Published:Updated:

எழுவர் விடுதலை விவகாரம்... மறுத்த ஆளுநரும் மறைந்துள்ள அரசியலும்!

தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியை உடைப்பதன் மூலமாக, தி.மு.க, அ.தி.மு.க.வுடன் அணி சேராத கட்சிகளை காங்கிரஸுடன் ஒன்றிணைத்து, மூன்றாவது அணி அமைக்க எடப்பாடி செய்யும் முயற்சிதான் இது என்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.

 ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வைக்கும் செக்!
ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வைக்கும் செக்!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக் குற்றச்சாட்டில், நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேர், கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் அடைபட்டிருக்கின்றனர். இவர்களை விடுதலை செய்வதற்கு, தமிழக சட்டமன்றத்தில் 2014 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது.

பன்வாரிலால் புரோஹித்
பன்வாரிலால் புரோஹித்

ஏழு தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசே முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்ட நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை கூடி, ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் எனப் பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றியது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட இந்தத் தீர்மானம், கடந்த ஓராண்டாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், தீர்மானத்தை ஆளுநர் ஏற்க மறுத்துவிட்டதாகவும், இதை வாய்மொழியாக முதல்வருக்கு அவர் தெரியப்படுத்தி விட்டதாகவும் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விரிவாக அறிக்கை வெளியிட்டுள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ``ஏழு தமிழர்கள் விடுதலை குறித்த அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்பதற்கும் நிராகரிப்பதற்கும் ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது. ஆனால், அவர்களை விடுதலை செய்ய முடியாது என அதிகாரபூர்வமற்ற முறையில் தெரிவித்துவிட்டார் என்றால், அதை அதிகாரபூர்வமாகவும் முதலமைச்சருக்கு அறிவித்திருக்க வேண்டும். இது சட்டப்படி அவரது கடமையாகும். அமைச்சரவை தீர்மானத்தை ஏற்க மறுத்து ஆளுநர் திருப்பி அனுப்பும்பட்சத்தில், அதே பரிந்துரையை மீண்டும் அனுப்பி வைக்க அமைச்சரவைக்கு அதிகாரம் உள்ளது" என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விளக்கமளிக்க வேண்டுமென தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எழுவர் விடுதலை விவகாரம் வெடித்ததன் பின்னணியில் அ.தி.மு.க. இருப்பதாக நமக்கு தகவல் கிடைக்க, அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் பேசினோம். "ஏழு தமிழர்கள் விடுதலைக்கான தீர்மானத்தை ஒரு வருடத்துக்கும் மேலாக ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். ஏற்கெனவே இந்த விவகாரத்தில் தி.மு.க.வுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கருத்து முரண்பாடுள்ளது. ஆளுநரின் மவுனத்தைக் கலைக்கவும், தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்குள் சலசலப்பை உருவாக்கவும்தான், ஏழு தமிழர்களையும் ஆளுநர் விடுதலை செய்ய மறுத்துவிட்டதாக ஒரு மூத்த அமைச்சர் மூலமாக இந்தத் தகவல் 'லீக்' செய்யப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் தன் ட்விட்டர் பதிவில் மிகக் கவனமாக, முதல்வர் விளக்கமளிக்க வேண்டும் என்றுதான் கூறியிருக்கிறாரே தவிர, 'எழுவர் விடுதலையை ஏன் தாமத்தப்படுத்துகிறீர்கள்?' என ஆளுநரை கேள்வி கேட்கவில்லை. இடைத்தேர்தல் நேரத்தில் இவ்விவகாரத்துக்குள் நுழைந்தால், காங்கிரஸ் கட்சியுடன் கருத்து மோதல் ஏற்படும். அதனால்தான் ஸ்டாலின் சுதாரித்துவிட்டார். ஆளுநர் என்ன முடிவெடுத்தாலும் சரி, அது தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தப் போவது நிச்சயம்" என்றவர்களிடம், "எழுவர் விடுதலையில் ஆட்சேபனை இல்லை என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியிருக்கிறாரே?" என்றோம்.

"அவர் கருத்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், கராத்தே தியாகராஜன் போன்றவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? இல்லை, காங்கிரஸ் மேலிடம்தான் ஏற்குமா? தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியை உடைக்கவும், ஆளுநரைப் பேசவைக்கவும்தான் இச்செய்தி 'லீக்' ஆனது" என்று புதிய கோணத்தில் விளக்கம் அளித்தனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியை உடைப்பதன் மூலமாக, தி.மு.க., அ.தி.மு.க.வுடன் அணி சேராத கட்சிகளை காங்கிரஸுடன் ஒன்றிணைத்து, மூன்றாவது அணி அமைக்க எடப்பாடி செய்யும் முயற்சிதான் இது என்கிறது அ.தி.மு.க. வட்டாரம். ஏற்கெனவே நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சிகள் தனியாகத்தான் தேர்தலை எதிர்கொள்கின்றன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியும் தி.மு.க.விடமிருந்து பிரிந்து சென்றால், சிறுபான்மையினர் வாக்குகளை ஒருங்கிணைப்பதில் தொடங்கி, மற்ற கூட்டணிக் கட்சிகளை தக்க வைப்பது வரை தி.மு.க.வுக்குக் கடும் நெருக்கடி ஏற்படும் என அ.தி.மு.க. தலைமை கருதுகிறது.

ஆனால், தி.மு.க தரப்பில் பேசினால் வேறு ஒரு கோணத்தில் பதில் சொல்கின்றனர். இதுகுறித்து தி.மு.க எம்.எல்.ஏ ஒருவரிடம் பேசியபோது, ``இதனால் எங்களுக்கும் காங்கிரஸுக்கும் இடையில் சிண்டு முடியலாம் என்று எடப்பாடி நினைத்தால் அது நிறைவேற வாய்ப்பேயில்லை. எழுவர் விடுதலை விவகாரத்தில் தமிழக அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநர் மறுத்திருப்பது உறுதியானால், அது பா.ஜ.க அரசின் முடிவாகவே கருதப்படும். அப்படிப்பார்த்தால் ‘அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநர் மறுத்தும் அ.தி.மு.க அரசு அமைதி காக்கிறது. பா.ஜ.க அரசுக்கு அ.தி.மு.க அரசு அடிமையாக இருக்கிறது என்பதற்கு இதை விட வேறென்ன உதாரணம் வேண்டும்?’’ என்றார்.

ஆக மொத்தத்தில், எழுவர் விடுதலை விவகாரம் தமிழக அரசியலில் மீண்டும் புயலைக் கிளப்புமென்றே எதிர்பார்க்கலாம்.

Vikatan