Published:Updated:

`நிகும்பலா யாகம் எதற்காக?'- பொன்னாரின் கும்பகோணம் விசிட்டால் குழம்பும் பா.ஜ.க நிர்வாகிகள்!

தமிழக பி.ஜே.பி தலைவர் பதவி தனக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக கும்பகோணத்தில் உள்ள கோயில் ஒன்றில் அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் செய்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

கோயிலில் பொன்.ராதகிருஷ்ணன்
கோயிலில் பொன்.ராதகிருஷ்ணன் ( ம.அரவிந்த் )

கும்பகோணம் அருகே உள்ள அய்யாவாடி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. நினைத்த காரியம் கை கூடுவதற்கு பொது மக்கள் தொடங்கி அரசியல் பிரபலங்கள் வரை இக்கோயிலுக்கு வந்து யாகம் நடத்தி சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம். தமிழக பி.ஜே.பி தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் அதன் பொறுப்பில் விடுவிக்கப்பட்டதுடன் தெலங்கானா கவர்னராகவும் நியமிக்கப்பட்டார். இதையடுத்து தமிழக பி.ஜே.பி தலைவர் பதவிக்கு இன்னும் யாரும் நியமிக்கப்படவில்லை.

கோயிலில் பொன்.ராதகிருஷ்ணன்
கோயிலில் பொன்.ராதகிருஷ்ணன்

கடந்த சில மாதங்களாகவே தலைவர் இல்லாமலேயே கட்சி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பி.ஜே.பியின் தமிழக தலைவராக வர வேண்டும் என அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதகிருஷ்ணன் அய்யாவடி கோயிலில் ரகசியமாக யாகம் நடத்தியுள்ளார் எனக் கூறப்படுகிறது.

தமிழக தலைவராகப் போறுப்பேற்பதற்கு தமிழகத்தில் பி.ஜே.பியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்குள் கடும் போட்டி நிலவி வருகிறது. ஆனால், யாரை தலைவராக நியமிப்பது என எந்த முடிவும் எடுக்காமல் அமைதியாக இருக்கிறது பி.ஜே.பி டெல்லி தலைமை. இப்படியான நிலையில்தான் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று இரவு கும்பகோணம் பிரத்யங்கிரா தேவி கோயிலிலுக்கு வந்துள்ளார். அங்கு தனக்கு தலைவர் பதவி கிடைக்க வேண்டும் என ரகசிய யாகம் நடத்திச் சென்றதாகவும், நிச்சயம் அவருக்கு தலைவர் பதவி கிடைக்கும் என அவருக்கு நெருக்கமானவர்கள் பேசி வருகின்றனர்.

கோயிலில் பொன்.ராதகிருஷ்ணன்
கோயிலில் பொன்.ராதகிருஷ்ணன்

இதுகுறித்து விவரம் அறிந்தவர்கள் சிலரிடம் பேசினோம். ``பி.ஜே.பியில் தமிழக தலைவர் பதவியைப் பெறுவதற்குப் பலர் முயன்று வருகின்றனர். முக்கிய பிரபலங்கள் சிலர் டெல்லியில் முகாமிட்டு இதற்காக காய்கள் நகர்த்தினர். ஆனால், கட்சித் தலைமை எந்த முடிவும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறது. இந்த நிலையில் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று கும்பகோணம் பிரத்யங்கிரா தேவி கோயிலில் சிறப்பு யாகம் செய்ய இருக்கிறார் எனத் தகவல் பரவியது. இதற்காக அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு.முருகானந்தம் நேற்று மதியமே கும்கோணம் வந்ததுடன் யாகத்திற்கான ஏற்பாட்டை மிக ரகசியமாகச் செய்தார்.

அப்படியும் விஷயம் வெளியே கசிய கட்சியினர் சிலர் அவரை சந்திக்கச் சென்றிருக்கிறார்கள். அதற்கு யாரும் பொன்னாரைச் சந்திக்க வர வேண்டாம் அவர் தனிப்பட்ட விஷயத்திற்காக வருகிறார் எனக் கூறி திருப்பி அனுப்பிவிட்டனர். இரவு ஏழு மணிக்கு மேல் கோயிலுக்கு வந்த அவர் அதன்பிறகு நிகும்பலா எனச் சொல்லப்படும் யாக பூஜை தொடங்கியது. வேத சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத அதைச் சொல்லிக்கொண்டே இருந்தார் பொன்னார். மிளகாய் மற்றும் பல்வேறு மூலிகைப் பொருள்களைக் கொண்டு நடத்தப்பட்ட அக்னி குண்ட யாகம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்து. யாக பூஜை முடிந்த பின்னர் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து விட்டு கோயிலிலிருந்து புறப்பட்டுச் சென்று விட்டார். தலைவர் பதவியைப் பெறுவதற்கே அவர் இந்த யாகத்தை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது'' என்றனர்.

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

கட்சியின் நிர்வாகிகள் சிலரோ, ``பி.ஜே.பியில் வாரிசு அரசியலை ஊக்குவிப்பது கிடையாது. அதேபோல் கட்சியில் ஒரு பொறுப்பில் ஒரு முறை இருந்தவருக்கு மீண்டும் அதே பொறுப்பை வழங்குவது கிடையாது. இந்த நிலையில் ஏற்கெனவே தமிழக தலைவராக இருந்த பொன்னாருக்கு மீண்டும் அந்தப் பதவி கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான். ஆனாலும் அதற்காக அவர் யாகம் வளர்த்து பூஜைகள் செய்துள்ளார். தலைவர் பதவி கிடைக்குமா எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்'' என்றனர்.

இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த பாலா என்பவர் கூறுகையில், ``எதிரிகளை வீழ்த்தவும், மனதில் நினைத்த காரியம் கைகூடி உயர் பொறுப்புகள் பெறுவதற்கும், அரசியலில் ஏறுமுகம் காண்பதற்கும் அரசியல் பிரபலங்கள் இக்கோயிலுக்கு வந்து யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, தினகரன் மற்றும் பல பிரபலங்கள் இங்கு வந்து யாகம் நடத்தியுள்ளனர். அமித் ஷா இங்கு வந்து யாகம் வளர்த்து பூஜைகள் செய்தார். அதன்பிறகே அவர் பி.ஜே.பியின் தேசியத் தலைவராகப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்பு மிக்க பிரத்யங்கிரா தேவி கோயிலில் பொன்.ராதாகிருஷ்ணன் யாகம் வளர்த்து பூஜைகள் செய்துவிட்டுச் சென்றார்'' என்றார்.