Published:Updated:

`என் மக்களுக்கு எந்தப் பிரச்னை என்றாலும் விடமாட்டேன்!'- மகளிர் தின விழாவில் விஜயகாந்த்

விஜயகாந்த்
விஜயகாந்த் ( என்.ஜி.மணிகண்டன் )

கெஜ்ரிவால், கட்சி ஆரம்பித்த ஒரு வருடத்தில் முதல் அமைச்சராகி, தற்போது மூன்றாவது முறையாக முதலமைச்சராக வந்துள்ளார். ஆனால், தமிழகத்தின் முதலமைச்சராக விஜயகாந்த் வராதது தமிழகத்துக்கும் தமிழக மக்களுக்கும்தான் இழப்பு.

''மீண்டும் பழைய கம்பீரத்தொடு விஜயகாந்த் தமிழகத்தில் சிங்க நடை போடுவார், பல மக்கள்நலத் திட்டங்களை வைத்திருக்கும் அவர், தமிழகத்தை வல்லரசாக்குவார்'' என்று பிரேமலதா மதுரையில் பேசியது, கட்சித் தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜயகாந்த்
விஜயகாந்த்
என்.ஜி.மணிகண்டன்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மதுரை திருப்பரங்குன்றத்தில் தே.மு.தி.க சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவும் பொதுக்கூட்டமும் நடந்தது. இதில், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, சுதீஷ் உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய பிரேமலதா, ''விஜயகாந்த் தனது வாழ்க்கை முழுவதும் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றவர். துரோகங்களையும் துரோகிகளையும் வென்றெடுத்தவர். உங்கள் பிரார்த்தனையால் பழைய கம்பீரத்தோடு விஜயகாந்த் வருவார். தமிழகத்தின் முதல்வராக நிச்சயமாகப் பதவி ஏற்பார் என்பதில் மாற்றமில்லை.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

அவர் முதலமைச்சராகி இருந்தால், நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தை மாற்றியிருப்பார். அனைத்து உன்னத திட்டங்களும் வந்திருக்கும். அதைத் தவறவிட்டது தமிழக மக்கள்தான். அவர் ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவார். அவர் தன் உழைப்பையும் மக்களையும் நம்பித்தான் கட்சி தொடங்கினார். கட்சி ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடித்தவருக்கு, அடுத்து ஆட்சி அதிகாரத்தை மக்கள் வழங்கியிருக்க வேண்டும். கெஜ்ரிவால் கட்சி ஆரம்பித்த ஒரு வருடத்தில் முதல் அமைச்சராகி, தற்போது மூன்றாவது முறையாக முதலமைச்சராக வந்துள்ளார். ஆனால், தமிழகத்தின் முதலமைச்சராக விஜயகாந்த் வராதது தமிழகத்துக்கும் தமிழக மக்களுக்கும்தான் இழப்பு.

இங்கு வந்துள்ள பெண்களுக்கு ஒரு வேண்டுகோள், நீங்கள் டிக்டாக் செயலியைப் பயன்படுத்த வேண்டாம். அதன் உள்ளே சென்ற பலர், நிம்மதியையும் குடும்பத்தையும் இழந்து தவிக்கின்றனர்.

குடியுரிமைச் சட்டம் என்பது வெளிநாட்டிலிருந்து இங்கே வருபவர்களுக்கு மட்டும்தான். தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு அல்ல. அப்படி பாதிப்பு ஏற்பட்டால், தே.மு.தி.க முதலில் நிற்கும். ஜாதியையும் மதத்தையும் வைத்து மக்களைத் துண்டாட நினைப்பவர்களை இனம் கண்டு, அவர்களை மக்கள் தவிர்க்க வேண்டும். 2021ல் விஜயகாந்த் முதல்வராக வேண்டும் என்றிருந்தால் யாராலும் தடுக்க முடியாது'' என்றார்.

விஜயகாந்த்
விஜயகாந்த்
என்.ஜி.மணிகண்டன்

இறுதியாகப் பேசிய விஜயகாந்த், ''அன்புச் சகோதர சகோதரிகளுக்கு எனது வணக்கங்கள். அனைவருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். என் மக்களுக்கு எந்தப் பிரச்சனை என்றாலும் நான் விடமாட்டேன். விழா முடிந்ததும் அனைவரும் பாதுகாப்பாக இல்லங்களுக்குச் சென்று சேர வேண்டும்'' என சுருக்கமாகப் பேசி முடித்தார்.

இக்கூட்டத்தில் பேசிய கட்சி நிர்வாகிகள் அனைவரும் அடுத்த முதல்வர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா என்று பேசிச் சென்றார்கள். தனித்துக் களம் காண வேண்டும் என்ற ரீதியிலும் பேசினார்கள். இது, கூட்டணிக் கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது!

அடுத்த கட்டுரைக்கு