Published:Updated:

கரைவேட்டி டாட் காம்

கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா

கரைவேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா

Published:Updated:
கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி டாட் காம்

கணக்கு நோட்டு காட்டு!

பா.ஜ.க-வும் காங்கிரஸும் நேருக்கு நேர் மோதிய ஊட்டி தொகுதியில், எப்படியாவது தாமரையை மலரச் செய்தாக வேண்டும் என ராஜ்நாத் சிங் முதல் நமீதா வரை போராடினர். இது போதாதென்று, கர்நாடக மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் சோமசேகர் தலைமையில் ஐந்து முக்கிய நிர்வாகிகள் பெட்டிகள் மற்றும் படையுடன் ஊட்டியில் முகாமிட்டு தேர்தல் பணியாற்றினார்கள். ‘‘ஸ்வீட்டை இறக்குங்கள்... வெற்றியை‌ச் சாத்தியமாக்கித் தருகிறோம்’’ என ஆசைவார்த்தைகளைக் கூறி, அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தார்கள். இதை நம்பி மூன்று ரவுண்டாக சுமார் 12 சி வரை இறக்கியிருக்கிறார்கள். ஆனால், கொடுக்கப்பட்ட ஸ்வீட்கள் பா.ஜ.க உறுப்பினர்களுக்கே முறையாகச் சென்று சேரவில்லையாம். தேர்தல் முடிவிலும் ஏமாற்றமே மிஞ்சியது. இதில் கடுப்பான அந்த அமைச்சர், ‘‘அளக்காம ஆத்துல கொட்டுன‌ மாதிரி உங்களை நம்பிக் கொட்டினேனே... கடைசியில தோத்துட்டோம்னு அசால்ட்டா பதில் சொல்றீங்க... எந்தெந்த நிர்வாகிக்கு எவ்வளவு போயிருக்குனு லிஸ்ட் வேணும். ஓட்டுக்குப் போய்ச் சேராத ஸ்வீட்டைக் கணக்கு போட்டு திருப்பிக் கொடுங்க” என நீலகிரி பா.ஜ.க நிர்வாகிகளை மிரட்டியுள்ளார். பா.ஜ.க நிர்வாகிகளுக்கு கல்தா கொடுத்த அ.தி.மு.க நிர்வாகிகள் இப்போது கலக்கத்தில் இருக்கிறார்கள்.

அரசியலிலிருந்து ஒதுங்கும் பூங்கோதை?!

ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் இருமுறை எம்.எல்.ஏ-வாக இருந்தவர் தி.மு.க-வின் பூங்கோதை ஆலடி அருணா. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வின் பி.ஹெச்.மனோஜ் பாண்டியனிடம் தோல்வியடைந்தார். தேர்தல் பிரசாரத்தின்போது கட்சி நிர்வாகிகள் போதிய ஒத்துழைப்பு அளிக்காததே பூங்கோதையின் தோல்விக்குக் காரணம் என்று கட்சியினர் பேசிக்கொள்கிறார்கள். இந்தநிலையில், பூங்கோதை தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ’மக்களுக்கு வணக்கம். எனக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி’ எனத் தொடங்கி ‘கடந்த ஐந்து வருடங்களாக என்னால் இயன்ற பணிகளை மக்கள்நலனுக்காகச் செய்தேன். சாதி மறுப்பாளரான நான் சாதியின் அடிப்படையில் மறுதலிக்கப்பட்டது, சமுதாயத்தின் அவலநிலையை எடுத்துக்காட்டுகிறது. விடைபெறுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். கட்சி நிர்வாகிகளுடனான மோதல் மட்டுமல்லாமல், குடும்ப உறுப்பினர்களுடனும் இணக்கமற்ற சூழலில் இருக்கும் பூங்கோதை, தோல்வியால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் அரசியலிலிருந்து விடைபெற்றுவிட்டார் எனத் தொகுதி முழுக்கவே தகவல் பரவிக்கிடக்கிறது!

கரைவேட்டி டாட் காம்

சந்திரனை வெற்றிபெறவைத்த அவதார நபர்!

திருத்தணி தொகுதியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க வெற்றிபெற்றிருக்கிறது. ‘‘தி.மு.க வேட்பாளர் சந்திரனை வெற்றிபெறச் செய்ய உடன்பிறப்புகள் ஆற்றிய களப்பணிகள் கைகொடுத்தனவோ இல்லையோ... அ.தி.மு.க வேட்பாளர் அரியை வீழ்த்த சீட் கிடைக்காத அவதார நபர் வகுத்த வியூகங்கள் பலமாகக் கைகொடுத்திருக்கின்றன’ என்கிறார்கள் தொகுதிவாசிகள். ‘‘சந்திரன் வெற்றிபெற்றதற்கு அ.தி.மு.க-வின் கை ஓங்கியிருக்கும் பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருத்தணி டவுன் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குகள் அ.தி.மு.க வேட்பாளர் அரிக்கு விழாததே காரணம். அரி மண்ணைக் கவ்வியதால் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் அவதார நபரை, சந்திரன் ரகசியமாகச் சந்தித்து நன்றி தெரிவிக்கவிருக்கிறார்’’ என்றும் சொல்கிறார்கள். அதோடு இன்னொரு தகவலும் உலா வருகிறது. ‘‘அ.தி.மு.க வேட்பாளர் அரி, தி.மு.க மாவட்டப் புள்ளி ஒருவருடன் நெருக்கமாகப் பழகிவருகிறார். தேர்தலில் சந்திரனை வீழ்த்த அந்த மாவட்டப் புள்ளி அரிக்கு மறைமுகமாக உதவியும் அது கைகொடுக்கவில்லை’’ என்பதே அந்த கிறுகிறுக்கவைக்கும் தகவல்.