Published:Updated:

’எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான போஸ்டர்’ - நெல்லை அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் விளக்கம்!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்

`கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்தைக் கலந்தாலோசிக்காமல், எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதால் கட்சிக்குப் பின்னடைவு ஏற்படுகிறது’ என அ.தி.மு.க-வினர் கண்டன போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் அ.தி.மு.க கலகலத்துப் போயிருக்கிறது. கட்சியின் இரட்டைத் தலைமை தொடர்பாக தொண்டர்களிடம் கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்துவருகின்றன. கட்சியின் மூத்த தலைவர்களுக்கு இடையே இணக்கம் இல்லாதது போன்ற தோற்றமும் தொண்டர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியிருக்கிறது.

நெல்லை: `லாக்டௌன் முடியட்டும்..!’ - நம்பிக்கை அளித்த சசிகலா; உற்சாகத்தில் அதிமுக நிர்வாகி

இந்தச் சூழலில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியாகத் திகழ்ந்த சசிகலா, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் தொலைபேசி வாயிலாக கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து பேசிவருவது அ.தி.மு.க-வில் சலசலப்பை ஏற்படுத்திவருகிறது.

ஜெயலலிதா உயிரோடு இருந்த வரையிலும் கட்சியை ராணுவக் கட்டுக்கோப்புடன் வைத்திருந்ததாக அ.தி.மு.க-வின் அடிமட்டத் தொண்டர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், தற்போதுள்ள இரட்டைத் தலைமையும், அவர்களுக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளும் கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்துவதாகத் தொண்டர்கள் கருதுகிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்
ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

இந்தநிலையில், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமியை பெயர் குறிப்பிடாமல் விமர்சிக்கும் போஸ்டர் நெல்லை நகரம் முழுவதும் இன்று ஒட்டப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

`மானூர் ஒன்றிய அ.தி.மு.க தொண்டர்கள்’ என்ற பெயரில் ஓட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களில், “கட்சியின் செயல்பாடுகளில் அம்மாவால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தைக் கலந்து ஆலோசிக்காமல் எதையும் செய்யக் கூடாது. அப்படிச் செய்ததால்தான் தேர்தலில் தோற்றுப்போனோம். இனியும் தொடர்ந்தால் தலைமைக் கழகத்தை முற்றுகையிடுவோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் கணேசராஜா
அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் கணேசராஜா

இந்த போஸ்டர்கள் குறித்து நெல்லை அ.தி.மு.க மாவட்டச் செயலாளரான தச்சை கணேசராஜாவிடம் கேட்டதற்கு, “ஒன்றரைக் கோடி தொண்டர்களைக் கொண்ட மாபெரும் இயக்கமான அ.தி.மு.க-வின் உண்மையான தொண்டர்கள் யாரும் இது போன்ற செயலில் ஈடுபட மாட்டார்கள். ஜனநாயக இயக்கமான அ.தி.மு.க மீது கருத்து வேறுபாடு இருந்தால்கூட நேரில் பேசுவதற்கு வாய்ப்பு இருக்கும் நிலையில், அம்மாவின் உண்மையான தொண்டர்கள் யாரும் போஸ்டர் மூலம் குழப்பம் ஏற்படுத்த மாட்டார்கள்.

கடந்த சில தினங்களாக கட்சிக்குச் சம்பந்தமே இல்லாத சசிகலா, யாரெல்லாம் கட்சியிலிருந்து விலகிச் சென்றார்களோ அல்லது விலக்கிவைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களிடம் பேசுவதாகத் தகவல்கள் வருகின்றன. அந்தக் குழப்பத்தின் தொடர்ச்சியாகவே இந்த போஸ்டர்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அ.தி.மு.க தொண்டர்களிடம் குழப்பம் ஏற்படுத்தும் முயற்சியில் சிலர் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் எண்ணம் ஈடேறாது.
கணேசராஜா, அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்

போஸ்டர் அச்சிடப்பட்ட பிரஸ் பெயர் மற்றும் அதை அச்சிட்ட இயக்கத்தவரின் பெயர் இல்லாமல் அநாமதேயமாக வெளியாகியுள்ள இந்த போஸ்டர் மூலம் அ.தி.மு.க என்னும் பேரியக்கத்துக்குள் குழப்பம் ஏற்படுத்தி, குளிர்காய சிலர் முயல்கிறார்கள். அவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது” என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு