Published:Updated:

மேக்கேதாட்டு விவகாரம்: `கர்நாடக அரசுக்குத் துணைபோகும் மத்திய அரசு’ - பி.ஆர். பாண்டியன் கண்டனம்

பி.ஆர். பாண்டியன்
பி.ஆர். பாண்டியன்

மேக்கேதாட்டுவில் அணைகட்ட கர்நாடக அரசுக்குத் துணைபோகும் மத்திய அரசு - பி.ஆர். பாண்டியன் கடும் கண்டனம்.

"குடிநீருக்காக  அணைக்கட்ட  உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்த ஆதாரம் இருந்தால் மேகதாட்டில் அணைகட்ட அனுமதி தர தயார்" என்ற மத்திய அமைச்சர் ஷெகாவத்தின் கருத்துக்கு பி.ஆர். பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பி.ஆர். பாண்டியன்
பி.ஆர். பாண்டியன்

இதுபற்றி தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர் பாண்டியனிடம் பேசினோம். "காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஓ.என்.ஜி.சி.க்கு எதிராகப்  போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெறப்படுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை என்கிற பெயரில் பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு  விவசாயிகள் மீதுள்ள வழக்குகளைத் திரும்ப பெற அறிவித்த நாள் முதல் அதற்கான அரசாணை பிறப்பித்து விவசாயிகளை வழக்கிலிருந்து மீட்டெடுக்க முன்வர வலியுறுத்துகிறேன்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் யூரியா ,பொட்டாஷ், டி.ஏ.பி .போன்ற உரங்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சம்பா சாகுபடி துவங்கவுள்ள நிலையில் தண்ணீர் தட்டுப்பாட்டால் உரிய காலத்தில் குறுவை சாகுபடிக்கு உரமிட முடியவில்லை. இதனால் மகசூல் இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.தமிழ்நாட்டிற்கு உரிய காலத்தில் தேவைக்கு ஏற்ப மத்திய அரசு உரங்களை ஒதுக்கீடு செய்கிறதா? இல்லையா? பாரபட்சம் காட்டுகிறதா? என்பதை தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அவசர நடவடிக்கை எடுத்து மத்திய அரசிடமிருந்து தேவையான உரங்களை பெற்று மாவட்டங்களுக்கு முன்கூட்டியே அனுப்பி வைத்திட வேண்டும்.

காவிரி
காவிரி

காவிரிப் பிரச்சினையில் தொடர்ந்து மத்திய அரசு, தமிழகத்திற்கு எதிராக கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்ட துணைபோகிறது என்பதை மத்திய அரசு அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக குடிநீருக்காக அணை கட்டிக் கொள்வதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள ஆதாரம் இருந்தால் மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதி தருவதாக மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் உறுதியளித்துள்ளதாக கர்நாடக முதலமைச்சர் அறிவித்துள்ளது  வன்மையாக கண்டிக்கத்தக்கது. காவிரி குறித்து இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கும், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மட்டுமே உள்ளதாக அரசியல்சட்டம் தெளிவுப்படுத்துகிறது. இதனை முழுமையாக தெரிந்திருக்கும் மத்திய அரசாங்கம், அவ்வபோது சட்டத்திற்குப் புறம்பாக மேகதாது அணை கட்ட ஆதரவளிப்பதாக வெளியிடுகிற செய்தி குறித்து  உச்சநீதிமன்றத்தில் ஆணையம் அவசரமாக முறையிட வேண்டும். மேக்கேதாட்டு அணை கட்டக்கூடாது என வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவில் தமிழகம் முழுமையிலும் நடைபெற உள்ள ஊராட்சி கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு