Published:Updated:

`அரசின் திட்டங்களை யாரோ லீக் செய்கிறார்கள்; கவனம்!’ - பொன்.ராதாகிருஷ்ணன்

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

`மின்கட்டணத்தைக் குறைக்கணும் எனச் சொன்னவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது தி.மு.க அரசு. விவசாயிகளைக் கொலை செய்தது தி.மு.க அரசு’ என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், ``கொரானா மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. 130 கோடி மக்கள் வாழும் நம் நாட்டில் கொரோனா தொற்று மூலமாக பெரிய அளவில் பாதிப்போ, பொருளாதாரரீதியாகவும், சுகாதாரரீதியாகவும் பெரிய தீங்கோ ஏற்படாத வகையில் பிரதமர் தற்காப்பு நடவடிக்கை எடுத்திருக்கிறார். `சில கட்சிகள் மதத்தின் பெயரைச் சொல்லி ஓட்டுக் கேட்கிறார்கள்’ என முதல்வர் கூறியிருப்பது, முஸ்லிம் லீக்கைச் சொல்லியிருப்பார். பா.ஜ.க-வைச் சொல்ல வாய்ப்பு இல்லை.

தி.மு.க ஆட்சிக்கு வரவே முடியாது என நாங்கள் சொல்கிறோம். தமிழ்நாட்டில் உருவாகியிருக்கும் அரசியல் சூழ்நிலையை வைத்துத்தான் அதைக் கூறுகிறோம். குமரி மாவட்டத்தில் ஸ்டாலின் வந்த நிகழ்ச்சிக்காக நெல்லை, தூத்துக்குடியிலிருந்து ஆட்கள் வந்திருக்கிறார்கள். 1969-ல் கலைஞர் தெளிவாகச் சொன்னார். `நெல்லை எங்கள் எல்லை; குமரி எங்களுக்கு இல்லை’ என்றார். அன்று சொன்னது இன்றும் நிற்கிறது. தமிழக எல்லை மாவட்டங்களில் ஸ்டாலின் நிகழ்ச்சி குறித்துக் கேட்டால் கர்நாடகா, ஆந்திராவிலிருந்து ஆட்களைக் கொண்டுவந்தார்களா எனத் தெரியும்.

செய்தியாளர்களைச் சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன்
செய்தியாளர்களைச் சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன்

50 வருஷமாக ஆண்ட தி.மு.க., மக்கள் பிரச்னைகளைத் தீர்க்கவில்லை. இப்போது நூறு நாளில் எப்படிச் செய்வார்... கடந்த மக்களவைத் தேர்தலில், `எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்தால் நாங்கள் விவசாய நகைக் கடன்களை தள்ளுபடி செய்வோம்’ என்றார் ஸ்டாலின். ஏன் தள்ளுபடி செய்யவில்லை? அதை முதலில் செய்யட்டும். `இந்து மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகைக்காக முயன்றோம். வேறு பெயரில் அந்தத் திட்டம் வருகிறது. நாங்கள் சொல்வதை அரசு செய்கிறது’ என ஸ்டாலின் சொல்கிறார் என்றால், யாரோ லீக் செய்கிறார்கள். எனவே, அரசு கவனமாக இருக்க வேண்டும். அரசு திட்டமிடும் திட்டங்கள் வெளியே போகின்றன என்றால் அதிகாரிகள் கவனமாக இருக்க வேண்டும். தி.மு.க வெளியே தெரியாமல் விஞ்ஞானரீதியாக ஊழல் செய்வார்கள். ஸ்டாலின் கூறும் வாக்குறுதிகள் ஆகாயத்தில் சிலம்படிப்பது போன்றது.

சிவகங்கை: `கீழடிப் பெருமையை மறைப்பவர்களுக்கு, தமிழர்  ஓட்டு மட்டும் வேண்டுமா?! - ஸ்டாலின்

மின் கட்டணத்தைக் குறைக்கணும் எனச் சொன்னவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது தி.மு.க அரசு. விவசாயிகளைக் கொலை செய்தது தி.மு.க அரசு. அ.தி.மு.க - பா.ஜ.க ஒரே கூட்டணியில் இருக்கின்றன. சசிகலா வெளிவந்ததும் அவர்களது சொத்துகள் பறிமுதல் செய்யப்படுகின்றன என்று கூறுகிறீர்கள். ஆனால், அதை இப்போது எடுத்த நடவடிக்கையாக நான் பார்க்கவில்லை. ஏற்கெனவே எடுத்த நடவடிக்கையின் தொடர்ச்சிதான் அது. டெல்லி போராட்டத்தில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டு வன்முறையை ஏற்படுத்தியதாகச் சொல்லும் சி.பி.எம் செயலாளர் பாலகிருஷ்ணனா டெல்லியில் கொடியேற்றினார். அவர்கள் சித்தாந்தத்தின் அடிப்படையில்தான் நக்‌சல்கள் உருவாகியிருக்கிறார்கள்.

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

`தமிழகத்தில் நடக்கும் ஆட்சி அரைகுறை ஆட்சி’ என்று கூறுகிறார். ஆனால், ஸ்டாலினுக்கு எல்லாமே அரைகுறையாகத்தான் தெரியும். வரும் சட்டசபைத் தேர்தலில் குமரி மாவட்டத்தில் ஆறு தொகுதிகளையும் பா.ஜ.க கேட்கும். எம்.ஜி.ஆர் கூட்டங்களில் காத்திருந்து பார்த்திருக்கிறேன். கூட்டம் எப்படி நடக்கும் எனப் பார்த்திருக்கிறேன். அன்று மிகப்பெரிய மக்கள் திரட்சி இருந்தது. சசிகலா வருகையின்போதும் மிகப்பெரிய எழுச்சியாக இருந்ததைப் பார்த்தேன். அது அவர்களது கட்சிக்கு பலமாக இருக்கும். சசிகலா வருகை அவர்களது கட்சி தொடர்பானது. நாங்கள் அ.தி.மு.க கூட்டணியில் இருக்கிறோம், அ.தி.மு.க முதல்வர் வேட்பாளரை முடிவு செய்துவிட்டது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு