Published:Updated:

``அடுத்த 10 ஆண்டுகளுக்கு வலுவான கட்சியாக பாஜக நீடிக்கும்; ஏனென்றால்...’’ - பிரஷாந்த் கிஷோர்

உண்மையில் மோடியின் பலம் என்ன... அவரைத் தொடர்ந்து புகழ்ச்சியில் வைத்திருப்பது எது என்பதை ராகுல் காந்தி சரியாகத் தெரிந்து, புரிந்துகொள்ளாதவரை மோடியின் இடத்தை அவரால் பிடிக்க முடியாது' என்கிறார் பிரஷாந்த் கிஷோர்.

`மக்கள் மோடியை வேண்டுமானால் தூக்கியெறியலாம். ஆனால் பா.ஜ.க எங்கும் போகாது. அடுத்த பத்தாண்டுகளுக்கு நாம் பாஜக-வுடன் போராடவேண்டியிருக்கும்' என பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருக்கிறார். கோவா மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போகும் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் உத்திகளை வகுத்துவருகிறார் பிரசாந்த் கிஷோர். இந்த நிலையில், கோவா சென்றிருக்கும் அவர், அங்கிருக்கும் அருங்காட்சியகத்தில் நடந்த ஒரு கலந்துரையாடலில் பங்கேற்றுப் பேசினார்.

பிரசாந்த் கிஷோர் வந்தால்... காங்கிரஸ் கட்சிக்கு பிளஸ்ஸா... மைனஸா?! - ஒரு பார்வை
பிரசாந்த் கிஷோர் - மம்தா
பிரசாந்த் கிஷோர் - மம்தா

அதில், ``எதிர்வரும் தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்றாலும், தோல்வி அடைந்தாலும், தேசிய அரசியலில் பா.ஜ.க-தான் மையமாக இருக்கும். அடுத்த பத்தாண்டுகளுக்கு வலுவான, சக்திமிக்க கட்சியாக நீடிக்கும். அதுவரை நாம் போராடியாக வேண்டும். காங்கிரஸ் கட்சி எப்படி முதல் 40 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாத சக்தியாக இருந்ததோ, அதைப்போலவே பாஜக-வும் இருக்கும்.

`மக்கள் மோடியைத் தூக்கியெறிந்துவிடுவார்கள். மோடி தூக்கியெறியப்பட்டால் பாஜக ஒன்றுமில்லாமல் போய்விடும்!' என ராகுல் காந்தி நினைத்துக்கொண்டிருக்கிறார். அதுதான் அவரிடம் இருக்கும் சிக்கலே! அப்படியொன்றும் நடக்கப்போவதில்லை என்றே நான் கருதுகிறேன். உதாரணமாக, தற்போது பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவருகிறது. ஆனால் மக்கள் மத்தியில் மோடிக்கு பெரிதாக எந்த எதிர்ப்பும் எழுந்ததாகத் தெரியவில்லை.

ராகுல் காந்தி - பிரசாந்த் கிஷோர்
ராகுல் காந்தி - பிரசாந்த் கிஷோர்

உண்மையில் மோடியின் பலம் என்ன... அவரைத் தொடர்ந்து புகழ்ச்சியில் வைத்திருப்பது எது என்பதை ராகுல் காந்தி சரியாகத் தெரிந்து, புரிந்துகொள்ளாதவரை மோடியின் இடத்தை அவரால் பிடிக்க முடியாது.

அனைத்திந்திய அளவில் 30 சதவிகித வாக்குவங்கியைப் பெற்றிருக்கும் பாஜக, அவ்வளவு எளிதில் தேய்ந்துவிடாது. தேர்தலைப் பொறுத்தவரை, நாட்டின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் பாஜக-வுக்கே வாக்களிக்கின்றனர். மீதமிருக்கும் இரண்டு பங்கு மக்களின் வாக்குகள் பல்வேறு கட்சிகளுக்குச் சிதறிவிடுகின்றன. ஒருவேளை மோடி தோற்கடிக்கப்பட்டாலும், பாஜக-வை அசைக்க முடியாது என்பதே கள நிலவரமாக இருக்கிறது" என பிரஷாந்த் கிஷோர் தெரிவித்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு