Published:Updated:

`ஸ்டாலினுக்கு எழுதப் பேசத் தெரியாதா?'- ஆர்.எஸ்.பாரதியை கடுமையாகச் சாடிய பொன்னார்

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

தி.மு.க போராட்டத்தின் பின்னணியை நீங்கள் பாருங்கள். அவர்களுக்கு தேவை 2021-ல் நடக்க இருக்கும் தேர்தலில் வெற்றிபெற்றாக வேண்டும். தி.மு.க-வை நம்பிக் களத்தில் இறங்காதீர்கள்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த விளக்கப் பொதுக்கூட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்றது. நாகர்கோவில் மாநகர பா.ஜ.க சார்பில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், ``குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடும் இஸ்லாமியர்கள் மற்றும் மாணவர்கள் வீதிக்கு வர வேண்டாம். மீறி வந்தால் அவர்களை வைத்து அரசியல் செய்ய தி.மு.க காத்துக்கொண்டிருக்கிறது.

பா.ஜ.க சார்பில் நடந்த குடியுரிமை சட்ட விளக்க பொதுக்கூட்டம்
பா.ஜ.க சார்பில் நடந்த குடியுரிமை சட்ட விளக்க பொதுக்கூட்டம்

போராட்டம் முடித்துவிட்டு பத்திரமாக வீட்டுக்குச் செல்ல வேண்டும் என தி.மு.க-வினர் நினைக்கவில்லை. எதாவது பிரச்னை ஏற்பட்டு துப்பாக்கி குண்டுக்கு இரையானால் தி.மு.க-வினர் சந்தோஷப்படுவார்கள். இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் தெருவுக்கு வாருங்கள் என அறைகூவல் விடுக்கிறார் ஸ்டாலின். தயவுசெய்து தெருவுக்கு வந்துவிடாதீர்கள். 1967-ல் ஆட்சிக்கு வருவதற்காக பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையை அழித்தார்கள். தி.மு.க-வின் தூண்டுதலின் பேரில் போராட்டத்துக்கு வீதிக்கு வந்த மாணவர்கள் துப்பாக்கிக்கு இரையானார்கள். தடியடிக்குப் பல மாணவர்கள் பலியானார்கள். அதை வைத்து அரசியல் செய்தார்கள்.

`கூட்டணி தர்மத்தால் அமைதியாக இருக்கிறேன்!'- ஜெயக்குமார் பேச்சால் கொதித்த பொன்னார்

தி.மு.க-வின் ஆர்.எஸ்.பாரதி பத்திரிகையாளர்களை மோசமாக விமர்சிக்கிறார். `கலைஞர் இந்த நேரத்தில் இல்லாமல் போய்விட்டாரே, அவர் இருந்தால் சி.ஏ.ஏ-வுக்கு எதிராக மிக அருமையான கட்டுரை எழுதியிருப்பார்' என்றும் அவர் பேசினார். அப்படியானால் இன்று இருக்கும் தலைவர் ஸ்டாலினுக்கு எழுதவும் தெரியாது, பேசவும் தெரியாது என்று கூறுகிறாரா?

கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்
கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்

இஸ்லாமிய சகோதரர்கள் இந்தச் சட்டம் குறித்து அச்சப்படத் தேவையில்லை. ஓர் இந்துவுக்கு இந்திய மண்ணில் வாழ்வதற்கு எவ்வளவு உரிமை உள்ளதோ அதில் கடுகளவும் குறையாமல் இங்கே இஸ்லாமியர்களுக்கு வாழ உரிமை உண்டு. அந்த உரிமையைக் காப்பாற்றும் வகையில் பா.ஜ க-வினர் செயல்படுவார்கள். இதைப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் உறுதி செய்வார்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு