Published:Updated:

அதிகாரம்... அந்தரங்கம்! - “மாமன் தவுலத் தெரியும்ல!”

அதிகாரம்... அந்தரங்கம்
பிரீமியம் ஸ்டோரி
அதிகாரம்... அந்தரங்கம்

- மாஸ்க் மேன்

அதிகாரம்... அந்தரங்கம்! - “மாமன் தவுலத் தெரியும்ல!”

- மாஸ்க் மேன்

Published:Updated:
அதிகாரம்... அந்தரங்கம்
பிரீமியம் ஸ்டோரி
அதிகாரம்... அந்தரங்கம்

“எப்பப் பாத்தாலும் பெட்டிக்கடையில குந்திக்குனு போற வர்ற பொண்ணுகளை டாவடிக்கிறதே இவனுக்கு பொழப்பா போச்சு” என்று ஏரியா மூதாட்டிகள் வாரித் தூற்றினாலும், “ஏய் கிழவி... உன் பேத்தியை எனக்கு கட்டிவெக்குறியா... மாமன் தவுலத் தெரியும்ல” என்று அசராமல் அடித்துவிடுவார் அந்த இளைஞர். 1980-களின் தொடக்கத்தில் நம் தலைவரின் அரசியல் பயணம் ‘சார்பட்டா’ களத்திலிருந்துதான் தொடங்கியது!

அன்றைக்கு அந்தப் பகுதியில் தூதரகத்தின் பெயரைக்கொண்ட பிரபல ஹோட்டல் வாசலில் இருந்த பெட்டிக்கடைதான் தலைவரின் டென்ட். நடந்து செல்லும் அத்தனை பெண்களைப் பார்த்து தலைவர் ஜொள்ளுவிட்டாலும், பேரழகியான அந்த நர்ஸ்மீது தலைவருக்கு தனிப்பிரியம். அந்தப் பெண் தன்னைக் கடந்து செல்லும்போதெல்லாம், “ஆத்தா... ஆத்தோரமா வாறியா...” என்று அப்போதே ‘ஓரஞ்சாரமாக’ வரச் சொல்லி சிக்னல் கொடுத்தவர்தான் தலைவர். கப்பல் தொடங்கி கன்டெய்னர் வரை ஏரியாவில் தாட்டியம் செய்துகொண்டிருந்தவருக்கு அன்றைக்கு ஆட்சியிலிருந்த அரசியல் கட்சியில் இளைஞரணிப் பதவி கிடைத்தது.

பதவி கிடைத்ததும், முதல் வேலையாக கிளப் டான்ஸராக இருந்த ஒரு பெண்ணையே தனது ஆசைநாயகியாக்கிக்கொண்டார் தலைவர். அந்த நேரத்தில் இவரது தொகுதியில் அவர் சார்ந்திருந்த கட்சியில் போட்டியிட சரியான ஆள் கிடைக்காமல் கட்சித் தலைமை அல்லாடியபோது, இவரது பெயர் தலைமைக்கு எட்டியது. அடித்தது யோகம்... சீட்டை வாங்கியவர் ஜெயித்தும்விட்டார். எம்.எல்.ஏ-வாக கோட்டைக்குப் போகத் தயாரானவருக்கு, ‘மாண்புமிகு’ பதவியும் முதல் தடவையே கிடைத்தது. சல்லாபப் பிரியருக்கு சைரன் கார் கிடைத்தால் சும்மா இருப்பாரா?!

அன்றைக்கு அதிகாரத்தில் இருந்த பலரும் “இந்த நடிகையைப் பிடித்துள்ளது” என்று உரிமையோடு மார்க்கெட் இழந்த ஒரு நடிகரை ‘தாஜா’ செய்வது வழக்கம். நம் தலைவரும் பீக்கில் இருந்த நடிகைகள் இருவரை கேட்க... அந்த நடிகரோ அதில் ஒருவரை குறிப்பிட்டு, “எந்தா சாரே... நிங்களுடைய சீனியரின் காதலி உங்க நாயகி ஆக முடியாது. இன்னொரு நடிகையை வேணும்னா கேட்டுப் பார்க்கலாம்...” என்று எச்சரிக்கை செய்தார். தலைவர் காலையில் கோட்டைக்குக் கிளம்பும்போதே இரவு வேட்டைக்கு யார் என்பதை அந்த நடிகரிடம் விசாரித்துவிடுவார்.

அடுத்த தேர்தலில் அதிகாரம் கைவிட்டுப் போன நிலையில், தலைவர் தன் மனைவியுடன் கடற்கரை சாலைப் பக்கம் குடியிருந்தார். ஒருமுறை தலைவரின் மனைவி வெளியூர் கிளம்பவே குதூகலித்தவர், “பட்சி எதுவும் கிடைக்குமா?” என்று நண்பருக்குத் தகவல் அனுப்பினார். நண்பரும் கச்சிதமாக பட்சியைக் கரை சேர்த்துவிட்டார். அந்த நேரம் பார்த்து தலைவரின் மனைவி வந்துவிடவே, நடுநடுங்கிப்போன நண்பர் ஓடியேவிட்டார். கொந்தளித்துப்போன வீட்டு அம்மணி அறைக்கதவை உடைத்து அந்தப்புர நாயகியையும் கணவனையும் புரட்டியெடுத்துவிட்டார்.

மீண்டும் தலைவருக்கு `மாண்புமிகு’ யோகம் கிட்டியது. வாரந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தை நடத்த ஆரம்பித்தார். அப்படியொரு கூட்டத்துக்கு வந்த பெண்ணைப் பார்த்தவுடன் தலைவருக்கு’ பிடித்துப்போனது. ஆரம்பத்தில் ‘நாக’ பாம்பாகச் சீறியவரை மகுடி ஊதியே மயக்கினார் தலைவர். அடுத்தடுத்த மாதங்களில் அந்தப் பெண்ணின் சகோதரிகள் இருவருமே தலைவருக்கு தலைவாழை இலையில் விருந்து படைத்தார்கள். அதில் ஒருவர் அந்த ஏரியாவின் கவுன்சிலரானது கிளைக் கதை!

அதிகாரம்... அந்தரங்கம்! - “மாமன் தவுலத் தெரியும்ல!”

ஒருமுறை தலைவரின் எல்லைக்குள் இருந்த கட்சி நிர்வாகி ஒருவர், தனது இல்ல நிகழ்ச்சிக்குத் தலைவரை அழைத்தார். இல்ல நிகழ்ச்சிக்குச் சென்றவர் அடுத்தடுத்த நாள்களில் அந்த இல்லத்தரசியையே கைப்பற்றினார். கணவர் கட்சித் தலைமை வரை பேசியும் பருப்பு வேகவில்லை. ஒருகட்டத்தில் அந்த அம்மணியை தலைவர் ஓரங்கட்ட... ரெளடி பேபியானார் அம்மணி. தலைவரின் லீலைகளைக் கடிதமாக எழுதி தலைமைக்கு அனுப்ப... ரகளை களைகட்டியது. வேறு வழியில்லாமல் பெரிதாக செட்டில் செய்து அம்மணியை வழியனுப்பினார் தலைவர்!

தனது எம்.எல்.ஏ அலுவலகத்தின் மாடியிலேயே அந்தப்புர அறையை வைத்திருந்த ஒரே தலைவர் இவராகத்தான் இருக்கும். கார் வந்துசெல்லத் தனிவழி, யார் கண்ணிலும் படாமல் மாடிக்குச் செல்ல தனிப் படிக்கட்டுகள் என அரசுக் கட்டடத்தை அம்சமாக வடிவமைத்திருந்தார். தலைவருக்கு ஒரு நல்ல பழக்கம். அறைக்கு வரும் அழகிகளுக்குச் சாப்பாட்டில் சின்னக் குறைகூட வைக்க மாட்டார். ராஜ விருந்து என்பார்களே... தலைவர் கொடுக்கும் விருந்து அப்படித்தான் இருக்கும். “ரூமுக்குள்ள போனவுடனே பெரிய கண்ணாடி பவுல் நிறையா அல்வா கொடுப்பார். பாதம், பிஸ்தா, முந்திரி மட்டுமே அரைச்சு, எருமைப் பால் ஊத்திக் கிண்டி, குங்குமப் பூ, உலர் திராட்சை தூவின அல்வா அது. சாப்பிட்டா அன்னைக்கு முழுக்கப் பசிக்காது... ஆனா, வேற பசி தீயா கொதிக்கும்” என்று தலைவரின் அல்வா ரகசியத்தை அவ்வப்போது அவரது அல்லக்கைகள் கிண்டுவது வழக்கம்.

தலைவருக்கு, தொகுதிக்குள் நகர்வலம் வருவது பிடித்தமான விஷயம். வீதி வீதியாக நடந்தே செல்பவர், “என்னம்மா... உன் புருஷன் நல்லா பார்த்துக்குறானா?” என்று உரிமையோடு நலம் விசாரித்துவிட்டு, “ஏதாச்சும் பிரச்னைன்னா என் நம்பர்ல பேசு” என்று அடித்துவிடுவார். தப்பித் தவறி போன் செய்துவிட்டால் போதும்... ‘கடலை’ போடுவதில் தலைவரை அடித்துக்கொள்ள ஆளில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு அப்படி அலைபேசியில் பேசித்தான் தமிழகம் முழுவதும் அலையடித்தது தலைவரின் பெயர். வாரிசு பிரச்னை வம்புக்கு இழுக்க... தலைமகனே தலையிலடித்துக்கொண்ட நிஜமெல்லாம் அரங்கேறியது. அதற்கெல்லாம் அசருபவரா தலைவர்... இப்போதும் அவர் வீசும் வலையில் சிறியதும் பெரியதுமாக மீன்கள் சிக்கிக்கொண்டுதான் இருக்கின்றன!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism