Published:Updated:

காங்கிரஸுடன் கைகோக்கும் பிரசாந்த் கிஷோர்... பா.ஜ.க-வை பாதிக்குமா?

சோனியா காந்தி, பிரசாந்த் கிஷோர், ராகுல்காந்தி
பிரீமியம் ஸ்டோரி
சோனியா காந்தி, பிரசாந்த் கிஷோர், ராகுல்காந்தி

2024-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து, 370 தொகுதிகளில் காங்கிரஸ் கவனம் செலுத்த வேண்டும்.

காங்கிரஸுடன் கைகோக்கும் பிரசாந்த் கிஷோர்... பா.ஜ.க-வை பாதிக்குமா?

2024-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து, 370 தொகுதிகளில் காங்கிரஸ் கவனம் செலுத்த வேண்டும்.

Published:Updated:
சோனியா காந்தி, பிரசாந்த் கிஷோர், ராகுல்காந்தி
பிரீமியம் ஸ்டோரி
சோனியா காந்தி, பிரசாந்த் கிஷோர், ராகுல்காந்தி

தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியுடன் விரைவில் கைகோக்கவிருக்கிறார். தேர்தல் வியூக வகுப்பாளராக மட்டுமல்லாமல், கட்சியிலேயே தன்னை அவர் இணைத்துக்கொள்ளப்போகிறார். அப்படியே காங்கிரஸைப் பலப்படுத்தவும், 2024-ல் பா.ஜ.க-வைத் தோற்கடிக்கவும் செயல் திட்ட அறிக்கை ஒன்றை காங்கிரஸ் தலைமையிடம் அவர் அளித்திருக்கிறார் என்று பரபரக்கிறது காங்கிரஸ் வட்டாரம்!

இரண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்களிலும், பல சட்டமன்றத் தேர்தல்களிலும் தொடர்ச்சியான தோல்விகளை காங்கிரஸ் சந்தித்துவருகிறது. சமீபத்தில் உ.பி உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல்களில் படுதோல்வியைச் சந்தித்த நிலையில், பிரசாந்த் கிஷோரின் வருகை காங்கிரஸ் கட்சிக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று அந்தக் கட்சியின் தலைமை நம்புகிறது. ஆகவேதான், காங்கிரஸில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்து பல மாதங்களாக பிரசாந்த் கிஷோர் முயன்றுவந்த நிலையில், தற்போது அவரைக் கட்சியில் இணைத்துக்கொள்வது என்கிற முடிவை காங்கிரஸ் எடுத்திருக்கிறது.

காங்கிரஸுடன் கைகோக்கும் பிரசாந்த் கிஷோர்... பா.ஜ.க-வை பாதிக்குமா?

கடந்த ஏப்ரல் 16-ம் தேதி, டெல்லியில் சோனியா காந்தியின் இல்லம் பரபரப்புடன் காணப்பட்டது. அங்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், முகுல் வாஸ்னிக், அம்பிகா சோனி, திக்விஜய் சிங், மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் ஆஜராகியிருந்தனர். அந்தச் சந்திப்பில், பிரசாந்த் கிஷோரும் கலந்துகொண்டார். பிரசாந்த் கிஷோருக்கும் சோனியா காந்திக்கும் இடையிலான சந்திப்பு மூன்று மணி நேரத்துக்கும் மேல் நீடித்ததாகச் செய்திகள் வெளியாகின. “அப்போது, 2024 நாடாளுமன்றப் பொதுத்தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக விரிவான ஒரு செயல் திட்டத்தை சோனியா காந்தியிடம் பிரசாந்த் கிஷோர் வழங்கியிருக்கிறார். மேலும், கட்சியை அமைப்புரீதியில் வலுப்படுத்துவது, இந்த ஆண்டு நடைபெறவிருக்கிற குஜராத், இமாச்சலப்பிரதேசம் சட்டமன்றத் தேர்தல்களை எப்படி அணுகுவது என்பது தொடர்பான யோசனைகள் பற்றியும் சோனியாவுடன் அவர் விவாதித்தார்” என்ற டெல்லி காங்கிரஸ் புள்ளிகள், சோனியாவிடம் அவர் அளித்துள்ள செயல்திட்ட அறிக்கை குறித்தும் பகிர்ந்தார்கள்.

“2024-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து, 370 தொகுதிகளில் காங்கிரஸ் கவனம் செலுத்த வேண்டும். அப்படிச் செய்தால், பா.ஜ.க-வைத் தோற்கடித்துவிட முடியும். மேலும், சில மாநிலங்களில் காங்கிரஸுடன் ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணிவைக்க வேண்டும், சில மாநிலங்களில் தனித்துப் போட்டியிட வேண்டும். குறிப்பாக, உத்தரப்பிரதேசம், பீகார், ஒடிசா போன்ற மாநிலங்களில் தனித்துப் போட்டியிட வேண்டும். தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பதாக இருக்கிறது அந்த அறிக்கை” என்றார்கள்.

பிரசாந்த் கிஷோர் அளித்துள்ள இத்திட்டம் குறித்து ஆய்வுசெய்வதற்காக ஒரு குழுவை சோனியா காந்தி அமைத்திருக்கிறார். அந்தக் குழு, பிரசாந்த் கிஷோரின் திட்டம் குறித்து விவாதித்து ஒரு வாரத்தில் அறிக்கை அளிக்கவிருக்கிறது.

காங்கிரஸுடன் கைகோக்கும் பிரசாந்த் கிஷோர்... பா.ஜ.க-வை பாதிக்குமா?

பிரசாந்த் கிஷோரின் செயல்திட்டத்தை காங்கிரஸ் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளப்போகிறது என்பதைக் காட்டிலும், கட்சியில் அவருக்கான இடம் எது என்பது முக்கியக் கேள்வியாக இருக்கிறது. ஏற்கெனவே, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்து, அந்தக் கட்சியின் துணைத் தலைவராக பிரசாந்த் கிஷோர் இருந்தார். பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக அந்தக் கட்சியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு, தமிழகத்தில் தி.மு.க., மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்குத் தேர்தல் வியூக வகுப்பாளராக அவர் செயல்பட்டார். அதேநேரத்தில், காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கான முயற்சியிலும் அவர் தொடர்ந்து ஈடுபட்டுவந்தார். அது தொடர்பாக, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருடன் அவர் பேச்சுவார்த்தைகளை நடத்திவந்தார். ஆனால், பொதுச்செயலாளர் பதவி தமக்குத் தரப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார் என்றும், காங்கிரஸில் இருந்துகொண்டே மற்ற கட்சிகளுக்குத் தேர்தல் வியூகங்களை வகுத்துக்கொடுக்கத் தடை எதுவும் இருக்கக் கூடாது என்று அவர் நிபந்தனை விதித்தார் என்றும் அப்போது சொல்லப்பட்டது. அது, காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆனால், ‘தற்போது அவர் பதவி எதையும் கேட்கவில்லை. அவருக்கு உடனடியாகப் பதவி எதுவும் தரப்படாது’ என்று தெரிவிக்கும் காங்கிரஸ் வட்டாரம், ‘காங்கிரஸ் கட்சியின் ஆலோசகர் என்ற நிலையில் மட்டும் அவர் செயல்படுவார்’ என்று கூறுகிறது. இன்னொரு சர்ச்சையும் எழுந்திருக்கிறது. ‘பிரசாந்த் கிஷோர் ஓர் ஆர்.எஸ்.எஸ்-காரர்’ என்ற விமர்சனத்தை காங்கிரஸ் கட்சியினர் கடந்தகாலத்தில் முன்வைத்திருக்கிறார்கள். தற்போது, ‘ஒரு ஆர்.எஸ்.எஸ்-காரரை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ளப்போகிறதா?’ என்கிற கேள்வியை அரசியல் விமர்சகர்கள் எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு பதில் சொல்லும் காங்கிரஸ் தரப்பினரோ, ‘இப்போது அவர் ஆர்.எஸ்.எஸ்-ஸில் இல்லை. அவர், பா.ஜ.க-வின் பலம், பலவீனங்களை முழுமையாக அறிந்தவர். அவரது வியூகங்களை வைத்து 2024-ல் பா.ஜ.க-வை வீழ்த்துவோம்’ என்று உறுதியுடன் சொல்கிறார்கள்.

வெல்லுமா வியூகங்கள்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism