அரசியல்
அலசல்
Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

அண்ணன் தலைவர் காஸ்ட்லியான கார் வாங்கி பூஜை போட்ட விஷயம் பரபரப்பானதில், கட்சி நிர்வாகிகள் கடுப்பில் இருக்கிறார்கள். “போராட்டம், ஆர்ப்பாட்டம் எனக் கைக்காசைப் போட்டு நடத்தி நாங்கள் ஓட்டாண்டியாகி நிற்கிறோம். மருத்துவ உதவிகளுக்கு நாங்கள் பணம் கேட்டால்கூட ‘பணமில்லை’ எனச் சொல்பவருக்கு, கார் வாங்க மட்டும் எங்கிருந்து வசூல் வந்ததாம்?” எனக் கொந்தளிக்கிறார்கள் பலரும். ஆதங்கத்தில் இருப்பவர்களை ஒருங்கிணைத்துக் கூண்டோடு அணி மாற்றவும் முயற்சி நடக்கிறதாம். #கார்னு சொல்லாதீங்க தம்பி... மகிழுந்து... புஹாஹா!

கிசுகிசு

நடுநிலைக் கட்சியின் தலைவருக்கும், ஆளுங்கட்சியின் வாரிசுக்கும் இடையேயான நெருக்கம் பலமாகிவிட்டது. நடுநிலைத் தலைவரின் படத்தை வாரிசு ரிலீஸ் செய்து கொடுத்ததற்கு நன்றிக்கடனாக, வாரிசைவைத்து ஒரு படத்தைத் தயாரிக்க ரெடியாகிவிட்டார் நடுநிலைத் தலைவர். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், நடுநிலைக் கட்சியை ஆளுங்கட்சிக் கூட்டணியோடு ஐக்கியமாக்க வாரிசு ஒருவரே போதும் என்கிறார்கள். அந்த அளவுக்கு நெருக்கம் ஃபெவிக்கால் பிணைப்பாக மாறியிருக்கிறதாம். #அரசியலும் சினிமாவும் ஒண்ணு... இதை அறியாதவன் வாயில பன்னு!

கிசுகிசு

“எந்த நேரத்தில் வேண்டுமானாலும் என்னை நீங்கள் அழைக்கலாம். எந்த உதவி என்றாலும் தயங்காமல் கேட்கலாம்…” எனச் சொல்லித் தன் பிரத்யேக போன் எண்ணை உச்ச நடிகரிடம் கொடுத்தாராம் பவன் புள்ளி. இரண்டு நாள்கள் கழித்து, பவன் புள்ளி கொடுத்த எண்ணுக்கு போன் செய்த உச்ச நடிகர், “உங்களைச் சந்தித்த பிறகு, என் மொத்த பாரத்தையும் இறக்கிவைத்ததுபோல் இருக்கிறது” என நெகிழ்ந்து சொன்னாராம். போனிலும் நிறைய நேரம் இருவரும் மனம்விட்டுப் பேசியிருக்கிறார்கள். #சங்கீத ஸ்வரங்கள்... ஏழே கணக்கா... இன்னுமிருக்கா!

கிசுகிசு

முதன்மையானவருக்கு மிக நெருக்கமாக வலம்வந்த மன்னர் புள்ளி, சமீபகாலமாக ஓரங்கட்டப்பட்டார். இல்லத்திலேயே வலம்வந்தவர் இப்போது இருக்கிற இடமே தெரியவில்லை. அந்த அளவுக்கு முதன்மையானவருக்கும் மன்னர் புள்ளிக்கும் இடையே இடைவெளி விழுந்திருக்கிறது. இப்படித்தான் நம்பிக்கொண்டிருக் கிறது ஊர். ஆனால், உண்மையில் வெளியே நடக்கும் அத்தனை விஷயங்களையும் இன்றைக்கும் முதன்மையானவர் கவனத்துக்குத் தெரிவிக்கும் ஒரே நபர் அதே மன்னர் புள்ளிதானாம். ஆதங்க ஆட்களை அடையாளம் காண முதன்மையானவர் திட்டமிட்டுச் செய்த ஏற்பாடுதான் இந்தப் பிரிவு விளையாட்டாம். இது தெரியாமல் மன்னர் புள்ளியிடம் முதன்மையானவர் குறித்து டன் கணக்கில் புகார் கொட்டிப் புலம்பிக்கொண்டிருக்கிறார்களாம் பலரும். #ராஜதந்திரங்களைக் கரைத்துக் குடித்திருப் பார்கள்போலயே!

கிசுகிசு

டெல்டா மாவட்டத்தில் முக்குலத்தோர் ஆதரவைப் பெற, சாதியக் கட்சியை வலுவாக நடத்திவரும் ஊர்ப்பெயரை அடைமொழியாகக் கொண்ட மீசைக்காரரை வளைக்க நினைக்கிறது காவிக் கட்சி. “எங்களோடு இணையுங்கள். எல்லாமும் செய்கிறோம்…” எனக் காவிக் கட்சியின் உயர் நிர்வாகிகள் மீசைக்காரரை நம்பிக்கையோடு அழைக்கிறார்களாம். இதற்கிடையில், இலைக் கட்சியில் முக்குலத்தோர் ஆதரவைப் பெருக்க நினைக்கும் துணிவுப் புள்ளியும் சமீபத்தில் இந்த மீசைக்காரருக்குத் தூது அனுப்பினாராம். “எங்கள் கட்சியில் சேருங்கள்… மாநிலப் பொறுப்பு வழங்குகிறோம்” என ஆசைவார்த்தைகள் அள்ளி வீசப்பட்டிருக்கின்றனவாம். ஒரே நேரத்தில் இரு பக்கமிருந்தும் வலை வீசப்படுவதால், ‘விலை’ அதிகமாகும் பக்கம் தாவத் தயாராகிவிட்டாராம் மீசைக்காரர். #சின்ன மீன்... பெரிய லாபம்!