Published:Updated:

புளியில் பல்லி... உருகிய வெல்லம்... பை இல்லை... பொங்கல் பரிசா... ஏமாற்றமா?

பொங்கல் பரிசு
பிரீமியம் ஸ்டோரி
News
பொங்கல் பரிசு

தொகுப்புல கொடுக்குற பொருளெல்லாம் குறைவா இருக்குங்க. ரேஷன் கடைக்காரங்க பதுக்குறாங்களோனு சந்தேகமா இருக்கு

2022-ம் ஆண்டை, குளறுபடிகளுடன் தொடங்கி வைத்திருக்கிறது தி.மு.க அரசு. 2 கோடியே 15 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத்தொகுப்பின் தரம் குறைந்திருப்பதாக மாவட்டம்தோறும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஒருபக்கம் அரசால் அறிவிக்கப்பட்ட 21 பொருள்களும் முழுமையாக வந்து சேரவில்லை என்று பொதுமக்கள் புலம்புகிறார்கள். இன்னொரு பக்கம் விவசாயிகளோ, கரும்புக்கு மிகக்குறைவான கொள்முதல் விலையை அளித்திருப்பதாகக் கொந்தளிக்கிறார்கள். இது குறித்த புகார்கள் ஜூ.வி அலுவலகத்தை எட்டியவுடன், களமிறங்கியது ஜூ.வி டீம்.

வெல்லத்தில் அழுக்குத்துணி!

கரூர் நகரிலுள்ள சில ரேஷன் கடைகளுக்கு விசிட் அடித்தோம். அங்கு நின்றிருந்த பொதுமக்கள், ‘‘தொகுப்புல கொடுக்குற பொருளெல்லாம் குறைவா இருக்குங்க. ரேஷன் கடைக்காரங்க பதுக்குறாங்களோனு சந்தேகமா இருக்கு’’ என்றார்கள். அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகளூர் ஏரியாக்களிலும் இதே போன்ற புகார்கள் வரவே, ரேஷன் ஊழியர்களிடம் விசாரித்தோம். ‘‘நாங்க என்னங்க பண்றது? வந்து இறங்குன கரும்பு காய்ஞ்சுபோயிருக்கு. ஒரு பெட்டியில 18 வெல்லக்கட்டிகள் இருக்கணும். ஆனா, 16-தான் இருக்குது. அதுலயும் பாதி உருகிப்போயிருக்கு. கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு பாக்கெட்டுகள் உடைஞ்சுருக்குறதால, பல பாக்கெட்டுகளோட எடையும் குறைஞ்சிருக்குது. 100 கிராம் அளவுள்ள நெய் டப்பாக்கள், ஒரு பெட்டிக்கு 100 டப்பா இருக்கணும். பெட்டியைத் திறந்து பார்த்தா நாலு டப்பா வரைக்கும் குறையுது’’ என்றார்கள்.

புளியில் பல்லி... உருகிய வெல்லம்... பை இல்லை... பொங்கல் பரிசா... ஏமாற்றமா?

கன்னியாகுமரி மாவட்டத்தில், பல ரேஷன் கடைகளில் 21 பொருள்களையும் வழங்காமல், 10 முதல் 13 பொருள்களே வழங்கியிருக்கிறார்கள். திக்கணங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட தாராவிளை உள்ளிட்ட சில ரேஷன் கடைகளில், ‘கையிருப்பு இல்லை’ என்று கூறிப் பலரையும் திருப்பி அனுப்பிவிட்டார்கள். திக்கணங்கோடு தபால் நிலையம் அருகிலுள்ள ரேஷன் கடையில் ஐயப்பன் என்பவருக்கு, பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரவை வழங்கப்படவில்லை. அவர் வெல்லத்தை உடைத்துப் பார்த்தபோது அதனுள்ளே அழுக்குத்துணி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

புளியில் செத்துப்போன பல்லி!

திருத்தணி, சரவணப்பொய்கை திருக்குளம் பகுதியிலிருக்கும் சுப்பிரமணிய சுவாமி கூட்டுறவுப் பண்டக சாலையில் வழங்கப்பட்ட பொங்கல் பொருள்களை நந்தன் என்பவர் பிரித்துப் பார்த்திருக்கிறார். அப்போது, புளி பார்சலில் இறந்துபோன பல்லி கிடந்திருக்கிறது. அதிர்ச்சியடைந்தவர், ரேஷன் கடைக்கு வந்து அதை மாற்றித் தருமாறு கேட்க, பணியாளர்கள் மறுத்துவிட்டார்கள். வேலூர் பகுதியில் கடுகுப் பொட்டலத்தில் குப்பைகள் கலந்திருந்தன. விழுப்புரம் மாவட்டம், தொடர்ந்தனூர் கிராமத்தில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் தலா 50 கிராம் வழங்கப்படவேண்டிய திராட்சையும் முந்திரியும் 30 கிராம் அளவிலேயே இருந்துள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்திலும் இதே போன்ற புகார்கள் வரவும், கிரிவலப் பாதையிலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஜனவரி 8-ம் தேதி ஆய்வு மேற்கொண்டார். இதில் அங்கு வைக்கப்பட்டிருந்த வெல்லத்தில் பெரும் பகுதி கெட்டுப்போயிருந்தது தெரியவந்தது. உஷ்ணமான ஆட்சியர், அதிகாரிகளிடம் ‘புதிதாக வெல்லத்தைக் கொள்முதல் செய்யுங்கள்’ என்று உத்தரவிட்டிருக்கிறார்.

புளியில் பல்லி... உருகிய வெல்லம்... பை இல்லை... பொங்கல் பரிசா... ஏமாற்றமா?

ஒரு கரும்புக்கு 16 ரூபாய் கமிஷன்!

பொங்கல் பரிசுத்தொகுப்பில் வழங்கப்படும் கரும்பு ஒன்றுக்காக 33 ரூபாயை அரசு ஒதுக்கியது. ஆனால், விவசாயிகளுக்குச் சென்றடைந்தது என்னவோ 12 ரூபாய்தான் என்கிறார்கள் கரும்பு விவசாயிகள். நம்மிடம் பேசிய மயிலாடுதுறை, வானதிராஜபுரத்தைச் சேர்ந்த விவசாயி ராமலிங்கம், ‘‘ஏழடி உயரமுள்ள கரும்புக்கு 15 ரூபாயும், நான்கடி உயரமுள்ள கரும்புக்கு 9 ரூபாயும்தான் விவசாயிகளுக்குப் பணம் கொடுக்கப்பட்டிருக்கு. ஆனா, அரசாங்கம் ஒதுக்குனது 33 ரூபாய். மீதிப் பணம் எங்கே போனது? இந்த முறைகேட்டுல அதிகாரிகளோட ஆளுங்கட்சிப் பிரமுகர்களும் கைகோத்திருக்காங்க. பெருமளவு கரும்பு கொள்முதல் முடிஞ்ச பிறகுதான், ‘அதிகாரிகள் நேரடியா விவசாயிகள்கிட்ட கொள்முதல் செய்வாங்க’ன்னு அரசு உத்தரவு போடுது. ஆனா, எந்த அதிகாரியும் இந்த உத்தரவைச் செயல்படுத்த முன்வரலை’’ என்றார்.

கூட்டுறவுத்துறைதான் விவசாயிகளிடமிருந்து கரும்பைக் கொள்முதல் செய்தது. வட மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களும், ஒரு எம்.எல்.ஏ-வும்தான் இதற்கான பணிகளை தமிழகம் முழுவதும் ஒருங்கிணைத்து விளையாடியதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். பொள்ளாச்சியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர்தான் கரும்புகளைக் கொள்முதல் செய்து, தஞ்சையிலுள்ள ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்திருக்கிறார். விவசாயிக்கு ஒரு கரும்புக்கு 15 ரூபாய் மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது. மீதித் தொகையை அந்த மூவரணியும், துறையின் மேலிடமும், இடைத்தரகர்களும் பிரித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. நம்மிடம் பேசிய டெல்டா கரும்பு விவசாயி ஒருவர், ‘‘கரும்பு ஏத்துக்கூலி, போக்குவரத்துச் செலவு, அங்காடிகள்ல இறக்கி வைக்க எல்லாம் சேர்த்து ஒரு கரும்புக்கு அதிகபட்சம் 2 ரூபாய்தான் செலவாகும். ஆக, ஒரு கரும்புக்கு 17 ரூபாய் செலவு பண்ணிட்டு, அரசாங்கத்துகிட்ட 33 ரூபாய் பணம் வாங்கிட்டாங்க. இதனால, அவங்களுக்கு ஒரு கரும்புக்கு 16 ரூபாய் லாபம்” என்று அதிரவைத்தார். அரசாணையில், ‘ஆறடி உயரம் கொண்ட கரும்பு வழங்கப்படும்’ என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், பல பகுதிகளில் நான்கடிக்கும் குறைவான, வதங்கிப்போன கரும்புகளே வழங்கப்பட்டதாக மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

புளியில் பல்லி... உருகிய வெல்லம்... பை இல்லை... பொங்கல் பரிசா... ஏமாற்றமா?

‘‘பணமே கொடுத்திருக்கலாம்...” - வாக்குவாதத்தில் பொதுமக்கள்!

நெல்லை மாவட்டம், திசையன்விளையிலுள்ள மன்னராஜா கோயில் தெருவிலுள்ள ரேஷன் கடையில் தி.மு.க ஒன்றியச் செயலாளரும், மாவட்ட பஞ்சாயத்துத் தலைவருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தரப்பினர் பொருள்களை விநியோகித்தார்கள். அங்கு குழுமியிருந்த பெண்களோ, ‘‘கடந்த ஆட்சியில 2,500 ரூபாய் பணம் கொடுத்தாங்க. அப்போ, நீங்க 5,000 ரூபாய் கொடுக்கணும்னு சொன்னீங்க. இப்போ நீங்க ஆட்சிக்கு வந்ததும் பணமே கொடுக்காம ஏமாத்திட்டீங்க” என்று வாக்குவாதத்தில் ஈடுபட, அவர்களைச் சமாளிக்க முடியாமல் தி.மு.க-வினர் திணறிவிட்டார்கள். கடலூர் மாவட்டம், தியாகவல்லி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ், ‘‘வியாபாரிங்ககிட்ட ஓடாத பழைய சரக்கையெல்லாம் வாங்கி, எங்ககிட்ட தள்ளிவிட்டுட்டாங்க. மிளகாய்த்தூள் மக்கிப்போய் நாத்தமடிக்குது. வெல்லம் உருகியிருந்துச்சு. கொஞ்சம் பேருக்கு கரும்பு கொடுக்கலை. பணமா கொடுத்திருந்தாக்கூட எங்களுக்கு பிரயோஜனமா இருந்திருக்கும்’’ என்றார்.

பை தட்டுப்பாடு ஏன்? - விளையாடிய திருப்பூர் நிறுவனம்!

நீலகிரியில் சில பகுதிகளில் பச்சரிசியே கொடுக்கப்படவில்லை. கூடலூர், பந்தலூர் பகுதிகளில் துணிப்பைகளுக்குத் தட்டுப்பாடு என்று சொல்லி விநியோகத்தையே நிறுத்தியிருந்தார்கள். மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், வீட்டிலிருந்து ஏதாவது ஒரு பையைக் கொண்டுவந்து பொருள்களைப் பெற்றுச் செல்லுமாறு அறிவித்து, பொருள்களை வழங்கினார்கள். தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டையிலும் இதே நிலைமைதான். நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், ‘‘பைகள் வரவில்லை. டோக்கன் தருகிறோம். வந்ததும் வாங்கிக்கொள்ளுங்கள்’’ என்று ரேஷன் ஊழியர்கள் சொல்லவும் வாக்குவாதம் ஏற்பட்டது.

‘‘பொங்கல் பை விநியோகம் தாமதமானது ஏன்?’’ என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ‘‘தமிழகம் முழுவதும் பை விநியோகத்துக்கான டெண்டரை வடமாவட்ட அமைச்சர் ஒருவரின் மேற்பார்வையில் விட்டுவிட்டார்கள். அவர் தரப்பும், உணவுத்துறை மேலிடமும் சேர்ந்துகொண்டு, எந்தெந்த நிறுவனங்கள் எத்தனை பைகளை விநியோகிக்க வேண்டுமெனத் தீர்மானித்தன. சில தி.மு.க மாவட்டச் செயலாளர்களுக்கும் இந்தப் பை விநியோகத்தில் குறிப்பிடத்தக்க அளவு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான ரூட்டை அமைத்துக் கொடுத்தது நாமக்கல் நிறுவனம். பெரும் பகுதி டெண்டர் எடுத்த திருப்பூர் நிறுவனம், குறித்த காலத்துக்குள் பைகளை விநியோகிக்கவில்லை. தவிர, பகுதி பகுதியாகப் பிரித்துத்தரப்பட்ட ஆர்டர்களும் உரிய நேரத்தில் டெலிவரி செய்யப்படவில்லை. இதனால்தான், பொங்கல் பைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது’’ என்றார்கள்.

புளியில் பல்லி... உருகிய வெல்லம்... பை இல்லை... பொங்கல் பரிசா... ஏமாற்றமா?

தேங்கிய வெல்லம்... வேதனையில் விவசாயிகள்!

பை பஞ்சாயத்து ஒருபக்கம் என்றால், வெல்லத்தை உற்பத்திசெய்த விவசாயிகள் வேதனையில் இருக்கிறார்கள்... தேனி மாவட்டம், பெரியகுளம் லட்சுமிபுரத்தில் பாரம்பர்யமாக இயங்கிவரும் வெல்ல ஏல மண்டிகள் நிறைய உள்ளன. இங்கிருந்து வெல்லத்தைக் கொள்முதல் செய்யாமல் வெளிமாநில நிறுவனத்திடம் கொள்முதல் செய்ததால், தமிழகத்தில் உற்பத்தியான வெல்லம் தேங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள் விவசாயிகள். நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் விமலநாதன், ‘‘தமிழ்நாட்டிலேயே ஏராளமான விவசாயிகள் வெல்லம் உற்பத்தி செய்யறாங்க. ஆனா, அவங்ககிட்ட வாங்காம, வெளிமாநில கம்பெனியிலருந்து வெல்லம் வாங்கியிருக்காங்க. பரிசுத்தொகுப்புல வெல்லம் கொடுத்ததால, பொதுமக்களும் வெளிமார்க்கெட்ல வெல்லம் வாங்கலை. இதனால, தமிழக வெல்ல உற்பத்தியாளர்களுக்குக் கடும் பாதிப்பு ஏற்பட்டிருக்கு. விலை வீழ்ச்சி அடைஞ்சதோட, வெல்லம் விற்பனையாகாமல் தேங்கிக்கிடக்கு” என்றார் வேதனையோடு!

பொங்கல் தொகுப்பு விநியோகச் செலவுகளுக்காக, சுயஉதவிக்குழுக்கள் நடத்தும் கடைகளுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால், இந்தக் கடை ஊழியர்கள் கூட்டுறவு குடோன்களிலிருந்து பொங்கல் தொகுப்புப் பொருள்களை வாடகை வாகனங்களில் ஏற்றிவர கைப்பணத்தைச் செலவு செய்திருக்கிறார்கள்.

கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி எனப் பெரும்பாலான மாவட்டங்களிலும் மேற்கண்ட புகார்களே வரிசைகட்டுகின்றன. ஜனவரி 31-ம் தேதி வரை பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், ‘பொங்கல் முடிந்த பிறகு பொருள்கள் வந்தால் என்ன... வராவிட்டால் என்ன?’ என்று ஆற்றாமையில் பொங்குகிறார்கள் பொதுமக்கள். மொத்தத்தில் மகிழ்ச்சி பொங்கவேண்டிய பொங்கல் திருநாளில், மக்களிடம் கோபத்தையும் ஆற்றாமையையும் ஏற்படுத்தியிருக்கிறது தி.மு.க அரசு.