Published:Updated:

`பீகாரைக் குறிவைக்கும் பிரசாந்த் கிஷோர்?!' -நிதிஷ் குமாருக்கு எதிராக உருவாகும் புது அணி

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

பிரசாந்த் கிஷோர் ஆம் ஆத்மி கட்சிக்கு வியூகம் வகுத்துத் தந்த நிலையில் அக்கட்சி அபார வெற்றி பெற்றது. இது பிரசாந்த்துக்கு மிகப் பெரிய பலத்தைக் கொடுத்திருக்கிறது.

``பிரசாந்த் கிஷோர் கூடிய விரைவில் கட்சித்தொடங்க இருக்கிறார். இவரால் பயனடைந்தவர்கள் உதவி செய்வதாக உத்தரவாதம் கொடுத்ததால் முழு தைரியத்தோடு அரசியலில் குதிக்க இருக்கிறார்" என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில்.

தற்போது அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் அதிகமாக விவாதிக்கப்படும் நபராக இருக்கிறார் பிரசாந்த் கிஷோர். பீகாரைச் சேர்ந்த இவர், முக்கிய அரசியல் கட்சியினருக்குத் தேர்தல் தொடர்பாக வியூகங்களை வகுத்துத்தரும் ஐபேக் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

அரவிந்த் கெஜ்ரிவால் - பிரசாந்த் கிஷோர்
அரவிந்த் கெஜ்ரிவால் - பிரசாந்த் கிஷோர்

ஜெகன்மோகன் ரெட்டி, நிதீஷ்குமார், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களுக்குத் தேர்தல் வியூகம் வகுத்துக்கொடுத்தார் பிரசாந்த். இந்த வரிசையில் தமிழ்நாட்டில் கமலின் மக்கள் நீதி மய்யத்துக்காகக் களமிறங்கியது ஐபேக் நிறுவனம். கூடவே, வேறு சில கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதால் ஐபேக் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டது மக்கள் நீதி மய்யம். தற்போது தி.மு.க-வுக்காகத் தேர்தல் வேலை பார்த்து வருகிறது ஐபேக் நிறுவனம்.

நிதிஷ் - பிரசாந்த் கிஷோர்
நிதிஷ் - பிரசாந்த் கிஷோர்

இந்நிலையில், பீகார் சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து பிரசாந்த் கிஷோர் களமிறங்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர் ஒருவர், `` பீகாரில் நிதிஷ்குமாரின் வெற்றிக்காக உழைத்தார் பிரசாந்த். தேர்தல் முடிவில் நிதிஷ் வெற்றிபெற்றார். இதையடுத்து, ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தேசியத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராகப் பேசியதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதற்கிடையே, அண்மையில் நடந்து முடிந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதல்வராக, ஆம் ஆத்மி கட்சிக்கு வியூகம் வகுத்துக் கொடுத்தார் பிரசாந்த். அக்கட்சியும் அபார வெற்றிபெற்றது. இது பிரசாந்த்துக்கு மிகப் பெரிய தன்னம்பிக்கையைத் தந்துள்ளது.

தி.மு.க-வுக்கு பணியாற்ற பிரசாந்த் கிஷோர் அணிக்கு மாதம் எவ்வளவு? பின்னணி விவரங்கள்

இந்தநிலையில் டெல்லியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பங்கேற்ற அவர். `நான் விரைவில் பாட்னா செல்கிறேன். அங்கு எதிர்காலத் திட்டம் என்ன என்பதை அறிவிப்பேன்' எனக் கூறியிருக்கிறார்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

பீகாரில் வரும் அக்டோபரில் சட்டசபைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து ஐக்கிய ஜனதா தளத்துக்குச் சவால்விடும் வகையில் ஓர் அணியை உருவாக்க பிரசாந்த் கிஷோர் விரும்புகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவரால் பயனடைந்த சில அரசியல் கட்சிகள் உத்தரவாதம் கொடுத்ததால் இந்த முடிவை அவர் எடுத்திருக்கிறார்" என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு