Published:Updated:

2024 மக்களவைத் தேர்தல்: சரத்பவாரைச் சந்தித்த பி.கே! - மூன்றாவது அணி குறித்து ஆலோசனை?

சரத்பவார்
சரத்பவார்

2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் மூன்றாவது அணி அமைப்பது குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருடன் பிரசாந்த் கிஷோர் மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார்.

நாட்டில் தற்போது வலுவான எதிர்க்கட்சி இல்லாமல் இருக்கிறது. இதனால் வரும் 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தல் மீண்டும் பா.ஜ.க-வுக்குச் சாதகமாக அமையும் சூழல் இருந்துவருகிறது. காங்கிரஸ் கட்சி பெரும்பாலான மாநிலங்களில் மிகவும் பலவீனமாக இருக்கிறது. அதோடு அந்தக் கட்சியில் இருக்கும் முக்கியத் தலைவர்களை பா.ஜ.க ஆசைவார்த்தைகளைக் கூறி இழுத்துக்கொண்டது. எனவே, அந்தக் கட்சியால் 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் மிகவும் பலத்துடன் போட்டியிட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையடுத்து எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து, புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் இப்போதே இறங்க ஆரம்பித்துவிட்டன. இதற்கான பணியில் தேர்தல் ஆலோசனைகளை பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கிவரும் பிரசாந்த் கிஷோர் முன்னின்று ஈடுபட ஆரம்பித்துள்ளார்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

பிரசாந்த் கிஷோர் ஏற்கெனவே தமிழ்நாடு, பீகார், மேற்கு வங்கத்துக்கு தேர்தல்களில் ஆலோசகராகச் செயல்பட்டுள்ளார். அவர் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்துப் பேசினார். தெற்கு மும்பையிலுள்ள சரத்பவார் இல்லத்துக்குக் காலை 11 மணிக்கு வந்த பிரசாந்த் கிஷோர் பிற்பகல் 2 மணிக்குத்தான் பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றார். இருவரும் மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஜெயந்த் பாட்டீலும் கலந்துகொண்டார். எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து 3-வது அணி அமைப்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்று தெரிகிறது.

இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சகன் புஜ்பால் கூறுகையில், `பிரசாந்த் கிஷோர் தேர்தலில் பல கட்சிகள் வெற்றிபெறத் தேவையான யுக்திகளை வகுத்துக் கொடுத்திருக்கிறார். எனவே, அவரின் கருத்துகளை சரத்பவார் பரிசீலிப்பார். இருவரும் என்ன காரணத்துக்காகச் சந்தித்துப் பேசினர் என்று தெரியாது. ஆனால் பிரசாந்த் கிஷோர் ஏதாவது திட்டத்துடன்தான் வந்திருப்பார். அதை சரத்பவார் நிச்சயம் பரிசீலிப்பார்” என்று தெரிவித்தார்.

இருவரது சந்திப்பு நடப்பதாகச் செய்தியை கேள்விப்பட்டு, சரத்பவார் வீட்டுக்கு முன்பாக ஏராளமான பத்திரிக்கையாளர்கள் கூடியிருந்தனர். ஆனால் சந்திப்புக்குப் பிறகு இருவரும் பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கவில்லை. சரத்பவார், பிரசாந்த் கிஷோருக்கு மதிய உணவு கொடுத்து உபசரித்தார். இருவருக்கும் இடையேயான ஆலோசனை இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நடந்ததாக தேசியவாத காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்குப் பிறகு அரசியல் நடவடிக்கையிலிருந்து ஒதுங்கியிருப்பதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த அறிவிப்புக்குப் பிறகு முதன்முறையாக சரத்பவாரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

பிரஷாந்த் கிஷோர்
பிரஷாந்த் கிஷோர்

இந்தச் சந்திப்பு குறித்து சிவசேனாவின் சஞ்சய் ராவத்திடம் கேட்டதற்கு, ``பிரசாந்த் கிஷோரிடம் ஏராளமான அரசியல் தலைவர்கள் தொடர்பில் இருக்கின்றனர்” என்று மட்டும் தெரிவித்தார். ஆனால், மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவாரிடம் இது குறித்துக் கேட்டதற்கு, ``இந்தச் சந்திப்பில் எந்தவித அரசியல் முக்கியத்துவமும் இல்லை” என்றும், ``ஏற்கெனவே பிரசாந்த் கிஷோர் அரசியல் நடவடிக்கையிலிருந்து ஒதுங்கியிருக்கப்போவதாக தெரிவித்திருப்பதையும்” சுட்டிக்காட்டினார். ஆனால் பிரசாந்த் கிஷோருக்கு மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார் ஆகியோரிடம் நல்ல தொடர்பு இருக்கிறது. அவர்களை ஒன்றிணைத்துவிடுவது அவருக்கு எளிது என்பதால் முதலில் அவர்களைச் சந்தித்துப் பேசிவிட்டு, அடுத்து உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ், ஆந்திராவில் ஜெகன் மோகன் ஆகியோரையும் பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசத் திட்டமிட்டிருக்கிறார் என்ற தகவலும் தேசிய அளவில் பரபரக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு