Published:Updated:

`ரஜினி எதிர்ப்பை ஏன் கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி?!'-பின்னணியில் கூட்டணிக் கணக்குகள்

ரஜினி, எடப்பாடி
ரஜினி, எடப்பாடி

தமிழகத்தில் நல்ல தலைமைக்கு வெற்றிடம் இருப்பதாக ரஜினி பேசுவது இது முதல் முறையல்ல. அப்போதெல்லாம் பேசாத எடப்பாடி, இப்போது பேச வேண்டிய காரணமென்ன?

நடிகர் ரஜினிகாந்த், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம், ``எடப்பாடி, ஸ்டாலின் எனத் தமிழக முதல்வர் பதவிக்குக் கடும்போட்டி நிலவுகிறது. இச்சூழலில், நீங்கள் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறீர்களா?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த ரஜினி,``இன்னும் ஒரு ஆளுமையான, சரியான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது” எனப் பதில் அளித்தார். நடிகர் ரஜினியின் இந்தப் பதில், தமிழக அரசியலில் கொதிநிலையை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்பது, நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க பெற்ற வெற்றியால் நிரூபணமாகிவிட்டது
எடப்பாடி பழனிசாமி

ரஜினியின் பதிலை ஆமோதித்த பா.ஜ.க மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், ``தமிழகத்தில் சரியான தலைமைக்கு வெற்றிடம் இருப்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன்” என்று பேசியிருந்தார். இதனால், அ.தி.மு.க. - பி.ஜே.பி கூட்டணிக்குள் சலசலப்புக் குரல்கள் கேட்கத் தொடங்கின.

ரஜினி பேட்டி கொடுத்த அன்றே, விக்கிரவாண்டி பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``பாதிநாள் இங்கேயும் மீதிநாள் வெளியேயும் இருப்பவர்களுக்கு ஆசை வந்துள்ளது. 67 ஆண்டுகள் வேறொரு தொழிலில் இருந்துவிட்டு, இதையும் ஒரு தொழில்போல எண்ணி வர நினைக்கிறார்கள். இது அரசியல். மக்களுக்காக 24 மணிநேரமும் உழைப்பவர்கள்தான், இதில் இருக்க முடியும்.

திடீரென அரசியலுக்குள் பிரவேசித்து, பதவியைப் பிடித்துவிடத் துடிக்கிறார்கள். வீட்டிலிருந்து பேட்டி கொடுப்பவர்களால் அது முடியாது. உழைப்பின் மூலமாக மக்களுக்கு அடையாளம் காட்டப்பட்டவர்கள்தான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா. எத்தனையோ பேர் கட்சி தொடங்கி காணாமல் போய்விட்டார்கள்” என்று முதல்முறையாக ரஜினியை நேரடியாகத் தாக்கி எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதுதொடர்பாக, கோவை விமானநிலையத்தில் பேட்டியளித்தபோதும், `அவர் ஒரு நடிகர். கட்சி தொடங்கியிருக்கிறாரா.. அவர் ஒரு தலைவரா.. சம்பந்தம் இல்லாத ஒருத்தர் கருத்து கூறினால், அதைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்.. தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்பது, நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க பெற்ற வெற்றியால் நிரூபணமாகிவிட்டது' என்றார் எடப்பாடி பழனிசாமி.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

` கடந்தாண்டு எம்.ஜி.ஆர் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் ரஜினி பேசியபோதும், தமிழகத்தில் நல்ல தலைமைக்கு வெற்றிடம் இருப்பதாகப் பேசியிருந்தார். அப்போது அமைச்சர் ஜெயக்குமார் போன்றவர்கள்தான் எதிர்வினையாற்றினர். அப்போதெல்லாம் பேசாத எடப்பாடி, இப்போது பேச வேண்டிய காரணமென்ன?' என்ற கேள்வியை அ.தி.மு.க வட்டாரத்தில் கேட்டோம்.

``அ.தி.மு.க-வில் உள்ள கூட்டணிக் கட்சிகளைத் தக்கவைத்துக் கொள்வதுதான் எடப்பாடியின் காரசார பேச்சின் சாராம்சம். `ரஜினியை நம்பிச் சென்றால் நட்டாற்றில்தான் நிற்க வேண்டும், அவர் இன்னும் கட்சியும் தொடங்கிவில்லை, மக்களிடமும் செல்லவில்லை. தேர்தலில் உங்களுக்கு தோள் கொடுக்க நாங்கள்தான் உறுதியான நண்பர்கள்’ என்று கூட்டணிக்கட்சிகளான பி.ஜே.பி., பா.ம.க.வுக்கு எடப்பாடி உணர்த்தியுள்ளார்.

குறிப்பாக, ரஜினி வருவாரா.. மாட்டாரா எனக் குழப்பத்திலிருக்கும் பி.ஜே.பி.க்கு முதல்வர் பதிலளித்துள்ளார் என்றுகூட எடுத்துக் கொள்ளலாம். இப்போதிருக்கும் அ.தி.மு.க கூட்டணியைத் தக்கவைத்து, உள்ளாட்சித் தேர்தலை மட்டுமல்லாது, சட்டமன்றத் தேர்தலையும் எதிர்கொள்வதுதான் அவரது திட்டம். இந்தப் பயணத்தில் ரஜினியால் குறுக்கீடு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே முதல்வர் பதிலளித்துள்ளார்” என்றனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கூட்டணியின்றி தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியாது என்பதில் எடப்பாடி தீர்மானமாக இருக்கிறார். அ.தி.மு.க கூட்டணியை உடைத்து, பி.ஜே.பி., பா.ம.க., தே.மு.தி.க., கட்சிகளைப் பிரிக்க சிலர் முயற்சி செய்கின்றனர். இவர்களின் வலையில் அக்கட்சிகள் விழுந்து விடக் கூடாது என்பதற்காக ரஜினி எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்துள்ளார் எடப்பாடி. இனி ரஜினி என்ன செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்'' என்கின்றனர்.

பின் செல்ல