Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

போன் ரெக்கார்டிங்கில் வசமாகச் சிக்கிய காமெடி மாஜியை, கட்சியைவிட்டுத் தூக்கச்சொல்லி ‘மைக்’ விரும்பி மாஜியும், தடாலடி மாஜியும் துணிவானவரிடம் தொடர்ந்து வற்புறுத்துகிறார்களாம். “அவர் கட்சி நிர்வாகி மட்டுமல்ல… எம்.எல்.ஏ-வாகவும் இருக்கார். அவரைக் கட்சியைவிட்டு நீக்கினால் இழப்பு நமக்குத்தான். அதனால், வேறு மாதிரி அவருக்கு பதிலடி கொடுப்போம்” என அமைதிப்படுத்திவருகிறாராம் துணிவானவர். #தெர்மாகோல் கத்திகள்!

பிரபலத் துணிக்கடையில் நடந்த ரெய்டு, மதுரைக்கார அண்ணனின் மூத்த மருமகனை வெடி வெடித்துக் கொண்டாடவைத்ததாம். வட்டியோடு திருப்பித் தருவதாகச் சொல்லி ‘40 சி’-யைப் பல வருடங்களுக்கு முன்பு கடனாக வாங்கிய துணிக்கடைக்காரர், தொடர்ந்து மதுரைக்கார மருமகனுக்கு டிமிக்கி கொடுத்துவந்தாராம். ஒருகட்டத்தில் அணுகவே முடியாத தூரத்துக்குப் போய்விட்டாராம். அதனால்தான் ரெய்டு சர்ச்சையைவைத்து ‘கடவுள் இருக்கான் குமாரு’ எனக் குதூகலிக்கிறாராம் மருமகன். #எனக்கு ஒரு கண் போனாலும் பரவால்ல... அவனுக்கு ரெண்டு கண்ணும் போயிடணும் மொமன்ட்!

கிசுகிசு

வாரிசுப் புள்ளி, அவருக்கு உயிர் நண்பனாக விளங்கும் வாரிசு அமைச்சர் இருவருக்கும் நிழலாக விளங்குவது நவரச நடிகரின் பெயர்கொண்ட இரண்டு நிழல் புள்ளிகள்தானாம். யார் யாரைச் சந்திப்பது, யாரைத் தவிர்ப்பது என்கிற முடிவுகளைக்கூட அந்த நவரச நாயகர்கள்தான் எடுக்கிறார்களாம். தங்களைத் தாண்டி நெருங்குபவர்களை நேரம் பார்த்துப் போட்டுக்கொடுத்து, வாழ்விலும் வாரிசுகளின் வாசல் பக்கம்கூட வராதபடி பார்த்துக்கொள்கிறார்களாம். #அக்னி நட்சத்திரங்கள்!

சமீபத்தில் தாடிக்கார இயக்குநர், அண்ணன் தலைவருக்கு எதிராக ஆவேசம் பாட, பதிலுக்கு அண்ணனும் தடாலடி காட்டினார். இதற்கிடையில், கடந்த வாரம் இயக்குநரின் பிறந்தநாளுக்கு அவரை வானளாவப் புகழ்ந்து சமூக வலைதளங்களில் பதிவு போட்டார் அண்ணன் தலைவர். “சகட்டுமேனிக்கு விமர்சித்தவருக்கு ஏன் வாழ்த்து மழை?” எனக் கட்சி நிர்வாகிகள் கொந்தளிக்க, “என் அப்பா இறப்பில் உற்ற உயிரா என் பக்கத்துலேயே நின்னவன்டா அவன்…” என நெகிழ்ந்து சொன்னாராம் அண்ணன் தலைவர். #பாசத்துல அண்ணனை அடிச்சுக்க ஆளே இல்லை…

கிசுகிசு

தலைநகர் காவல்துறை மூன்றாகப் பிரிக்கப்பட்டு, மூன்று கமிஷனர்கள் தலைமையில் நிர்வாகம் நடக்கிறது. இதற்கான எல்லை பிரிக்கப்பட்ட விவகாரத்தில், இன்முகமான கமிஷனருக்குக் கொஞ்சமும் திருப்தி இல்லையாம். “செல்வாக்கான பகுதிகளைத் திட்டமிட்டு என் சரகத்துக்குள் கொண்டுவராமல் என்னை டம்மி பண்ணிட்டாங்க…” என வருத்தப்படுகிறாராம். அவர் செல்வாக்கான பகுதி எனச் சொல்வது, நியாயமாக அவர் சரகத்துக்குள் வந்திருக்கவேண்டிய பறக்கும் ஏரியாவை. #பறந்தாலும் விட மாட்டேன்... பிறர் கையில் தர மாட்டேன்!

“அரசுப் பாடப் புத்தகங்களை அச்சிடும் உரிமையைத் தமிழ்நாட்டு பிரின்டர்களுக்கே வழங்க ஆவன செய்வோம்” என முதல்வரையே டேக் செய்து, ட்விட்டரில் பதிவுபோட்டார் பட்டிமன்றப் புள்ளி. வெளி மாநில பிரின்டர்களுக்கு பிரின்ட் ஆர்டர் கொடுக்கப்பட்ட வகையில், முந்தைய ஆட்சியில் நடந்திருக்கும் கோடிக்கணக்கான ஊழல் குறித்தும் விசாரிக்கச் சொல்லியிருக்கிறாராம். இதற்கிடையில் இன்னொரு தரப்போ, ‘பட்டிமன்றப் புள்ளியின் தமிழ்ப் பாசமும் பசையை எதிர்பார்த்துத்தான்’ என்கிறார்கள் கண்சிமிட்டி. #தமிழ் வாழவைக்கும்னு சொல்வாங்களே… அதானா இது?!