Published:Updated:

`பேராசிரியர் க.அன்பழகனுக்கு வந்த கடைசிக் கடிதம்' - மாலையோடு வந்த போஸ்ட்மேன்!

போஸ்ட்மேன் சிதம்பரம்
போஸ்ட்மேன் சிதம்பரம்

வரிசையில் நின்றால் குறைந்தது ஒரு மணி நேரமாகும். இதனால் தனது வேலை பாதிப்பதோடு, மற்றவர்களுக்கு வந்த தபால்களை டெலிவரி செய்ய முடியாது என்பதால் சிதம்பரம் சோகத்தில் இருந்துள்ளார்.

தி.மு.க பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் உடல்நலக்குறைவால் இன்று மரணம் அடைந்தார். அவரது உடல் அஞ்சலிக்காக கீழ்பாக்கம் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. முக்கிய பிரமுகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்திய நிலையில், தி.மு.க தொண்டர்களும் அஞ்சலி செலுத்த நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அந்த நெரிசலில் இருந்தவர் போஸ்ட்மேன் சிதம்பரம். பேராசிரியர் அன்பழகன் அண்ணாநகர் வீட்டில் இருந்தபோதும் சரி, தற்போது இருக்கும் வீட்டிலும் சரி தினசரி தபால் கொண்டு வருபவர்தான் இந்த போஸ்ட்மேன் சிதம்பரம்.

இறுதி அஞ்சலி
இறுதி அஞ்சலி

கடந்த 20 ஆண்டுகளாக இவர்தான் பேராசிரியருக்கு வரும் தபால்களைக் கொண் வந்து கொடுத்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, இன்று காலை சிதம்பரம் பணிக்கு வந்தபோது அன்பழகன் இறப்பு குறித்த செய்தி தெரிய வர, இன்றும் அவருக்கு வந்த தபாலை எடுத்துக்கொண்டு கூடவே அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த மாலை ஒன்றையும் வாங்கிக்கொண்டு வந்திருக்கிறார். தொண்டர்கள் அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்த நீண்ட வரிசையில் சிதம்பரமும் நின்றுகொண்டிருந்திருக்கிறார்.

ஒருபுறமும் நீண்ட வரிசையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த நிற்க, மறுபக்கம் கட்சி நிர்வாகிகள் வேறு வழியில் வீட்டுக்குள் செல்ல முயன்றதால், அங்கு போலீஸாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது. கூட்ட நெரிசல் காரணமாக மற்றொரு வழியில் போலீஸ் யாரையும் அனுமதிக்கவில்லை. வரிசையில் நின்றால் குறைந்தது ஒரு மணி நேரமாகும். இதனால் தனது வேலை பாதிப்பதோடு, மற்றவர்களுக்கு வந்த தபால்களை டெலிவரி செய்ய முடியாது என்பதால் சிதம்பரம் சோகத்தில் இருந்துள்ளார். போலீஸும் அவரை உள்ளே விடாமல் தடுத்ததால் சோகத்துடனே இருந்துள்ளார் சிதம்பரம்.

இறுதி அஞ்சலி
இறுதி அஞ்சலி

எப்படியாவது கடைசியாக அவரது முகத்தைப் பார்க்க வேண்டுமென ஆசைப்பட்டு போலீஸாரிடம் வேறுபாதையில் செல்ல அனுமதி கேட்டும், அதற்கு வாய்ப்பில்லாமல் போனது. கடைசியில் வேறு வழியில்லாமல் மாலையையும் பேராசியர் அன்பழகனுக்குக் கொண்டுவந்த கடைசி தபாலையும் போலீஸிடமே கொடுத்துவிட்டு, ``நீங்களே என் சார்பில் அஞ்சலி செலுத்திவிடுங்கள்'' என்று கூறிவிட்டு சோகத்துடன் தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்துள்ளார் போஸ்ட்மேன் சிதம்பரம்.

அடுத்த கட்டுரைக்கு