Published:Updated:

பொங்கல் தொகுப்பு: `விஷமத்தனம்’ - முதல்வர் ஸ்டாலின் கோபத்துக்கான பின்னணி என்ன?

ஸ்டாலின்
News
ஸ்டாலின்

பொங்கல் சிறப்புத் தொகுப்பு குறித்துச் சிலர் விஷமத்தனமான கருத்துகளைப் பரப்பிவருவதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார்.

ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் பண்டியை முன்னிட்டு, தமிழக அரசு சிறப்புத் தொகுப்போ, தொகையோ கொடுத்துக்கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது 2,500 ரூபாய் கொடுத்தார். தற்போது முதல்வராக இருக்கும் ஸ்டாலின், `21 பொருள்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு வழங்கப்படும்’ என அறிவித்திருந்தார்.

பொங்கல் சிறப்புத் தொகுப்பு
பொங்கல் சிறப்புத் தொகுப்பு

அதன்படி, அதற்கான டெண்டர் கோரப்பட்டு, சிறப்புத் தொகுப்புகள் மொத்தமும் அரசுக் கிடங்குகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. `ஜனவரி 3-ம் தேதியிலிருந்து விநியோகிக்கப்படும்’ என அறிவித்திருந்த நிலையில், 4-ம் தேதிதான் முதல்வர் இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். இரு தினங்கள் மாநிலம் முழுவதும் சரியான முறையில் விநியோகிக்கப்பட்டன. அதன் பிறகு சில இடங்களில் தரமற்ற பொருள்கள் இருந்ததாகவும், டெண்டர் விட்டதிலேயே முறைகேடுகள் நடந்ததாகவும் தகவல்கள் கசிந்தன. இந்தச் சூழலில்தான் முதல்வர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஸ்டாலின் தனது அறிக்கையில், ``கொரோனா பெருந்தொற்றாலும், மழை வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்கள் அனைவரும், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை உவகையுடன் கொண்டாடும் வகையில், கரும்புடன் 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தேன்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு
பொங்கல் பரிசுத் தொகுப்பு

இதன்படி 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகளில் - நமது அரசுக்குப் பெரும் நிதி நெருக்கடி நிலவிவரும் இச்சூழலிலும் மக்களின் நலன் கருதி 1,297 கோடி ரூபாய் செலவில் இந்தத் தொகுப்புகள் வழங்கப்பட்டுவருகின்றன. இந்தப் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படுவதை நானே நேரடியாகச் சென்று நியாயவிலைக் கடைகளில் ஆய்வு செய்தேன். மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தத் திட்டத்தைப் பற்றிச் சிலர் தவறான விஷமத்தனமான கருத்துகளைப் பரப்பிவருகின்றனர். எனவே, இந்தப் பணிகள் முறையாக நடைபெற்றுவருவதையும், தரமான பொருள்கள் எவ்விதப் புகாரும் இன்றி அனைவருக்கும் கிடைக்கப்பெறுவதையும் நாம் உறுதிசெய்ய வேண்டும். அதற்காக, எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள், எம்.பி-க்கள் நேரடியாக இதைக் கண்காணிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதல்வர் கூறிய விஷமத்தனமான கருத்துகள் என்பதற்குப் பின்னால் சில விஷயங்கள் இருப்பதாகச் சொல்கிறார் அரசியல் பார்வையாளர் ஒருவர். அவரிடம் பேசியபோது, ``பொங்கல் சிறப்புத் தொகுப்பு கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டதிலிருந்தே சர்ச்சைகள் கிளம்பிவிட்டன. டெண்டர் விட்டபோதே இதில் அனுபவமில்லாத நிறுவனம் ஒன்று தனது பினாமி நிறுவனத்தின் பெயரில் டீலிங் பேசி ஒரு தொகையை கோட் செய்ததாம். அதைவிடக் குறைவாக வேறு ஒரு நிறுவனம் கோட் செய்யவே, டெண்டர் நிறுத்தப்பட்டதாம். பின்னர் இரண்டாவது நிறுவனத்திடம், பேசவேண்டிய வகையில் பேசி டெண்டரிலிருந்து வெளியே அனுப்பிவிட்டனராம்.

தொடங்கிவைத்த முதல்வர்
தொடங்கிவைத்த முதல்வர்

இந்தத் தகவல் மெல்ல வெளியில் கசிந்ததால், ஜனநாயக முறைப்படி நடத்துகிறோம் என்ற பெயரில் பல நிறுவனங்களுக்குத் தொகுப்புகள் பிரித்துக் கொடுக்கப்பட்டன. இந்தப் பஞ்சாயத்துகள் முடிந்து, பொருள்கள் அனைத்தும் அரசின் குடோன்களுக்கு அனுப்பப்பட்டன. அங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பும்போது 100 தொகுப்புகள் இருக்கவேண்டிய இடத்தில் 90-தான் இருந்திருக்கின்றன. அதிலும் பல இடங்களில் பொருள்களைப் போட்டுக்கொடுக்கும் பைகள் பாதிதான் அனுப்பப்பட்டன. ஒவ்வொரு ரேஷன் கடையிலும் 1,000-க்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைகள் இருப்பதால், டோக்கன் கொடுத்து ஒரு நாளைக்கு 200 பேருக்குத் தொகுப்பு கொடுக்கப்படும் என்று அறிவித்தனர்.

அந்த இருநூற்றிலும் பாதிப் பொருள்களுக்குப் பை இல்லை. இன்னும் சில இடங்களில் சிறிய ரேஷன் கடைகளுக்கு முதல் இரண்டு நாள்கள்தான் பொருள்கள் அனுப்பப்பட்டன. அதன் பிறகு இன்றுவரை பொருள்களே அனுப்பப்படவில்லை. மக்கள் ஒவ்வொரு நாளும் ரேஷன் பணியாளர்களுடன் வாக்குவாதம் செய்துவருகின்றனராம். ரேஷன் பணியாளர்களோ பொங்கல் முடிந்துகூட வாங்கிக்கொள்ளுங்கள் என்கிறார்கள். பொங்கல் முடிந்து அந்தச் சிறப்புத் தொகுப்பு எதற்குத் தேவைப்படப்போகிறது?

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இதற்கடுத்து, தரத்தில் பஞ்சாயத்து கிளம்பியது. மதுரையில் ஓரிடத்தில் கொடுக்கப்பட்ட பொருள்களில் வெல்லம் சீனிப்பாகுபோல உருகியிருந்த போட்டோவெல்லாம் வெளியானது. பல இடங்களில் தரமற்ற பொருள்கள் இருந்ததை வைத்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பேட்டியே கொடுத்தார். அதன் பின்னர், சில ரேஷன் கடைகளில் எடை குறைவாகக் கொடுக்கப்பட்டது என்ற புகாரும் எழுந்தது. அ.தி.மு.க-வினர் அதை எடைபோட்டு மீடியாக்களிலும் எக்ஸ்போஸ் செய்தனர். 10 ஏலக்காய் இருக்கவேண்டிய இடத்தில், நான்கு மட்டுமே இருந்ததாகவும் புகார்கள் எழுந்தன.

பொங்கல் சிறப்புத் தொகுப்பு
பொங்கல் சிறப்புத் தொகுப்பு

கடந்த அரசு பணமாகக் கொடுத்ததால் எந்தப் பிரச்னையும் இன்றி மக்கள் அதைவைத்துப் பொருள்கள் வாங்கிச் செலவு செய்தனர். இந்தமுறை பொருள்கள் கொடுக்கிறேன் என்று சொல்லி அவப்பெயர் கிடைத்ததுதான் மிச்சம்! தொடர்ந்து, மேற்குறிப்பிட்ட விஷயங்கள் குறித்து தகவல்கள் பரவிவருகின்றன. தரமற்ற பொருள்கள் கொடுக்கப்படுவதற்கு மூலகாரணம் டெண்டரில் நடந்த பிரச்னை. மக்களுக்கு டெண்டர் விவகாரம் தெரியாது என்கிறபோதும், அ.தி.மு.க-வினருக்குத் தெரியும். அதைவைத்து, அடுத்து ஒரு புகார் வரும்போது அரசுமீது பழிபோடக் காத்திருக்கிறார்கள். அதனால்தான் முதல்வர் ஸ்டாலின் டென்ஷனாகி அமைச்சர் சக்கரபாணியை கடிந்துகொண்டது மட்டுமின்றி, நேரடியாகக் களத்துக்குச் செல்லும்படி உத்தரவிட்டாராம். மேலும், தரமற்ற பொருள்கள் வழங்கப்படுகின்றனவா... எடை குறைவாகக் கொடுக்கப்படுகின்றனவா என்பதை ஆராயுமாறு தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள், எம்.பி-க்கள், மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்” என்று முடித்தார்.