Published:Updated:

அதோகதியில் அண்ணா நூலகம்?

அதோகதியில் அண்ணா நூலகம்?
பிரீமியம் ஸ்டோரி
அதோகதியில் அண்ணா நூலகம்?

கருணாநிதி கட்டியதால் புறக்கணிக்கிறதா அ.தி.மு.க அரசு?

அதோகதியில் அண்ணா நூலகம்?

கருணாநிதி கட்டியதால் புறக்கணிக்கிறதா அ.தி.மு.க அரசு?

Published:Updated:
அதோகதியில் அண்ணா நூலகம்?
பிரீமியம் ஸ்டோரி
அதோகதியில் அண்ணா நூலகம்?

‘‘நான் பார்த்தவற்றிலேயே பிரமிப்பூட்டும் கட்டடங்களில் ஒன்று, அண்ணா நூற்றாண்டு நூலகம்’’ - 2011-ம் ஆண்டு சென்னை வந்திருந்த அப்போதைய அமெரிக்க உள்துறைச் செயலாளர் ஹிலரி கிளின்டன் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் பார்வையிட்டபோது இப்படித்தான் சிலாகித்தார். ‘ஹிலரி கிளின்டனால் சிலாகிக்கப்பட்ட அந்த நூலகம், தற்போது அடிப்படை வசதிகள் ஏதுமின்றி பரிதாபமாகக் காட்சியளிக்கிறது’ என்று கவலைக்குரல்கள் கேட்கின்றன.

2010-ம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக்காலத்தில் 179 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வியக்கவைக்கும் வகையில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம், இப்போது எப்படி இருக்கிறது?

நாள் ஒன்றுக்கு சுமார் 1,000 பேர் வந்து செல்லும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் தரைதளத்தில் இருக்கின்றன பொதுக்கழிவறைகள். அவை, பராமரிப்பின்றி மிகவும் மோசமான நிலையில் உள்ளன. புத்தக நிகழ்வுகள், பள்ளிக்கல்வித் துறை சார்ந்த நிகழ்வுகள் உள்ளிட்ட பல முக்கிய நிகழ்ச்சிகள் அண்ணா நூலகத்தில் அடிக்கடி நடைபெறும்.

திறந்து கிடக்கும் தண்ணீர்த் தொட்டி
திறந்து கிடக்கும் தண்ணீர்த் தொட்டி

‘‘நிகழ்ச்சிக்கு வருவோர், சுகாதாரமற்ற கழிவறையை எப்படிப் பயன்படுத்த முடியும்?’’ என்று அங்கு இருந்த ஊழியரிடம் கேட்டோம்.

“இவை பொதுமக்களுக்கு மட்டுமான கழிவறைகள். வி.ஐ.பி-கள் மற்றும் அரசு நிகழ்வுக்கு வரும் அதிகாரிகளுக்கு, மேல்தளத்தில் தனிக் கழிவறைகள் இருக்கின்றன. அது சுத்தமாக இருக்கும்’’ என்றார்.

‘‘கழிவறை ஊழியர்கள், அவுட் சோர்ஸிங் முறையிலேயே நியமிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு பணிநிரந்தரம் கோரி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதால், கழிவறையைச் சுத்தம்செய்ய ஆள் இல்லை’’ என்று காரணம் சொல்கின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தண்ணீர்த்தொட்டிக்கு அருகே சேர்ந்திருக்கும் குப்பைகளால் குபீரெனக் கிளம்பும் துர்நாற்றம் மூக்கைப் பொத்தவைக்கிறது.

‘கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் கட்டப்பட்ட காரணத்தாலேயே, ஜெயலலிதா ஆட்சியில் நூலகத்தைப் பராமரிக்க மறுக்கிறார்கள்’ என்று சில ஆண்டுகளுக்கு முன்பு உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதி, ‘நூலகத்தை முறையாகப் பராமரிக்க வேண்டும்’ என்று தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

‘இந்த உத்தரவைச் செயல்படுத்த வேண்டியது தலைமை நூலகர்தான். ஆனால், இந்த ஒன்பது ஆண்டுகளில் தலைமை நூலகரே நியமிக்கப்படவில்லை’ என்ற புகாரும் எழுகிறது.

பராமரிப்பற்ற கழிவறை
பராமரிப்பற்ற கழிவறை

‘‘அரசு ஊழியர்களுக்கு, பிடித்தம் போகத்தான் மாத ஊதியம் வழங்கப்படும். ஆனால், எங்களுக்கு எந்தவிதப் பிடித்தமும் இல்லாமல் ஊதியம் வழங்கப்படுகிறது. அதனால், அரசு ஊழியர்களுக்கான உத்தரவாதம் இல்லாததைப்போல் உணர்கிறோம். எங்களில் யாரேனும் ஒருவர் திடீரென இறந்துவிட்டால், அவர்களுடைய குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறிதான். பள்ளிக்கல்வித் துறை இயக்குநராக இருந்த உதயச்சந்திரன், நூலகத்துக்காக நிறைய நல்ல பல திட்டங்களைக் கொண்டுவந்து செயல்படுத்தினார். அவர் மாற்றப்பட்ட பிறகு, எந்த ஓர் அதிகாரியும் இந்த நூலகத்தைக் கண்டுகொள்வதே இல்லை. உலகத்தரம் வாய்ந்த நூலகம் என்பதை, பெயரளவில் மட்டுமே கொண்டிருக்கிறது’’ என்று புகார் வாசிக்கின்றனர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஊழியர்கள் சிலர்.

பள்ளிக்கல்வித் துறையின் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் பேசினோம். “சிங்கப்பூர் தேசிய நூலகத்தை மாடலாகக்கொண்டு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை வடிவமைத்தோம். தலைவர் கருணாநிதி பெரும்கனவுடன் கட்டிய நூலகத்தைப் பராமரிக்கவோ மேம்படுத்தவோ அ.தி.மு.க அரசுக்கு துளியும் அக்கறையில்லை. நூலகத்தை அழிப்பதே இவர்களின் நோக்கம். நூலகத்துக்கான புத்தகங்கள் வாங்க வேண்டும் என்றால்கூட, நீதிமன்றத்துக்குச் சென்று போராட வேண்டிய சூழல்தான் இப்போதுள்ளது’’ என்றார்.

சென்னை மாவட்ட நூலக அலுவலர் இளங்கோ சந்திரகுமார், ‘‘நூலக ஊழியர்களுக்கான வைப்புநிதி தொடர்பான பணிகள் நடைபெற்றுவருகின்றன. விரைவில் பிற அரசு ஊழியர்கள்போல் அண்ணா நூற்றாண்டு நூலக ஊழியர்களுக்கான சலுகைகளும் உரிமைகளும் நிறைவேற்றிக் கொடுக்கப்படும்’’ என்றார்.

நூலகப் பிரச்னைகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் கேட்டோம்.

‘‘எனக்கு இதுவரை அப்படி ஏதும் புகார்கள் வரவில்லை. ஓரிரு நாளில் நடவடிக்கை எடுக்கிறேன்’’ என்று உத்தரவாதம் கொடுத்தார்.

அண்ணா நூற்றாண்டு நூலகம், விரைவில் புத்துயிர் பெற வேண்டும்!