Published:Updated:

உணவளிக்கும் திட்டமா... உளவு பார்க்கும் வியூகமா? பிரசாந்த் கிஷோரின் பலே ஐடியா! #VikatanExclusive

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

உலகமே கொரோனா பீதியில் உறைந்திருக்க 2021 சட்டமன்றத் தேர்தலை மையப்படுத்தி தொகுதிக்கு 100 பேர் வீதம் 23,400 பேரை வேலைக்கு ஆள் எடுக்க ஆரம்பித்துள்ளார் பிரசாந்த் கிஷோர். எதற்காக இந்த ஆள் எடுப்பு... என்ன செய்ய போகிறார்கள்?

2021-ல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக, தேர்தல் வல்லுநர் பிரசாந்த் கிஷோருடன் தி.மு.க ஒப்பந்தம் போட்டுள்ளது. தி.மு.க.வின் பிரசாரத்தை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு செல்வது, தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்குக் கூடுதல் இமேஜ் ஏற்படுத்துவது, எதிர்க்கட்சிகளின் வியூகங்களை உடைப்பது, தி.மு.க.வின் தேர்தல் செலவுக்கான தொகையை ஏற்பாடு செய்வது எனப் பலதரப்பட்ட ஷரத்துகள் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமாகி உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான கட்டணமாக 350 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.

தி.மு.க மீதுள்ள இந்துக்கள் எதிர்ப்பு இமேஜை உடைப்பதற்காக, கிராமங்களிலுள்ள சிறுதெய்வ வழிபாட்டைக் கையில் எடுக்கலாம் என பிரசாந்த் கிஷோர் தி.மு.க தலைமைக்கு ஐடியா கொடுத்தார். இதையொட்டி ஏப்ரல், மே மாதங்களில் கிராமம் தோறும் நடைபெறும் திருவிழாக்களில் தி.மு.க.வினர் அதிகளவில் பங்கேற்பது குறித்தும் திட்டம் வகுக்கப்பட்டது. அய்யனார், கருப்பர் கோயில்களில் கிடா வெட்டக்கூட தி.மு.க கரைவேட்டிகள் தயாராகியிருந்தனர். திடீரென கொரோனா தாக்குதல் விஸ்வரூபம் எடுக்கவும், இந்த ஐடியா அமுங்கிப்போனது. இந்நிலையில், தொகுதிக்கு 100 பேர் வீதம், தமிழ்நாட்டிலுள்ள 234 தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 23,400 பேரை பிரசாந்த் கிஷோர் வேலைக்கு ஆள் எடுப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க.வின் மூத்த நிர்வாகி ஒருவர், ``ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டிக்காக தேர்தல் பணியாற்றிய போது, தொகுதிக்கு 100 பேர் வீதம் ஆந்திர இளைஞர்களை பிரசாந்த் கிஷோர் வேலைக்கு அமர்த்தினார். இவர்களுக்கு மாத ஊதியம், படிக்காசு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இவர்களை Resource Managers (வள மேலாளர்கள்) என்று ஐபேக்கில் உள்ளவர்கள் அழைப்பார்கள். எப்போது அழைத்தாலும் கூட்டத்திற்கு வருவது போன்று, ஒவ்வொரு resource managers-ம் தலா 25 இளைஞர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஜெகன்மோகன் ரெட்டி எந்த கிராமத்துக்குப் பயணித்தாலும், அங்கு கூட்டத்தைக் கூட்ட வேண்டியது இவர்கள் பொறுப்பு. இதுபோக, கட்சிக்காரர்களால் கூடும் கூட்டம் தனி. ஒரு மாவட்டத்தில் சராசரியாக ஆறு தொகுதி வருகிறது. தொகுதிக்கு 2500 பேர் வீதம், 15,000 இளைஞர்களை இந்த வள மேலாளர்கள் அழைத்துவந்தால், ஸ்டாலினின் கூட்டத்திற்கு மிகப்பெரிய யூத் கலர் கிடைக்கும்.

Jagan Mohan reddy and Prashant Kishore
Jagan Mohan reddy and Prashant Kishore

கூட்டம் கூட்டுவதற்கு மட்டுமல்லாமல், வாக்காளர்களிடம் அவ்வப்போது கேள்வி பதில் பாணியில் சர்வே நடத்தி, அம்முடிவுகள் மூலம் தேர்தல் வியூகங்களை வகுக்கவும் இந்த வள மேலாளர்களை பிரசாந்த் கிஷோர் பயன்படுத்திக் கொள்வார். இதே பாணியைத்தான் தமிழகத்திலும் செயல்படுத்தத் திட்டமிட்டு, தற்போது தொகுதிக்கு 100 இளைஞர்கள் வீதம் பிரசாந்த் கிஷோர் வேலைக்கு ஆள் எடுக்கத் தொடங்கியுள்ளார். இவர்கள் படித்திருக்க வேண்டும், மொபைல், லேப்டாப் உள்ளிட்ட தொழில்நுட்ப உபகரணங்களை கையாளத் தெரிந்திருக்க வேண்டும் என்பது கட்டுப்பாடு. தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே மீதமிருக்கும் நிலையில், இந்த வள மேலாளர்கள் மூலமாக, ஸ்டாலினை மிகப்பெரிய தலைவராக பூஸ்ட் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.

பிரசாந்த் கிஷோரின் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டுவிட்டு வந்த தர்மபுரி மாவட்ட இளைஞர் ஒருவரிடம் பேசினோம். ``சமூக வலைதளங்கள் மூலமாக வந்த விளம்பரத்தை வைத்துதான் வேலைக்கு விண்ணப்பித்தேன். வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாகத்தான் இன்டர்வியூ நடந்தது. என்னுடைய கல்வித்தகுதி, தொகுதியிலுள்ள மக்கள்தொகை, வாக்காளர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களைக் கேட்டார்கள். ஒருவருடம் இளைஞர்களை ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும் என்றார்கள். மாதம் 12,000 ரூபாய் சம்பளம், 6,000 ரூபாய் ஊக்கத்தொகை என மொத்தம் 18,000 ரூபாய் வழங்கப்படும் என்றனர். இது புதுவகையான வேலை என்பதால் ஆர்வத்துடன் பங்கேற்றேன்” என்றார்.

Arvind Kejriwal and Prashant Kishore
Arvind Kejriwal and Prashant Kishore

டெல்லி, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஆந்திரா என பிரசாந்த் கிஷோர் ஏற்கெனவே பணியாற்றிய இடங்களில் எல்லாம் இதுபோல வள மேலாளர்களை சர்வே நடத்துவதற்காகப் பணியமர்த்தியுள்ளார். இவர்களை மூன்றுமாத தகுதிகாண் காலத்தில் (Probationary Period) பணியில் எடுத்துக்கொண்டு, காலம் முடிந்தவுடன் அவர்களை விரட்டிவிட்டு, புதியவர்களை அடுத்த மூன்று மாதத்திற்குப் பணியில் சேர்த்துக் கொள்வதாகவும் பணியாளர்களுக்குச் சரியாக சம்பளம் வழங்குவதில்லை எனவும் ஏற்கெனவே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதெல்லாம் எதிர்த்தரப்புப் போட்டியாளர்கள் கிளப்பிவிடும் கட்டுக்கதைகள் என ஐபேக் நிறுவனம் மறுத்துள்ளது.

பிரசாந்த் கிஷோரின் திட்டப்படி, தொகுதிக்கு 100 பேர்வீதம் 23,400 பேரை மாதம் 18,000 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு எடுத்தால், மாதத்திற்கு 42.12 கோடி ரூபாய் செலவு ஏற்படும். ஒருவருடத்திற்கு 505.44 கோடி ரூபாய் செலவாகும். இதற்கான செலவை தி.மு.க ஏற்குமா என்பது கேள்விக்குறி. பிறகு எதற்காக பிரசாந்த் கிஷோர் மெனக்கெடுகிறார், அவருக்கு எங்கேயிருந்து நிதி வரும்?

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்
Twitter

ஐபேக் நிறுவனத்தைச் சேர்ந்த சிலர் நம்மிடம் பேசுகையில், ``பீகார், உ.பி. உள்ளிட்ட வடமாநிலங்களில் பிரசாந்த் கிஷோர் செய்துகொண்டிருக்கும் ஒரு விஷயம் இது. உணவில்லாமல் கஷ்டப்படுபவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு தினந்தோறும் உணவளிக்கும் திட்டத்தை பிரசாந்த் கிஷோர் செயல்படுத்தி வருகிறார். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் இளைஞர்கள் சிலரை சம்பளத்திற்குப் பணியமர்த்தி, இவர்கள் மூலமாக தினமும் ஏழைகளுக்கு இலவசமாக உணவளிக்கப்படுகிறது. இதற்கான செலவுகளை சில நிறுவனங்களிடம் பேசி சி.எஸ்.ஆர் முறையில் பணம் பெற்று சமாளிக்கிறார். அதேபோன்றதோர் ஏற்பாட்டை, ஏழைகளுக்கு உணவளிக்கத் தமிழகத்திலும் பிரசாந்த் கிஷோர் செய்ய முற்படலாம்" என்றவர்களிடம், ``புரியவில்லை... அதற்கும் தேர்தல் பணிகளுக்கும் என்ன சம்பந்தம்? இளைஞர்களுக்கான சம்பளம் கோடிக்கணக்கில் வருகிறதே. அதை எப்படி சமாளிக்கிறீர்கள். தமிழகத்தில் தோராயமாகக் கணக்குப் போட்டால் ஒருவருடச் செலவு 505 கோடி ரூபாய் வருகிறதே? தி.மு.க தருமா?" என்றோம்.

``அதுகுறித்து நாங்கள் எதுவும் கூற முடியாது. ஆனால், எது செய்தாலும் சட்டப்பூர்வமாகத்தான் செய்கிறோம், இனியும் செய்வோம். இந்த இளைஞர்களைப் பயன்படுத்தி, சாப்பாடு பொட்டலம் விநியோகிக்கப் போகிறாரா அல்லது அந்தப் பகுதிகளில் மக்கள் மனநிலை அறிவது... சர்வே எடுப்பது.. அந்தப் பகுதி வேட்பாளர்கள் யார் யார்... அவர்களின் ப்ளஸ் மைனஸ் என்ன என்பதை அந்த இளைஞர்களை வைத்துக் கண்காணித்து தேர்தல் வியூகம் வகுப்பது போன்றவற்றைச் செய்யப்போகிறாரா என்பதெல்லாம் பிரசாந்த் கிஷோருக்கே வெளிச்சம்” என்றனர்.

பிரசாந்த் கிஷோருக்கு ஒரு வழக்கம் உண்டு. எந்தக் கட்சியுடன் ஒப்பந்தம் போட்டாலும் சரி, அந்தக் கட்சிக்குத் தேவையான தேர்தல் நிதியைக் கணிசமாக வசூலித்து தருவதில் அவர் வித்தகர். உதாரணத்திற்கு, சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து தேர்தல் நிதியாகப் பெரும் தொகை பெறுவார். அதைத் தேர்தலில் புகுத்துவார். தன்னுடைய வாடிக்கையாளர் கட்சி வெற்றி பெற்றவுடன், அதிகாரத் தலைமையிடம் பேசி, சூரியஒளி மின்சாரம் தொடர்பான திட்டங்களைத் தொடங்கச் செய்வார். இதை இவர் கச்சிதமாக முடிப்பதால்தான், தொழில் நிறுவனங்களும் பிரசாந்த் கிஷோர் கேட்டவுடன் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டுகின்றனவாம். இந்த முதலீடு எல்லாமே பின்னாளில் பெரிய அறுவடை செய்வதற்காகத்தான். ``இது ஓர் உதாரணம்தான். இப்படி பணம் வருவதற்கு பிரசாந்த் கிஷோர் எக்கச்சக்க ஐடியா வைத்திருக்கிறார். எனவே, தொகுதிக்கு 100 பேர் என்ன, ஆயிரம் பேரை கூட வேலைக்கு அமர்த்தலாம், 505 கோடி பட்ஜெட் எல்லாம் ஒரு மேட்டரே அல்ல" என்கிறார்கள் பிரசாந்த் கிஷோருக்கு நெருக்கமானவர்கள்.

இந்த வேலைவாய்ப்பு முகாம் அ.தி.மு.க கூடாரத்தில் ஒரு சலசலப்பையும் உருவாக்கியுள்ளது. சமீபத்தில் அரசு எடுத்துள்ள கொரோனா நிவாரண நடவடிக்கைகள், 1000 ரூபாய் உதவித்தொகை, இலவச அரசி, ரேஷனில் மளிகைப் பொருள்கள் ஆகியவை மூலமாக எடப்பாடி பழனிசாமி அரசுக்கு இமேஜ் கூடியிருப்பதாக அ.தி.மு.கவினர் கருதுகிறார்கள். இந்த இமேஜை உடைத்து, அவதூறு பரப்புவதற்காக தொகுதிக்கு 100 பேர் வீதம் பிரசாந்த் கிஷோர் டீம் ஆள் இறக்கப் போகிறதோ என்கிற அச்சம் அ.தி.மு.க வட்டாரத்திற்குள் நிலவுகிறது.

`பிரசாந்த் கிஷோர் சும்மா வேலை செய்ய வந்திருக்காரா?!’- தி.மு.க வழக்கும் பா.ஜ.க எதிர்க் கேள்வியும்

கொரோனா நேரத்திலும் 2021 தேர்தல் சூடு பட்டையைக் கிளப்புறது. பிரசாந்த் கிஷோரின் வேலைவாய்ப்பு முகாம் வியூகம் வெல்லுமா, அ.தி.மு.க என்ன பதிலடி கொடுக்கப் போகிறது என்பதெல்லாம் போகப் போக தெரியும்.

அடுத்த கட்டுரைக்கு