ஒரு நூலகம் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக சென்னை கோட்டூர்புரத்தில் அமைச்சர் துரைமுருகன் வீட்டருகே இருக்கும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைச் சொல்வோம். எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக, அதே துரைமுருகனின் காட்பாடி தொகுதியிலுள்ள அண்ணா நூலகத்தைச் சொல்லலாம்!


வேலூர் மாவட்டத்தில் ஒரு மாவட்டத் தலைமை மைய நூலகம், ஒரு நடமாடும் நூலகம், 69 கிளை நூலகங்கள், 68 ஊர்ப்புற நூலகங்கள் இருக்கின்றன. இவற்றில் மிகப் பழைமையானதும், சிறந்த நூலக விருது பெற்றதுமான அறிஞர் அண்ணா கிளை நூலகம் காட்பாடி காந்தி நகரில் அமைந்திருக்கிறது. “இந்த நூலகத்தில் சுமார் 60,000 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலான நூல்கள் குப்பைகளைப்போல கொட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. பராமரிப்பு இல்லாததால், முக்கியமான நூல்களெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக செல்லரித்து, சிதைந்து கொண்டிருக்கின்றன. நூலகக் கட்டடம் பழுதடைந்து, எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் இருக்கிறது. அதைக் காப்பாற்ற உதவுங்கள்” என்று வாசகர்கள் சிலர் நமக்குத் தகவல் தெரிவித்தனர்.

நூலகத்துக்கு நேரில் சென்றோம். மேற்கூரையின் சிமென்ட் பூச்சு பெயர்ந்து, கம்பிகள் உட்புறமாக நீட்டிக்கொண்டிருந்தன. ஆங்காங்கே பொத்தல் பொத்தல்களாக ஓட்டைகளும் ஏற்பட்டிருக்கின்றன. நிமிர்ந்து நின்றால் தலை இடிக்கும்... அண்ணாந்து பார்த்தால் கண்கள் காயப்படும் நிலை. காற்றாடியை ஓடவிட்டால் பிடுங்கிக்கொண்டு விழுந்துவிடும்போல. எங்கு பார்த்தாலும் விரிசல், ஒட்டடை. ‘அறிவால் உயர்வோம்; அரிவாளைத் தவிர்ப்போம்’ என்ற வாசகத்துடன்கூடிய அண்ணல் அம்பேத்கரின் புகைப்படம் உள்ளிட்ட பல அறிஞர்களின் படங்கள் ஓரமாக எடுத்துவைக்கப்பட்டிருக்கின்றன. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படம் மட்டும் சிலந்தி வலை சூழ்ந்த நிலையில் தொங்கிக்கொண்டிருக்கிறது.

235 பேர் நிரந்தரப் புரவலர்களாகவும், 5,722 பேர் உறுப்பினர்களாகவும் இருக்கும் இந்த நூலகத்துக்கு, உயிருக்கு பயந்து இப்போது யாரும் வருவதில்லை. இதுகுறித்து நம்மிடம் பேசிய வாசகர் வட்டத் தலைவர் வி.பழனி, ``வாசகர்கள் அனைவரும் சேர்ந்து, நூலகத்தைப் புதுப்பிக்கக் கோரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன், மாவட்ட ஆட்சியர், மாவட்ட நூலக அலுவலர் எனப் பலரிடம் மனு கொடுத்துவிட்டோம். ஆனால், இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சிதிலமடைந்த கட்டடத்தைப் புதுப்பித்து, டிஜிட்டல் நூலகமாக மாற்றித் தர வேண்டும். இன்னும் கொஞ்ச நாள்கள் போனால், புத்தகங்களைக் கரையான்களே தின்று ஜீரணித்துவிடும். எனவே, தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நூலகத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில்தான் அரசு சட்டக் கல்லூரி அமைந்திருக்கிறது. அங்கு படிக்கும் மாணவர்களின் நலன் கருதி சட்டப் புத்தகங்களையும் நூலகத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும்’’ என்றார்.

துரைமுருகனின் வீட்டருகேதான் இந்த நூலகமும் இருக்கிறது. அவரது கடைக்கண் பார்வை படுமா?!