எந்தக் கூட்டத்திலும் பளிச்செனத் தெரியும் வண்ணத்தில் பளபளக்கும் சேலை, மைக் இல்லாமலே ‘தாமரை மலர்ந்தே தீரும்’ என உச்சத்தில் ஒலிக்கும் கம்பீரக் குரல், தமிழகத்தின் ஆழ அகலத்தை சுற்றுப்பயணம் மூலம் அளந்த அயராத உழைப்பு... டாக்டர் தமிழிசை செளந்தரராஜனின் இந்த அடையாளங்களுக்கெல்லாம் மகுடம் சேர்த்திருக்கிறது தெலங்கானா மாநில ஆளுநர் பொறுப்பு. தொண்டர்களால் ‘அக்கா அக்கா’ என்று அழைக்கப்பட்ட தமிழிசை இனி மேதகு ஆளுநர்!

`தமிழகத்தில் பிறந்து வளர்ந்த முதல் பெண் ஆளுநர்' என்று தமிழக வரலாற்றில் இடம் பெறுகிறார். தெலங்கானா மாநிலத்தின் முதல் முழுநேர ஆளுநர் என்கிற அடிப்படையில் தெலங்கானா மாநில வரலாற்றிலும் தமிழிசை இடம்பிடிப்பது கூடுதல் சிறப்பு.

அப்பா குமரி அனந்தன் தீவிர காங்கிரஸ் காரர். சுதந்திரப் போராட்டம் தொடங்கி பல்வேறு போராட்டங்களுக்காகச் சிறை சென்றவர். அற்புதமான பேச்சாளர். அப்பாவின் அரசியல் மேடைகளைப் பார்த்து வளர்ந்தவர் தமிழிசை.

தமிழகத்தில் தமிழிசை அளவுக்கு உருவம் தொடர்பான விமர்சனத்தை வேறு யாரும் எதிர்கொண்டது கிடையாது. மீம்ஸ் போடுகிறவர்களிடம் ‘இவ்வளவு திறமையை நேர்மறைச் செயலுக்குப் பயன்படுத்துங்கள்’ என்று பாசிட்டிவ் அப்ரோச் காட்டியவர் இவர்!

தஞ்சை மருத்துவக் கல்லூரியில் தமிழிசை படித்துக் கொண்டிருந்தபோது உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்து குற்றுயிரும் குலையுயிருமாக ஒரு கர்ப்பிணி மருத்துவமனையில் சேர்க்கப் படுகிறார். கருகிய உடலிலிருந்து வயிற்றுக்கு வெளியே பிஞ்சுக்குழந்தையின் கை நீட்டிக் கொண்டிருக்கிறது. அந்தக் கோரத்தை பார்த்துத் துடித்துப்போகிறார் தமிழிசை. சிகிச்சை அளித்தபிறகு அந்தப் பெண்ணிடம் கேட்கிறார்... ‘ஏன் இப்படி செய்து கொண்டாய்’ என்று. ‘குழந்தை பிறந்ததும் ஐந்து சவரன் நகையுடன்தான் வீட்டுக்கு வர வேண்டும் என்று கணவர் வீட்டில் கூறிவிட்டனர். என் திருமணத்துக்கு வாங்கிய கடனையே அடைக்க முடியாமல் கஷ்டத்தில் இருக்கிறார் அப்பா. வேறு வழியின்றி தீவைத்துக் கொண்டேன்’ என்று சொல்லியிருக்கிறார் அந்தப் பெண். `பெண்களுக்கு அதிகாரம் என்பது எவ்வளவு அவசியம்' என்பதை தமிழிசைக்கு உணர்த்திய முதல் நிமிடம் அது.

மற்றொரு நிகழ்ச்சி... மருத்துவக் கல்லூரியில் ஆக்சிஜன் சிலிண்டர் தீர்ந்துபோகிறது. உயிர்காக்கும் முக்கிய கருவிகள் ஏன் உடனுக்குடன் மருத்துவக் கல்லூரியில் வாங்கிவைக்கப்படுவதில்லை என மருத்துவக் கல்லூரி டீனிடம் முறையிடுகிறார் தமிழிசை. ‘இதையெல்லாம் மாணவர்கள் கேட்கக் கூடாது’ என்கிறார் டீன். அப்போது டீன் அருகில் இருந்தவர் ‘அந்த மாணவி, எதிர்க்கட்சித் தலைவர் குமரி அனந்தனின் பொண்ணு’ என்று சொல்ல, அதிகாரிகள் உடனே தமிழிசையிடம் குறைகளைக் கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதாக உறுதி அளிக்கிறார்கள். சேவை செய்யவும் அதிகாரம் தேவை என்று உணர்கிறார் அந்தப் பொழுதில். படித்து முடித்தபின் அரசியலுக்கு வரவேண்டுமென்பதை அன்றே முடிவு செய்துவிட்டார்.

பாரம்பர்ய காங்கிரஸ் குடும்பத்திலிருந்து எதிர்துருவமான பா.ஜ.க-வுக்கு இவர் வந்தது ஆச்சர்யம். அதுமட்டுமல்ல; தன் தந்தையைப் போலவே மாநிலத்தலைவர் ஆனதும், இரண்டாவது முறையாக அந்தப் பதவியில் நீடித்ததும் சாதனைச் சரித்திரம். காங்கிரஸ், இந்தியாவை வளர்ச்சிப்பாதைக்குக் கொண்டு செல்லவில்லை என்பது இளம்வயதிலேயே தமிழிசை எழுப்பிய குற்றச்சாட்டு. அந்த எண்ணமே இவரை எதிர்த்திசையில் பயணிக்க வைத்தது.

மிகப்பெரும் காங்கிரஸ் தலைவரின் மகள் பா.ஜ.க-வில் இணைந்த அதிர்ச்சியே தமிழிசைக்கான முதல் அடையாளமாக இருந்தது. அதன்பின் மருத்துவர் அணித் தலைவ ரானதும், மாநிலத்தலைவராக உயர்ந்ததும் முழுக்க முழுக்க இவரின் உழைப்பால்தான்.

பெண்கள் அரசியலில் எதிர்கொள்ளும் அத்தனை சவால்களையும் எதிர்கொண்டார் தமிழிசை. தமிழகத்தில் இவர் அளவுக்கு உருவம் தொடர்பான விமர்சனத்தை வேறு யாரும் எதிர்கொண்டது கிடையாது. கேலிச் சித்திரங்களாக மட்டுமே காணப்பட்ட மீம்ஸ்களை அரசியல்மயப் படுத்தியதற்கு தமிழிசை அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். இவை அனைத்தையும் எதிர்நீச்சல் போட்டு கடந்து இன்று அரசியலுக்கு வரும் பெண்களுக்கு முன்னுதாரணம் ஆகியிருக்கிறார்.

மீம்ஸ் போடுகிறவர்களிடம் ‘இவ்வளவு திறமையை நேர்மறைச் செயலுக்குப் பயன்படுத்துங்கள்’ என்று பாசிட்டிவ் அப்ரோச் காட்டியவர் தமிழிசை. தான் தேர்வு செய்த கட்சி, கொள்கைக்காக அழுத்தமாகவும் ஆக்ரோஷமாகவும் ட்விட்டரில் சண்டை போடுவார். அடுத்த நிமிடமே இன்முகம் காட்டி நன்னெறி போதிப்பார். ஸ்டாலின் தொடங்கி குஷ்பு வரை இப்படி இவரிடம் சண்டை போட்டு சமாதானமும் ஆனவர்களின் பட்டியல் வெகுநீளம்.

தமிழக அரசியல் களத்தின் உயிரோட்டத்தை நன்கு உணர்ந்ததாலேயே, இங்கு ஆளும்கட்சியும் ஆண்ட கட்சியும் நிர்வாக ரீதியாகச் செய்த தவறுகள், முறைகேடுகளை முன்வைத்து எதிர்ப்பு அரசியலைக் கட்டியமைத்தார். பா.ஜ.க-வின் சித்தாந்த யுத்தத்தை இங்கே நிகழவிடாமல் பார்த்துக்கொண்டவரும் இவர்தான் என்று சொல்லலாம். அது, இவரது அரசியல் சாதுர்யத்துக்கான முன்னுதாரணம்.

சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் எனப் போட்டியிட்டபோதெல்லாம் தோல்வியைத் தழுவினாலும் துவளாது மீண்டும் கட்சிப்பணி செய்வதில் கண்ணும் கருத்தாக இருந்தார் தமிழிசை. நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி என்று நியமன எம்.பி-க்களை மத்திய அமைச்சர்கள் ஆக்கியபோது தமிழகத்தில் பா.ஜ.க-வை வளர்த்ததில் பெரும்பங்காற்றிய தமிழிசைக்கு ஏன் அத்தகைய பொறுப்பை வழங்கவில்லை என்பது போன்ற விமர்சனங்கள் எழுந்தன. இவருடைய ஆதரவாளர்களிடம் அந்த வருத்தமும் நிறையவே இருந்தது.

இந்தச் சூழலில்தான் தெலங்கானா ஆளுநர் பொறுப்பை வழங்கி, தமிழிசையை அண்டை மாநிலத்துக்கு நகர்த்தியிருக்கிறது பா.ஜ.க தலைமை. `அரசியலில் ஆக்டிவ் ஆக இருக்கும்போதே ஆளுநர் பதவியை அளித்து தீவிர அரசியலிலிருந்து ஓரம்கட்டப்பார்க்கிறது பா.ஜ.க தலைமை' என்பது போன்ற விமர்சனங்கள் இப்போதும் றெக்கை கட்டுகின்றன. `சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், முதல்வர் என பெரும்கனவுகளில் இருந்தவரை இப்படி முடக்கிவிட்டார்களே...' என்று கேட்கப்படும் கேள்விகளுக்கு ‘`முதல்வருக்கும் அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணமே நான்தான் செய்து வைக்கப்போகிறேன். அதை நினைக்கும்போது உயரிய இடத்துக்குச் சென்றிருக்கிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்’’ என்று பொங்கும் புன்னகையோடு பதில் தருகிறார் தமிழிசை.

இதுதான் இவருக்கான உச்ச பதவி என்று சொல்வதற்கில்லை. தமிழிசை மீண்டும் அரசியலுக்கு வரலாம். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடலாம். குடியரசுத் துணைத்தலைவராகி நாடாளுமன்றத்தில் மாநிலங்களவைத் தலைவராகலாம். இப்படி எல்லாவற்றுக்குமே சாத்தியமுண்டு. ஏனெனில், தமிழிசையின் அரசியல் பங்களிப்பும் ஓயாத உழைப்பும் அத்துணை எளிதில் புறம்தள்ளக் கூடியதல்ல. அரசியல் நதியில் வற்றாமல் சலசலத்து ஓடிக்கொண்டிருந்தவர் தமிழிசை. ஆளுநர் என்ற பதவியில் இவர் நீர்த்தேக்கமாக தேங்கிவிட மாட்டார் என்றே இவரின் ஆதரவாளர்கள் நம்புகிறார்கள்.

ஜெயலலிதாவுக்குப் பிறகு தமிழகத்திலிருந்து பெண் ஒருவர் அரசியலில் உச்சம் தொட்டதோடு, மற்ற மாநிலங்களுக்குச் செல்வதன் மூலம் தமிழகத்துக்குப் பெருமையும் சேர்த்திருக்கிறார். எதுகை மோனையுடனான இவரது அழகு தமிழ்ப் பேட்டியைச் சில ஆண்டுகளுக்குக் கேட்க முடியாது என்பது தமிழகத்துக்கு ஒருவித இழப்புதான். ஆனாலும், தமிழிசையின் அரசியல் அறிவும் இன்முகமும் எளிய அணுகுமுறையும் தமிழகம் தாண்டி தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்க்கும் என்பது நிச்சயம்.