Published:Updated:

"நீங்க அரசியலுக்கு வரணும்..." தூபமிட்ட பி.கே; யோசிக்கும் விஜய்!

விஜய்

நடிகர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஹைதராபாத்தில் சந்தித்துப் பேசியதாகப் பரவும் தகவல், அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியிருக்கிறது. எதற்காக நடந்தது இந்தச் சந்திப்பு... என்ன பேசப்பட்டது... விவரங்கள் இங்கே...

"நீங்க அரசியலுக்கு வரணும்..." தூபமிட்ட பி.கே; யோசிக்கும் விஜய்!

நடிகர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஹைதராபாத்தில் சந்தித்துப் பேசியதாகப் பரவும் தகவல், அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியிருக்கிறது. எதற்காக நடந்தது இந்தச் சந்திப்பு... என்ன பேசப்பட்டது... விவரங்கள் இங்கே...

Published:Updated:
விஜய்

இயக்குநர் வம்சியின் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்கும் `தளபதி 66’ படத்தின் ஷூட்டிங் பணிகள் துரிதமாகியிருக்கின்றன. இதற்காக ஹைதராபாத் சென்றிருக்கிறார் நடிகர் விஜய். அங்கு விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசியதாக வெளியாகியிருக்கும் தகவலால் அதிரிபுதிரி ஆகியிருக்கிறது தமிழக அரசியல் வட்டாரம். ஹைதராபாத்திலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில், சுமார் 45 நிமிடங்கள் நடந்ததாகச் சொல்லப்படும் இந்த ரகசியச் சந்திப்பில், தமிழக அரசியல் நிலவரம், விஜய் மக்கள் இயக்கத்தின் களப்பணி, உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்தெல்லாம் விவாதிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள் விவரமறிந்தவர்கள். இந்த ரகசியச் சந்திப்பு குறித்து, விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தோம். கிடைத்த தகவலெல்லாம் 'தெறி' ரகம்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

நம்மிடம் பேசிய விஜய் குடும்ப நண்பர்கள் சிலர், "நடிகர் விஜய் மீது எப்போதுமே பிரசாந்த் கிஷோருக்கு ஒரு மதிப்பு உண்டு. 2021 சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க-வுக்காகப் பணியாற்ற பி.கே சென்னை வந்தபோதே நடிகர் விஜய்யுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டார். உதயநிதிக்கும் விஜய்க்கும் நெருக்கமான ஒரு தொழிலதிபர் மூலமாகத்தான் இந்த நட்பு உருவானது. அப்போது தேர்தல் காலமென்பதால், விஜய்யுடன் பி.கே வேறெதுவும் பேசவில்லை. அதன் பிறகு, கோவா மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காகப் பணியாற்றச் சென்றுவிட்டார் பி.கே. ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஹைதராபாத்தில் இருவரும் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சந்திப்பின் தொடக்கத்திலேயே, 'நீங்கள் ஏன் அரசியலுக்கு வரத் தயங்குகிறீர்கள்?' என்கிற கேள்வியை பி.கே கேட்டிருக்கிறார். அதற்கு விஜய், 'தயக்கமெல்லாம் ஏதுமில்லை. அதற்கான நேரம் வரவில்லை என்பதால்தான் காத்திருக்கிறேன். மக்கள் பணியாற்ற வேண்டுமென்பதுதான் என்னுடைய விருப்பமும்' என்றிருக்கிறார். தொடர்ந்து, ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடு குறித்துப் பேசப்பட்டிருக்கிறது. 'தமிழக அரசியலில் உங்களுக்கு மூன்று விஷயங்கள் பாசிட்டிவ்வாக இருக்கின்றன. நீங்கள் கிறிஸ்தவச் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர் என்றாலும், எல்லா சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நபராகத்தான் நீங்கள் இருக்கிறீர்கள்.

ரசிகர்களுடன் முன்பு செல்ஃபி எடுத்த விஜய்
ரசிகர்களுடன் முன்பு செல்ஃபி எடுத்த விஜய்

இரண்டாவது, உங்களுக்கென ஒரு ரசிகர் வட்டாரம் அளப்பரிய அளவில் இருக்கிறது. உங்கள் இயக்கத்துக்கென கட்டமைப்பு இல்லையென்றாலும், தொடர்ச்சியாகத் தேர்தலைச் சந்தித்துவருகிறீர்கள். தேர்தல் அரசியலில் தொடர்ச்சியாக இயங்குவதே ஒரு சாதனைதான். மூன்றாவது, தி.மு.க-வுக்கு எதிராக பா.ஜ.க., அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இயங்குகின்றன. ஆனால், சட்டமன்றம், உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றியைக் குவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக வலுவான தலைவர்கள் தமிழகத்தில் இப்போதைக்கு இல்லை. 2026 சட்டமன்றத் தேர்தலின்போதும் இதே நிலை ஏற்படலாம். அப்போது, ஸ்டாலினுக்கும் அவர் மகன் உதயநிதிக்கும் மாற்றான ஒரு முகம் தேவை.

அதற்கு நீங்கள் கச்சிதமாகப் பொருந்துவீர்கள். நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும்' என்று விலாவாரியாகத் திட்டத்தை விவரித்திருக்கிறார் பிரசாந்த் கிஷோர். அமைதியாக அதைக் கேட்டுக்கொண்ட விஜய், 'இப்போதைக்கு எந்த ஐடியாவும் எனக்கில்லை. யோசித்துவிட்டுச் சொல்கிறேன்' என்று விடைகொடுத்தார். விஜய்யுடன் சேர்ந்து பணியாற்ற பி.கே விரும்புகிறார். அதற்கு அச்சாரம் போடும் விதத்தில்தான் இந்தச் சந்திப்பு நடந்திருக்கிறது" என்றனர் விலாவாரியாக.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தச் சந்திப்பு குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் பேசினோம். "பிரசாந்த் கிஷோருக்கு இப்போதைக்கு மம்தா பானர்ஜியை விட்டால் வேறு 'க்ளையன்ட்' இல்லை. தன்னை மார்க்கெட்டிங் செய்துகொள்ள பிரபலமான ஒருவர் பி.கே-வுக்குத் தேவைப்படுகிறார். அதற்காகத்தான் இந்தச் சந்திப்பு நடந்திருப்பதாகப் பார்க்கிறேன். ஒருசில லட்சங்கள் செலவு செய்து, கோடிகளை எடுக்கும் தொழில் வித்தை தெரிந்தவர் விஜய். அரசியலில் இறங்கிவிட்டால், கோடிகளில் செலவு செய்யவேண்டியிருக்கும். பி.கே-வுக்குக்கூட வியூக வகுப்பாளர் என்கிற வகையில் பல கோடிகளைக் கட்டணமாக கொடுக்கவேண்டியிருக்கும். இதற்கெல்லாம் விஜய் தயாராக இருப்பாரா எனத் தெரியவில்லை. போதாத குறைக்கு தி.மு.க-வின் எதிர்ப்பையும் சம்பாதிக்கவேண்டியிருக்கும். தமிழகத்தில் அடுத்த இரண்டாண்டுகளுக்குத் தேர்தல் சூழல் இல்லை என்பதால், இந்தச் சந்திப்பு எந்த முக்கியத்துவமும் பெறப்போவதில்லை" என்றார்.

விஜய்
விஜய்

இதற்கிடையே, 'ஹைதராபாத்தில் நடிகர் விஜய் யாருடனும் சந்திப்பு நடத்தவில்லை. அனைத்தும் கட்டுக்கதை' என விளக்கமளிக்கிறது விஜய் தரப்பு. ஆனால் அவருக்கு நெருக்கமானவர்கள், 'ஹைதராபாத் சந்திப்பு நடந்ததால்தான் விஜய்யை தி.மு.க அரசு தாக்கியிருக்கிறது. சொகுசு கார் இறக்குமதி வழக்கில், விஜய் அபராதம் கட்டியே தீர வேண்டுமென தமிழக அரசின் வணிக வரித்துறை நீதிமன்றத்தில் கூறியிருக்கிறது. பிரசாந்த் கிஷோரைச் சந்தித்தன் எதிர்வினைதான் இந்தத் தாக்குதல். வீணாக தி.மு.க-வைப் பகைத்துக்கொள்ள விஜய்யும் இப்போதைக்கு தயாராக இல்லை என்பதால், இந்தச் சந்திப்பு குறித்துப் பேச வெளிப்படையாக மறுக்கிறார்' என்கிறார்கள்.

எது உண்மையோ... விஜய்யை மையமாக வைத்து தமிழக அரசியல் சூழல் சுழல ஆரம்பித்திருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism