Published:Updated:

`பி.ஜே.பி-யால் வந்த மனஸ்தாபம்; தொடர் புறக்கணிப்பு'- பிரசாந்த் கிஷோரை கழட்டிவிடுகிறாரா நிதிஷ்குமார்?

நிதிஷ்குமார் - பிரசாந்த் கிஷோர்
நிதிஷ்குமார் - பிரசாந்த் கிஷோர்

பிரசாந்த் கிஷோரை மையப்படுத்தி பீகார் அரசியலும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் எழுந்துள்ள சர்ச்சைகளும் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

தேர்தல் வித்தகர், IPAC நிறுவனத் தலைவர் பிரசாந்த் கிஷோர் 2012 குஜராத் சட்டமன்றத் தேர்தல், 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு ஆதரவாகத் தேர்தல் களத்தில் பணியாற்றினார். இந்தத் தேர்தல்களில் மோடிக்குக் கிடைத்த வெற்றி, பிரசாந்த் கிஷோரின் மார்க்கெட்டை உச்சத்துக்குக் கொண்டுசென்றது. இதனால் இந்திய அரசியல் உலகில் `பி.கே' எனப் பிரபலமானார். தொடர்ந்து மோடிக்கு பணியாற்றுவார் என நினைக்கப்பட்ட நேரத்தில் அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டது.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

இதனால் பி.ஜே.பி-க்கு எதிராகக் களத்தில் நின்ற பிரசாந்த் கிஷோர் தனது சொந்த மாநிலமான பீகாரில் நடந்த தேர்தலை பகடைக் காயாகப் பயன்படுத்திக்கொண்டார். பீகாரில் எலியும் பூனையுமாக இருந்த நிதிஷ்குமார் - லாலு பிரசாத் யாதவை இணைத்து பி.ஜே.பி-யைத் தனிமைப்படுத்தினார். எதிர்பார்த்தது போல் நிதிஷ்குமார் - லாலு கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இதன்பின் இந்தக் கூட்டணிப் பிரிந்தது தனிக்கதை. இருப்பினும் இதுவரை இல்லாத மிகப்பெரிய வெற்றியை ருசித்த நிதிஷ்குமார் பிரசாந்த் கிஷோருடன் நெருக்கம் காண்பித்தார். ஒருகட்டத்தில் பிரசாந்த் கிஷோரை தனது ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் (ஜே.டி.யு) தேசிய துணைத் தலைவர் ஆக்கினார். இதனால் ஸ்டார் பெர்சனாக வலம்வந்தார் பிரசாந்த்.

``கட்சித் தாவலை விஞ்சும் கம்பெனி தாவல்” - பிரசாந்த் கிஷோர் தி.மு.க-வுக்குள் என்ட்ரி!

தனது பதவிக்கு ஏற்றவாறு கட்சியின் தேசிய விவகாரங்களில் தீவிர செயல்பாட்டுடன் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக பா.ஜ.க எதிர்ப்பு விஷயங்களில் மிகத் தீவிரம் காட்டிவந்தார். பா.ஜ.க-வுடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூட்டணி வைத்திருந்தாலும் அக்கட்சியின் நடவடிக்கைகளை எதிர்க்கத் தவறவில்லை. இதற்கிடையே பீகார் மாநில சட்டப்பேரவைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரவிருக்கிறது.

அதேபோல் டெல்லி மாநிலத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் நாளை பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமாரின் இல்லத்தில் நடைபெறவிருக்கிறது. இதற்காகக் கட்சியின் முக்கியத் தலைவர்களுக்கு நிதிஷ்குமார் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், பிரசாந்த் கிஷோருக்கு இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அக்கட்சி நிர்வாகிகள் கூறியதாக அம்மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிதிஷ்குமார் - பிரசாந்த் கிஷோர்
நிதிஷ்குமார் - பிரசாந்த் கிஷோர்

பிரசாந்த் கிஷோர் மீது நிதிஷ்குமாருக்கு ஏற்பட்டுள்ள மனவருத்தமே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று ஒரு தரப்பினரும், மற்றொரு தரப்பினரோ பி.ஜே.பி கூட்டணியில் இந்தத் தேர்தல்களை சந்திக்க இருப்பதால் அக்கட்சியுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வரும் அவர் விலகியிருக்கட்டும் என்று நிதிஷ் குமார் முடிவெடுத்ததே காரணம் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் பி.ஜே.பி அரசு கொண்டுவந்த CAA-வுக்கு ஆதரவாக ஐக்கிய ஜனதா தளம் நாடாளுமன்றத்தில் வாக்களித்தாலும் மாநிலத்தில் இதை அமல்படுத்தப்போவதில்லை என்று அறிவித்தார் நிதிஷ் குமார். இந்த விவகாரத்தில் பி.ஜே.பி அரசை சகட்டுமேனிக்கு ட்விட்டரில் விளாசிவந்தார் பிரசாந்த். மேலும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் CAA-வை அமல்படுத்தக் கூடாது என்று வெளிப்படையாகக் கோரிக்கை வைத்து வந்தார்.

`சூப்பர் ஹிட் க்ளப்... பவர் சென்டர் பிரசாந்த் கிஷோர்!' -ஆர்.எஸ்.பாரதி போட்ட ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது?

இதனால் கட்சித் தலைமை அவர்மீது அதிருப்தியில் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கடந்த 14-ம் தேதி நிதிஷ் குமாரை பிரசாந்த் கிஷோர் சந்தித்து CAA தொடர்பாகப் பேசியுள்ளார். இதற்குப் பிறகும் பிரசாந்த் கிஷோர் சமாதானம் ஆகவில்லை. CAA தொடர்பாக அமித் ஷாவை குறி வைத்து கருத்துகள் தெரிவித்து வந்தார். இந்தக் காரணங்களால் அவருக்கு கூட்டத்தில் அழைப்பு விடுக்கப்படாமல் இருக்கலாம் என்று பேசப்படுகிறது.

இது மட்டுமல்ல டெல்லி பிரசாரத்துக்கான நட்சத்திர பேச்சாளர்கள் லிஸ்ட்டில் பிரசாந்த் பெயர் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் சில நாள்களுக்கு முன்பாக ராஜ்கீரில் நடந்த ஜே.டி.யு கட்சித் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. கட்சியின் நடவடிக்கைகள், தேர்தல் வியூகம் உள்ளிட்டவை தொடர்பாக அக்கட்சியின் முக்கிய தலைகள் கூடி ஆலோசித்த இந்த முகாமிலும் பிரசாந்த் கலந்து கொள்ளவில்லை. இதை வைத்து நிதிஷுக்கும் பிரசாந்துக்கும் பிரிவு ஏற்பட்டுள்ளது என்கின்றனர்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

இதை உறுதிப்படுத்தும் விதமாக நிதிஷின் பேச்சும் அமைந்துள்ளது. சமீபத்தில், ``கட்சியில் இருந்து செல்ல விரும்புவோர் செல்லலாம். அவர்களுக்கு எனது வாழ்த்துகள் துணை இருக்கும். சிலரின் பேச்சுகளை வைத்து ஜே.டி.யு-வைப் பார்க்கக் கூடாது. ஜே.டி.யு தனது வேலையை மிகவும் வலுவாக செய்கிறது. நாங்கள் சுத்தமாக நிற்கிறோம். நாங்கள் எந்தக் குழப்பத்திலும் இல்லை. யாருடைய மனதிலும் ஏதாவது இருந்தால், அவர்களாக வந்து பேச வேண்டும்.

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஜே.டி.யு சி.ஏ.ஏ-க்கு ஆதரவாக வாக்களித்தது. ஆனால் பீகாரில் அதைச் செயல்படுத்தவிட மாட்டேன்" எனக் கட்டமாகப் பேசியிருந்தார். நிதிஷின் இந்தப் பேச்சு பிரசாந்தைக் கட்சியில் இருந்து கழட்டிவிடப்படுவதற்கான அறிகுறி என்கிறார்கள் அம்மாநிலத்தினர். எது எப்படியோ... நாளை நடைபெறும் கூட்டத்தில் பிரசாந்த் கலந்துகொள்வாரா இல்லையா என்பதைப் பொறுத்து அவரின் நிலை தெரிந்துவிடும்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு