செய்துகொண்டிருந்ததைக் கேள்விப்பட்டவர் அதிகாரிகளிடம் தகராறு செய்துகொண்டிருந்தார். உடனடியாக அந்த இடத்துக்கு வந்து சேர்ந்த நான், ‘நீங்கள்தான் பயணத்தை ரத்து செய்துவிட்டீர்களே... பின்னர் ஏன் தகராறு செய்கிறீர்கள்? பயணிப்பது என்றால், அதே கோச்சில் காலியாக உள்ள படுக்கையைப் பயன் படுத்திக் கொள்ளலாமே...’ என்று சொன்னேன்.

ஆனால் அவரோ, நான் ஏற்கெனவே பதிவு செய்திருந்த கூபேயில்தான் பயணிப்பேன் என்று ரயில்வே பிளாட்பாரத்திலேயே அமர்ந்து பிடிவாதம் செய்தார். உடனே நான், ‘கலைஞர் பயணம் செய்கிற கூபே கதவில் யாரேனும் கை வைத்தால், அந்தக் கையே இருக்காது’ என்று எச்சரித்துவிட்டு, கூபே வாசலிலேயே காவலுக்கு நின்றுகொண்டேன். இதையடுத்து காலியாக இருந்த படுக்கைகளிலேயே சென்னைக்குப் பயணமானார் அமைச்சர்.

இந்தச் சம்பவத்தைத்தான் அன்றைக்கு திண்டுக்கல் மாநாட்டு மேடையிலும் நான் உணர்ச்சிபூர்வமாக விவரித்துப் பேசியதைக் கேட்டுக் கண்ணீர் வடித்தார் கலைஞர்.”

அமைச்சர் ஜெயக்குமார் (அ.தி.மு.க)

‘`2006 முதல் 2011 வரையிலான தி.மு.க ஆட்சியின்போது, சட்டசபையில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த நான், நிறைய கேள்விகள் கேட்டிருக்கிறேன். குறிப்பாக மின்வாரியத் துறையின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி நிறைய கேள்விகள் கேட்டிருக்கிறேன். காரணம்... அதற்கு முந்தைய அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், நான்தான் மின்சாரத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்திருந்தேன். எனவே, துறை ரீதியாக நான் கேட்ட ஆழமான கேள்விகள் எல்லாம், அப்போதைய தி.மு.க மின்சாரத் துறை அமைச்சரான ஆற்காடு வீராசாமிக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

ஒருமுறை அவையிலேயே, ‘எதிர்க்கட்சி உறுப்பினர் ஜெயக்குமார் மிக நன்றாகக் கேள்வி கேட்கிறார். கடந்த ஆட்சிக்காலத்தில் மின்சாரத் துறை அமைச்சராகவும் சிறப்பாகப் பணி செய்தவர் அவர்’ என்று பாராட்டிப் பேசினார் ஆற்காடு வீராசாமி.’’

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் - (தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்)

“10 வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் சார்பில், சென்னையில் நடைபெற்ற விழா மேடையில் நான் பேசி முடித்த பிறகு, கலைஞர் பேசினார். அப்போது, ‘ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேச்சைக் கேட்டதும் அவரின் தந்தை ஈ.வெ.கி.சம்பத் உடனான பழைய ஞாபகங்கள் எல்லாம் என் நினைவுக்கு வருகின்றன. தந்தையைப் போன்றே பேச்சுத்திறன், சொல்லவரும் கருத்துகளை யாருக்கும் அஞ்சாமல் முன்வைக்கும் துணிச்சல் என அனைத்திலும் தந்தையை அப்படியே பிரதிபலிக்கிறார். அதனால்தானோ என்னவோ, பல சமயங்களில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் எதிர்க்கட்சியாக இருந்துகொண்டு எங்களை விமர்சித்தபோதும்கூட, அவர்மீதான என் பாசம், அன்பு குறையவேயில்லை. அவரைத் ‘தோழர்’ என்று கூப்பிடுவதா அல்லது ‘மகனே’ என்று அழைப்பதா என்றுதான் தெரியவில்லை...’ என்று உணர்ச்சிவசப்பட்டார்.

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

மேடையில் அமர்ந்திருந்த நான் உடனே எழுந்துநின்று, ‘மகன் என்றே கூப்பிடுங்கள்’ என்றேன். அந்தக் கணம் இருவருமே நெகிழ்ந்து போனோம்!’’

பீட்டர் அல்போன்ஸ் - (காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்)

‘`1989-ல் கலைஞர் முதல்வராக இருந்தார். நான் எதிர்க்கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏ. அதனால், சட்டசபையில் நிறைய விஷயங்களில் காரசாரமாக எதிரெதிர் நிலையில் மோதிக்கொள்வோம்.

ஒருமுறை பாளையங்கோட்டையில் நடைபெற்ற நலத்திட்ட விழா ஒன்றில், கலைஞரோடு தொகுதி எம்.எல்.ஏ என்ற முறையில் நானும் பங்கேற்றேன். விழாவில், நேரமின்மை கருதி எம்.எல்.ஏ-க்கள் யாருக்கும் பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆனாலும்கூட, கலைஞர் எனக்கு மட்டும் மேடையில் பேச வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார். நானும் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, ‘இரட்டைப் பாலம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் என எங்கள் மாவட்டத்துக்கு நிறைய செய்துகொடுத்த கலைஞர், இன்னும் நிறைய செய்யவேண்டும்’ என்று கோரி ஒரு நீண்ட பட்டியலையே மைக்கில் பேசி முடித்தேன். அடுத்ததாகப் பேச ஆரம்பித்த கலைஞர், ‘தம்பி பீட்டர் அல்போன்ஸை நான் பார்க்கும்போதெல்லாம், எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். காரணம்... அவரது முகத்தில் நான் உதயசூரியனைப் பார்க்கிறேன்’ என்று பேசிவிட்டார்.

பீட்டர் அல்போன்ஸ்
பீட்டர் அல்போன்ஸ்

அவ்வளவுதான்... மறுநாள் தினசரிகள் அனைத்திலும், கலைஞர் பேசிய ‘பீட்டர் அல்போன்ஸ் முகத்தில் உதய சூரியனைப் பார்க்கிறேன்’ என்ற வரிகள்தான் தலைப்புச் செய்தியாகிவிட்டது. எதிரிகளையும் நண்பர்களாக மாற்றிவிடக்கூடிய ராஜதந்திரக் கலை கலைஞருக்கு மட்டுமே கைவந்த கலை!’’

ரவிக்குமார் -  (வி.சி.க மக்களவை உறுப்பினர்)

‘`2008-ம் வருடம் ஜூனியர் விகடனில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தேன். அதில், ‘இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் கருப்பைப் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாவோர் எண்ணிக்கை அதிகம்’ என்ற புள்ளிவிவரத்தோடு கூடிய கட்டுரை ஒன்றை எழுதியிருந்தேன். பின்னர் சட்டமன்றத்திலும், இப்பிரச்னை குறித்துக் கேள்வி எழுப்பி, ‘இந்த நோய்த்தொற்று ஏற்படுவதற்கு பெண்களுக்கான மாதவிடாய் சுகாதாரம் முக்கிய காரணியாக இருக்கிறது. எனவே, மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக நாப்கின்கள் தயார் செய்து பள்ளி மாணவிகளுக்கு அரசே இலவசமாக வழங்கவேண்டும்’ என்று சட்டமன்றத்திலும் பேசியிருந்தேன்.

ரவிக்குமார்
ரவிக்குமார்

அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தங்கள் கட்சி உறுப்பினர்களை அழைத்து, ‘ரவிக்குமார் எவ்வளவு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசியிருக்கிறார் பாருங்கள்... இதுபோன்ற விஷயங்களை நீங்களும் பேசவேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த விஷயத்தை, பொள்ளாச்சி ஜெயராமன் அப்போது சட்டசபையில் நட்பின் அடிப்படையில் என்னிடம் தெரிவித்திருந்தார்.

பின்னர், 2011-ல் அ.தி.மு.க வெற்றியடைந்து ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், முதல் பட்ஜெட்டிலேயே இந்த இலவச சானிட்டரி நாப்கின் திட்டத்தை அறிவிக்கவும் செய்தார்.’’

திருச்சி சிவா (தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்)

‘’தி.மு.க-வும் பா.ஜ.க-வும் கொள்கை ரீதியாக எதிரெதிர் துருவங்களில் நிற்பவை. ஆனாலும்கூட, பா.ஜ.க-வைச் சேர்ந்த மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயும், முன்னாள் மத்திய அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜும் என் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தவர்கள்.

திருச்சி சிவா
திருச்சி சிவா

2001-ல் நாடாளுமன்றத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, நாங்கள் மைய மண்டபத்தில் இருந்தோம். அப்போது முதலில், பெண் உறுப்பினர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றத் திட்டமிடப்பட்டது. ஆனாலும்கூட சுஸ்மா ஸ்வராஜ், பெண்களோடு சேர்ந்து வெளியேற மறுத்துவிட்டார். அதற்கான காரணத்தை மறுநாள் அவையிலும் தெரிவித்தார் அவர். அதாவது, ‘பெண் என்ற காரணத்தைப் பயன்படுத்தி நான் உயிர் தப்பிக்க விரும்பவில்லை. அடுத்து, திருவள்ளுவர், பாரதியார் பற்றி எனக்கு திருச்சி சிவா நிறைய சொல்லிக்கொடுத்துள்ளார். அதனாலும்தான் என் நிலையில் நான் உறுதியாக இருந்தேன்’ என்றவர் பாரதியாரின் ‘அச்சமில்லை அச்சமில்லை...’ பாடல் வரியையும் தமிழிலேயே கூறி விளக்கினார்.

சுஸ்மா ஸ்வராஜ், இந்தி மொழிக்கு ஆதரவானவர் என்றாலும்கூட, என்னிடம்் தமிழ் கற்றுக் கொண்டார். என்னை யாரிடம் அறிமுகம் செய்தாலும் ‘என் தமிழ் குரு இவர்’ என்றுதான் அடையாளப்படுத்துவார்.’’

பொன் ராதாகிருஷ்ணன் -  (பா.ஜ.க - முன்னாள் மத்திய அமைச்சர்)

“2004-ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா தலைமையில் நாகர்கோவிலில் ஒரு கூட்டம். மேடையில் அமர்ந்திருந்த ஜெயலலிதாவிடம் ‘இந்தி மொழியின் அவசியம் குறித்துப் பேசலாம் என நினைக்கிறேன்’ என்ற என் கருத்தைச் சொன்னேன். அவரும் ‘அதற்கென்ன... தாராளமாகப் பேசுங்கள்’ என்று சொல்லிவிட்டார். உடனே நானும் ‘தமிழ்நாட்டில் இந்தி மொழியைக் கற்றுக்கொள்ள விரும்புவோருக்காக, இந்தியை விருப்பமொழியாக அனுமதிக்க வேண்டும்’ என்ற அடிப்படையில் மேடையில் பேசிவிட்டேன். ஆனால், அதன்பிறகு பேசிய, கா.காளிமுத்து, என் பேச்சுக்கு மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துப் பேசினார். அதன்பிறகு பேசிய ஜெயலலிதாவும், ‘மத்திய அமைச்சர் ஒரு கருத்தைத் தெரிவித்தி ருக்கிறார். ரொம்ப சந்தோஷம். முதலில், தமிழ் மொழியை மத்திய அரசு, தேசிய மொழியாக அங்கீகரிக்கட்டும். அதன்பிறகு நாங்களும் உங்கள் கோரிக்கையைப் பரிசீலிக்கிறோம்’ என்றார்.

பொன் ராதாகிருஷ்ணன்
பொன் ராதாகிருஷ்ணன்

விழா முடிந்து கிளம்பும்போதும் என்னிடம் பேசியவர், ‘நீங்கள் இப்படியொரு கருத்தை இந்த மேடையில் பேசியது நல்லதுதான். இதனால்தானே நாங்களும் எங்கள் கோரிக்கையை வைப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது’ என்றார்.’’