Published:Updated:

`கூட்டணி தர்மத்தால் அமைதியாக இருக்கிறேன்!'- ஜெயக்குமார் பேச்சால் கொதித்த பொன்னார்

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

இப்போது நாடு முழுவதும் கைது செய்யப்படும் பயங்கரவாதிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். தமிழகத்தில் முஸ்லிம் பயங்கரவாதிகள் பற்றி ஏற்கெனவே நான் சொன்னேன். இப்போது கூட்டணி தர்மம் என்பதால் பேசாமல் இருக்கிறேன் என்று ஆவேசமானார் பொன்.ராதாகிருஷ்ணன்.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ``தமிழகத்தின் தென் பகுதியில் மணல் கடத்தலுக்கு யார் காரணம் என்பது உலகறிந்த விஷயம். அதில் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் எந்த அரசியல்வாதி, எந்த எம்.எல்.ஏ இருந்தார் எனவும் தெரியும். வில்சன் கொலை வழக்கில் மணல் கடத்தல் கும்பல் இருப்பதாக முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு தன்னைக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டு சொல்லியிருப்பார்.

என் சொத்து, குடும்ப உறுப்பினர் சொத்துக் கணக்குகளைக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். நான் ஒரு அடி நிலம் வாங்கியிருந்தாலோ, பணம் வங்கியில் போட்டேன் என்றால் என் அரசியல் வாழ்வை விட்டு செல்லத் தயார். அப்பாவு தனது சொத்துக்கணக்கை வெளியிடத் தயாரா. தென் மாவட்டங்களில் மணல் கடத்தலுக்குப் பக்கபலமாக இருந்தவர் யார் என போலீசுக்கும் தெரியும். எனவே, இதுபற்றித் தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும்.

நிர்வாகிகள் கூட்டத்தில் பொன்.ராதாகிருஷ்ணன்
நிர்வாகிகள் கூட்டத்தில் பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறு எம்.எல்.ஏக்கள் எதற்காக இருக்கிறார்கள். எந்தத் திட்டமும் கொண்டுவரமாட்டேன் என ஒரு எம்.பி வெற்றிபெற்றிருக்கிறார். நம்மை காவல் காக்கும் போலீஸ் அதிகாரியைக் கொலை செய்ததற்கு சட்டசபையில் குரல் கொடுக்காததால் குமரி மாவட்ட எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய வேண்டும். வில்சனைக் கொலை செய்தவர்கள் முழுக்க முழுக்க மதத்தை அடிப்படையாகக் கொண்ட கொலைகாரர்கள்.

வில்சன் கொலை வழக்கு சம்பந்தமாக இங்கு சர்வகட்சிக் கூட்டம் நடந்ததாக அறிந்தேன். அதில் வில்சன் கொலை வழக்கு சம்பந்தமாக எதுவும் பேசவில்லை. வில்சனை கிறிஸ்தவராக நான் பார்க்கவில்லை. எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு அதுபற்றிப் பேச துணிச்சல் இல்லை. அடுத்த இலக்கு அவர்களாக மாறிவிடுவார்கள் என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது. உயிர்மேல் அச்சம் உள்ளவர்கள் ஏன் அரசியலுக்கு வர வேண்டும்.

வில்சன் கொலை குறித்து கிறிஸ்தவ அமைப்புகளோ, எம்.எல்.ஏக்களோ கேட்டார்களா. இலங்கை சர்ச்சில் குண்டு வெடித்ததற்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். ஆனால் இவர்கள் நம் மாவட்டத்தின் முக்கிய சர்ச்சுகளில் குண்டு வெடித்தாலும் பேச மாட்டார்கள். மதத்தையும், மக்களையும் பிரித்து முட்டாள் ஆக்காதீர்கள். அது செத்துப்போன பிணத்தைத் தோண்டி எடுத்து சித்ரவதை செய்வதற்கு சமம்.

என்னைப்பற்றி அமைச்சர் ஜெயக்குமார் சில விஷயங்கள் பேசியிருக்கிறார். பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஜெயக்குமார் சர்ட்டிஃபிகேட் தர வேண்டிய அவசியம் இல்லை. என் செயல்பாட்டை ஜெயலலிதா இரண்டு முறை பாராட்டியிருக்கிறார். கூட்டணி தர்மத்தால் நான் அமைதியாக இருக்கிறேன்.

செய்தியாளர் சந்திப்பில் பொன்.ராதாகிருஷ்ணன்
செய்தியாளர் சந்திப்பில் பொன்.ராதாகிருஷ்ணன்

முதல்வர், துணை முதல்வர் மீதும் நல்ல மரியாதை வைத்திருக்கிறோம். இப்போது நாடு முழுவதும் கைது செய்யப்படும் பயங்கரவாதிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். தமிழகத்தில் முஸ்லிம் பயங்கரவாதிகள் பற்றி ஏற்கெனவே நான் சொன்னேன். இப்போது கூட்டணி தர்மம் என்பதால் பேசாமல் இருக்கிறேன்.

ரஜினி எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். ரஜினியை மையப்படுத்தினால்தான் கதை நடக்கும் என அனைத்துக் கட்சியினருக்கும் தெரியும். ரஜினி பேசிய அந்த நிகழ்ச்சியில் நான் இருந்தேன். அவர் இரண்டு பத்திரிகையைக் குறிப்பிட்டுச் சொன்னார். இந்தப் பத்திரிகையை தி.மு.கவினர் வைத்திருப்பார்கள் என்றார். அதைப் படிப்பவர்கள் முட்டாள் எனக் கூறவில்லை.

துக்ளக் வைத்திருப்பவர்கள் அறிவு ஜீவிகள் என்றார். எல்லாரும் எல்லாப் பத்திரிகையும் படிக்கிறார்கள். பெரியாரைப் பற்றிப் போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போனார். தி.மு.க., அ.தி.மு.கவிற்கு வேறு பிழைப்பு இல்லை. சத்திய மூர்த்தி பவனை எடுத்துக்கொண்டுபோய் அறிவாலயத்திற்குள் வைக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. தினமும் போய் மன்னிப்பு கேட்பார்கள்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு