Published:Updated:

பா.ஜ.க-வுக்குள் அதிகார யுத்தம்... ஓரங்கட்டப்படுகிறாரா யோகி ஆதித்யநாத்?

மோடி - அமித் ஷா
பிரீமியம் ஸ்டோரி
மோடி - அமித் ஷா

75 வயதை அடைந்தவர்கள் கட்சிப் பதவிகளிலும் அரசுப் பதவிகளிலும் இருக்க முடியாது என்பது பா.ஜ.க-வில் எழுதப்படாத விதியாக இருந்துவருகிறது

பா.ஜ.க-வுக்குள் அதிகார யுத்தம்... ஓரங்கட்டப்படுகிறாரா யோகி ஆதித்யநாத்?

75 வயதை அடைந்தவர்கள் கட்சிப் பதவிகளிலும் அரசுப் பதவிகளிலும் இருக்க முடியாது என்பது பா.ஜ.க-வில் எழுதப்படாத விதியாக இருந்துவருகிறது

Published:Updated:
மோடி - அமித் ஷா
பிரீமியம் ஸ்டோரி
மோடி - அமித் ஷா

பா.ஜ.க-வுக்குள் அதிகாரப் போட்டி உச்சத்தில் இருப்பதாகச் செய்திகள் பரபரக்கின்றன. கட்சியிலும் ஆட்சியிலும் ‘நம்பர் 1’ இடத்தில் இருக்கும் மோடியும், ‘நம்பர் 2’ இடத்தில் இருக்கும் அமித் ஷாவும் தங்கள் இடங்களைத் தக்கவைத்துக்கொள்வதற்காக, தங்களின் போட்டியாளரான யோகியை ஓரங்கட்டுவதாகச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

மோடியா... யோகியா?

இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை நோக்கி ஓட ஆரம்பித்துவிட்டன. சமீபகாலமாக, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை ‘வருங்காலப் பிரதமர்’ என்று கட்சிக்குள்ளேயே ஒரு தரப்பினர் கூறிவரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. ‘2024-லும் பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிதான்’ என்று அடித்துச் சொல்லிவிட்டார் அமித் ஷா. அதனால், ‘டெல்லியை நோக்கிய யோகியின் அரசியல் பயணம் 2025-ல் தொடங்கும்’ என்று யோகி ஆதரவாளர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

பா.ஜ.க-வுக்குள் அதிகார யுத்தம்... ஓரங்கட்டப்படுகிறாரா யோகி ஆதித்யநாத்?

அதென்ன 2025? “75 வயதை அடைந்தவர்கள் கட்சிப் பதவிகளிலும் அரசுப் பதவிகளிலும் இருக்க முடியாது என்பது பா.ஜ.க-வில் எழுதப்படாத விதியாக இருந்துவருகிறது. ஒருவேளை 2024-ல் வெற்றிபெற்று மூன்றாவது முறையாக மோடி அரியணை ஏறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். தற்போது 72 வயதாகும் மோடி 2025-ம் ஆண்டு, செப்டம்பர் 17-ம் தேதி பிரதமர் பதவி யிலிருந்து இறங்கவேண்டி வரும். எனவே, டெல்லியை நோக்கிய யோகியின் பயணம் 2025-க்கு முன்பாகவே ஆரம்பித்துவிடும்” என்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள்.

ஓரங்கட்டும் முயற்சி!

பிரதமர் நாற்காலியில் அமர்வதற்கான தனது பயணத்தை எப்போதோ தொடங்கிவிட்டார் யோகி. கடந்த ஆண்டு, யோகியின் டெல்லி வருகையையொட்டி, ‘நம்பர் 1’ என்ற வாசகத்துடன் யோகி, மோடி புகைப்படங்கள் இடம்பெற்ற டிஜிட்டல் விளம்பரப் பலகைகளும், சுவரொட்டிகளும் டெல்லியில் பரவலாகக் காட்சியளித்தன. ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு அத்தனை விளம்பரப் பலகைகளும் சுவரொட்டிகளும் டெல்லி முழுவதும் வைக்கப்பட்டிருந்தது, சுதந்திர இந்தியாவில் அதுதான் முதன்முறை என்று சொல்லுமளவுக்கு கவனம் ஈர்த்தன அந்த விளம்பரங்கள். இதையெல்லாம் பார்த்த பிறகே, கட்சிக்குள் அவரை ஓரங்கட்டும் முயற்சிகள் தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது.

இது குறித்து டெல்லி பா.ஜ.க வட்டாரத்தில் பேசினோம். “பிரதமர் நாற்காலியில் அமர வேண்டும் என்கிற ஆசை யோகிக்கு இருக்கிறது என்பது எல்லோருக்குமே தெரியும். எனவே, யோகியை மோடியின் போட்டியாளராகவே நாம் கருதுவோம். ஆனால், அமித் ஷாவும், யோகியைப் போட்டியாளராகக் கருதுகிறார். அவர்களிடையேயான பனிப்போர் நீண்டகாலமாகவே தொடர்கிறது.

ஜம்மு காஷ்மீரில் பிரிவு 370-ஐ நீக்குவது பா.ஜ.க-வின் நீண்டகால அரசியல் செயல்திட்டம். அதை வெற்றிகரமாக நிறைவேற்றியவர், அமித் ஷா. அப்படிப்பட்ட அமித் ஷாவை, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான தொடக்கவிழாவுக்கு அழைக்காமல் தவிர்த்தார் யோகி. அமித் ஷாவும் சும்மா இல்லை. உ.பி-யில் யோகிக்கு ‘செக்’ வைக்க பல வேலைகளைச் சத்தமில்லாமல் செய்துவருகிறார். உ.பி துணை முதல்வரான கேசவ் பிரசாத் மௌரியா உள்ளிட்ட தன் ஆதரவாளர்கள் பலரை யோகி அமைச்சரவையில் நுழைத்திருக்கிறார் அமித் ஷா.

இதுதவிர, உ.பி பா.ஜ.க-வின் அதிகாரமிக்க பதவியான மாநில பொதுச்செயலாளர் (அமைப்பு) பதவியில் தன் ஆதரவாளரான சுனில் பன்சாலை நியமித்தார் அமித் ஷா. யோகியை வெளிப்படையாக எதிர்க்கும் சுனில் பன்சாலை, பா.ஜ.க அமைச்சர் களும் எம்.எல்.ஏ-க்களும் சந்திப்பதை யோகியால் தடுக்க முடியவில்லை. யோகியை மேடையில் வைத்துக்கொண்டே, ‘உ.பி-யில் 2017 தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்றதற்குக் காரணம் சுனில் பன்சால்தான்’ என்று பேசி, பரபரப்பை ஏற்படுத்தினார் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா. இப்படியாக, யோகிக்கும் மோடி, அமித் ஷா உள்ளிட்ட டெல்லி தலைமைக்கும் இடையே பனிப்போர் நடந்துகொண்டிருக்கிறது” என்கின்றனர் டெல்லி பா.ஜ.க-வினர்.

இந்தச் சூழலில்தான், உச்சபட்ச அதிகாரம்கொண்ட கட்சி மேல்மட்டக்குழுவான ‘பார்லிமென்ட்டரி போர்டு’ ஆகஸ்ட் 17-ம் தேதி மாற்றியமைக்கப்பட்டது. அந்தக் குழு வில், மோடி - அமித் ஷா ஆகியோரின் ஆதரவாளர்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கிறார்கள். தங்களின் போட்டியாளர்கள் என்று கருதும் எவருக்கும் அவர்கள் இந்தக் குழுவில் வாய்ப்பு கொடுக்கவில்லை. வழக்கமாக, கட்சியின் முன்னணிச் செயற்பாட்டாளர்கள் தொடங்கி மாநில முதல்வர்கள் வரை இந்தக் குழுவில் இடம்பெறுவார்கள். அந்த வகையில், கர்நாடகாவிலிருந்து எடியூரப்பா, மகாராஷ்டிராவிலிருந்து தேவேந்திர பட்னாவிஸ் உட்பட பலர் அதில் இடம்பெற்ற நிலையில், மோடிக்கும் அமித் ஷாவுக்கும் அடுத்தபடியாக அதிக செல்வாக்கு பெற்றவர் என்று கருதப்படும் யோகிக்கு அந்தக் குழுவில் இடமில்லை.

பா.ஜ.க-வுக்குள் அதிகார யுத்தம்... ஓரங்கட்டப்படுகிறாரா யோகி ஆதித்யநாத்?

தேர்தல் நேரத்து முடிவு!

கட்சிக்குள் மட்டுமே இருந்துவந்த இந்தப் பனிப்போர், சமீபத்தில் பொதுவெளியிலும் வெளிப்பட்டது. தேர்தல் இலவசங்களுக்கு எதிராக மோடி பேசியதற்குப் பிறகு, பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணத் திட்டத்தை அறிவித்தார் யோகி. உடனே, ‘மோடிக்கு எதிராக யோகி’ என்று சமூக வலைதளங்கள் பரபரத்தன. மோடியுடன் மோதுவதற்கு யோகியும் முடிவெடுத்துவிட்டதாகவே இதைப் பார்க்க முடிகிறது.

“பா.ஜ.க-வில் உண்மையான அதிகாரம் ஆர்.எஸ்.எஸ் கையில்தான் இருக்கிறது. அவர்கள் வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டால், அத்வானியாக இருந்தால் என்ன... அமித் ஷாவாக இருந்தால் என்ன... தேர்தல் நேரத்தில் எடுக்கப்படும் முடிவு அது” என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்!