Published:Updated:

உருக்குலையும் கண்ணகி கோட்டம்... உரிமையை விட்டுக்கொடுக்கிறதா தி.மு.க அரசு?

கண்ணகி கோட்டம்
பிரீமியம் ஸ்டோரி
கண்ணகி கோட்டம்

இந்தப் பாதை கேரள வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், பக்தர்களை நடந்து செல்ல மட்டுமே அனுமதிக்கிறார்கள்.

உருக்குலையும் கண்ணகி கோட்டம்... உரிமையை விட்டுக்கொடுக்கிறதா தி.மு.க அரசு?

இந்தப் பாதை கேரள வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், பக்தர்களை நடந்து செல்ல மட்டுமே அனுமதிக்கிறார்கள்.

Published:Updated:
கண்ணகி கோட்டம்
பிரீமியம் ஸ்டோரி
கண்ணகி கோட்டம்

தமிழர்களின் பண்பாட்டுத் தலமாகத் திகழும் கண்ணகி கோட்டம், கேரள அரசின் பிடியில் சிக்கி உருக்குலைந்துவருவதால், அதைத் தமிழக அரசு மீட்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுக்கத் தொடங்கியிருக்கிறது. சிலப்பதிகார நாயகியான கண்ணகிக்கு, மேற்குத் தொடர்ச்சி மலையின் விண்ணேற்றிப் பாறையில் கோயில் இருக்கிறது. இங்குள்ள கண்ணகி சிலை உடைந்த நிலையில் சிதிலமடைந்திருக்கிறது. இதனால், ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று முழுநிலவில் நடக்கும் திருவிழாவின்போது, உடைந்த சிலையின் மேல் பகுதியில் சந்தனத்தால் அம்மனை முழுமையாக வடிவமைத்து பக்தர்கள் வழிபடுகிறார்கள். ஆனால், இந்த வழிபாட்டுக்கும் கேரள அரசு பல வழிகளில் முட்டுக்கட்டை போடுவதாகப் புலம்புகிறார்கள் பக்தர்கள்.

உருக்குலையும் கண்ணகி கோட்டம்... உரிமையை விட்டுக்கொடுக்கிறதா தி.மு.க அரசு?
உருக்குலையும் கண்ணகி கோட்டம்... உரிமையை விட்டுக்கொடுக்கிறதா தி.மு.க அரசு?

கண்ணகி கோட்டத்தை கேரளா அபகரித்துக்கொண்ட வரலாறு பற்றி நம்மிடம் பேசியவர்கள், ‘‘1977-ல் கண்ணகி கோட்டம் இருந்த 600 ஏக்கர் வனப்பகுதியை மத்திய அரசு, பெரியாறு புலிகள் வனச் சரணாலயமாக அறிவித்ததால், அந்த இடம் கேரளாவின் கட்டுப்பாட்டுக்குச் சென்றுவிட்டது. இதன் பிறகு, ஒரு வாரம் முழுமையாக நடந்துவந்த சித்ரா பௌர்ணமி திருவிழா, படிப்படியாகக் குறைந்து இப்போது ஒரு நாள் மட்டுமே நடக்கிறது. இதிலும் காலை 6 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

தேனி மாவட்டம், கூடலூர் பளியன்குடியிலிருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது கண்ணகி கோட்டம். ஆனால், இந்தப் பாதை கேரள வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், பக்தர்களை நடந்து செல்ல மட்டுமே அனுமதிக்கிறார்கள். இது தவிர, குமுளியிலிருந்து 16 கிலோமீட்டர் தூரம் ஜீப்பில் பயணம் செய்தும் கண்ணகி கோட்டத்துக்குப் போக முடியும். ஆனால், தமிழக வாகனங்களைச் சோதனை என்ற பெயரில் பாடாய்ப்படுத்தும் கேரள வனத்துறை, கேரள ஜீப்புகளை மட்டும் கண்டுகொள்வதில்லை. அதனால் கண்ணகி கோயிலுக்குச் செல்கிற தமிழர்கள் கேரள ஜீப்புகளில், தலைக்கு 400 ரூபாய் கொடுத்துப் போகவேண்டியிருக்கிறது” என்றனர்.

உருக்குலையும் கண்ணகி கோட்டம்... உரிமையை விட்டுக்கொடுக்கிறதா தி.மு.க அரசு?
உருக்குலையும் கண்ணகி கோட்டம்... உரிமையை விட்டுக்கொடுக்கிறதா தி.மு.க அரசு?

மங்களதேவி கண்ணகி அறக்கட்டளையின் தலைவர் ராஜேந்திரன் நம்மிடம் பேசும்போது, ‘‘கேரள வனத்துறைக்கு எதிராக வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் 1988-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், ‘தமிழக பக்தர்களை கேரள வனத்துறை தடுக்கக் கூடாது’ என்று தீர்ப்பு வந்தது. ஆனாலும், அந்தத் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை. கண்ணகி கோட்டம் தமிழகத்துக்குச் சொந்தமானது என்று அரசு ஆவணங்களில் இருக்கிறது. ஆனால், கேரள அரசு இதைக் கண்டுகொள்வதில்லை.

கண்ணகி கோட்டம் சிதிலமடைந்துவருவதால், அதைச் சீரமைக்கக் கோரி எங்கள் அமைப்பின் சார்பாக 2018-ல் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அதை ஏற்று, ‘கண்ணகி கோட்டத்தை 10 நாள்களில் சீரமைக்க வேண்டும்’ என்று நீதிமன்றமும் உத்தரவிட்டது. அதனால் கேரள அரசாங்கம் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததோடு, முதற்கட்டமாக 40 லட்சம் ரூபாயில் பணிகளையும் தொடங்கியது. ‘கோயில் சீரமைக்கப்பட்ட பிறகு, ஒவ்வொரு வருடமும் 24 நாள்கள் வழிபாட்டுக்கு அனுமதி கொடுக்கப்படும்’ என்று கேரள முதல்வரும் அறிவித்தார். ஆனால், சுற்றுச்சுவர் சீரமைக்கும் பணி தொடங்கியதும், தேனி மாவட்ட வன அலுவலர், கேரள அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், ‘இரு மாநில எல்லையில் கோயில் இருப்பதால், தமிழக அரசிடம் ஒப்புதல் பெறுங்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதைச் சாக்காக வைத்துக்கொண்டு சீரமைப்புப் பணிகளையே கேரள அரசு நிறுத்திவிட்டது. இந்தக் கோயிலை இந்திய தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தால் மட்டுமே, இதன் பழைமை மாறாமல் பாதுகாக்க முடியும். அதை வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றோம். அந்த வழக்கில் இரு மாநில அரசுகளுக்கும் விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், இதுவரை இரு மாநில அரசுகளும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை” என்றார் வருத்தத்துடன்!

ராஜேந்திரன்
ராஜேந்திரன்
அன்வர் பாலசிங்கம்
அன்வர் பாலசிங்கம்

இந்த விவகாரம் பற்றிப் பேசிய ‘பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர்’ அன்வர் பாலசிங்கம், ‘‘முல்லைப்பெரியாறு அணையைப்போலவே கண்ணகி கோயிலின் உரிமையையும் நாம் இழந்துவருகிறோம். இரு மாநிலங்களுக்கான எல்லையை டிரோன் கேமரா மூலம் மறுவரையறை செய்தால், கண்ணகி கோயில் தமிழக எல்லைக்குள் இருப்பது உறுதிசெய்யப்படும். அதன் பின்னர், கோயிலை தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியும். உடைந்துபோன கண்ணகி சிலையின் தலை மற்றும் இடைப்பகுதி எங்கு இருக்கிறது என்பதையும் கண்டுபிடித்து சீரமைக்க வேண்டும்” என்றார்.

இது தொடர்பாக தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் பேசினோம்... “சம்பந்தப்பட்ட இடம் கேரள மாநில எல்லைக்குள் இருக்கிறது. கோயில் நிர்வாகமும் நம்மிடம் இல்லை. கோயிலுக்குச் செல்லும் பாதையும் கேரள வனத்துறையின் கட்டுப்பாட்டில் வருகிறது. இரண்டு மாநில பிரதிநிதிகளும் அமர்ந்து பேசி, இதில் சுமுகத் தீர்வு காண வேண்டும். முதல்வருடன் கலந்தாலோசித்த பிறகு என்ன நடவடிக்கை எடுப்பது என்று முடிவெடுக்கப்படும்” என்றார்.

சிலப்பதிகாரத்தின் மீதான ஆர்வம் காரணமாக 1977-ல் பூம்புகாரில் கண்ணகிக்கு சிலை அமைத்தார், அன்றைய முதல்வர் கருணாநிதி. அவர் வழிவந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கண்ணகி கோட்டத்தை மீட்க வேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism