Published:Updated:

`இரண்டு ஓ.கே... அந்த ஒரு சீட் யாருக்கு?' -எடப்பாடியிடம் மல்லுக்கட்டும் பிரேமலதா, ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன், பிரேமலதா
ஜி.கே.வாசன், பிரேமலதா

அ.தி.மு.க-வின் உறுதியான தலைமை முடிவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த முடிவை பார்த்த பிறகுதான் அ.தி.மு.க கூட்டணியில் இருப்பதா வேண்டாமா என்ற நிலைப்பாட்டை எடுக்க இருக்கிறது தே.மு.தி.க.

``அ.தி.மு.க கூட்டணியில் இருந்துகொண்டே பலமுறை எம்.பி சீட் கேட்டுக்கொண்டிருக்கிறோம். இந்த முறையாவது அ.தி.மு.க தரப்பில் கொடுப்பார்களா இல்லையா எனப் போகப்போகத்தான் தெரியும்" என ஆளும்கட்சியினருக்கு நெருக்கடி கொடுக்கும் விதத்தில் பேசியிருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த். இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி கொடுத்த ரியாக்‌ஷனால் ஏக கடுப்பில் இருப்பதாகச் சொல்கிறார்கள் தே.மு.தி.க தொண்டர்கள். அ.தி.மு.க-வில் இரு ராஜ்ய சபா சீட்கள் ஏறக்குறைய உறுதியாகிவிட்டன.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஒரு சீட்டுக்காக பிரேமலதாவும் ஜி.கே.வாசனும் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பது அரசியல் ஹாட். தமிழகத்தில் உள்ள 6 ராஜ்ய சபா உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, மார்ச் 26-ம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இப்பதவிகளைப் பெறுவதற்காக தி.மு.க, அ.தி.மு.க-வில் உள்ள நிர்வாகிகள் போட்டிபோட்டுக்கொண்டு கட்சித் தலைமையை நாடிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரு கட்சிகளுக்கும் தலா மூன்று இடங்கள் கிடைக்க உள்ளன. அ.தி.மு.க தரப்பில் தம்பிதுரை, கே.பி.முனுசாமி என சீனியர்கள் பலரும் ராஜ்ய சபா சீட்டை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதாவும், `கூட்டணி தர்மத்துக்காக எங்களுக்கு ஒரு சீட்டை அ.தி.மு.க வழங்கும்' என நம்பிக்கையில் இருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார். அதைத்தொடர்ந்து ஜி.கே.வாசன் ஒரு படி மேலே போய் டெல்லி லாபியைக் கையில் எடுத்திருக்கிறார். அப்படி என்னதான் நடக்கிறது அ.தி.மு.க கூட்டணியில் எடப்பாடி என்ன நினைக்கிறார் என்று அக்கட்சி தரப்பில் சிலரிடம் பேசினோம்.

கே.பி. முனுசாமி
கே.பி. முனுசாமி
ராஜ்ய சபா சீட் கொடுக்கவில்லையென்றால் அ.தி.மு.க கூட்டணியில் இருப்பதா வேண்டாமா என்ற நிலைப்பாட்டை எடுக்க இருக்கிறது.
தே.மு.தி.க

முன்னாள் துணைச் சபாநாயகர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, கோகுல இந்திரா இந்தப் போட்டியில் தீவிரமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். அத்தோடு வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க ஆட்சியைப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் டெல்லியில் தங்களுக்கென்று விசுவாசமான ஒரு ஆள் இருக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறாராம். அந்த வகையில் எடப்பாடி தம்பிதுரையையும் ஓ.பி.எஸ் கே.பி.முனுசாமியையும் டெல்லிக்கு அனுப்ப வேண்டும் என்பதில் தீவிரமாகியிருக்கிறார்கள். மற்ற ஒரு சீட்டுக்குத்தான் இவ்வளவு கலவரம் என்கிறார்கள்.

இந்த நிலையில் அ.தி.மு.க கூட்டணியில் உள்ள த.மா.கா அதன் தலைவர் ஜி.கே.வாசனுக்கு ஒரு இடம் வேண்டும் என்று கடுமையாக லாபி செய்து வருகிறது. அத்தோடு அண்மையில் தஞ்சையில் நடைபெற்ற வைத்திலிங்கத்தின் இல்லத் திருமண விழாவில்கூட முதல்வரோடு அருகே அமர்ந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார் ஜி.கே.வாசன்.

எடப்பாடி, ஓ.பி.எஸ்
எடப்பாடி, ஓ.பி.எஸ்

இந்த நெருக்கம் ராஜ்யசபா சீட்டுக்கு அச்சாரம் போடுகிறார் என அ.தி.மு.க நிர்வாகிகள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அத்தோடு முதல்வரைச் சம்மதிக்க வைக்க டெல்லி வட்டாரத்தையும் நாடியிருப்பதாக ஜி.கே.வாசனின் ஆதரவாளர்கள் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து பிரேமலதாவும் தே.மு.தி.க-வுக்கு மாநிலங்களவை இடம் ஒன்றில் போட்டியிடும் வாய்ப்பை அ.தி.மு.க கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கூட்டணியில் இருந்துகொண்டே பலமுறை எம்.பி சீட் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

இந்த முறையாவது கொடுப்பார்களா இல்லையா எனப் போகப் போகத்தான் தெரியும் என ஆளும்கட்சியினருக்கு நெருக்கடி கொடுக்கும் விதத்தில் பேசியிருக்கிறார். அதற்குப் பதிலளித்த முதல்வர், எம்.பி பதவியைக் கேட்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், இதுகுறித்து அ.தி.மு.க தலைமைக் கழகம்தான் முடிவு செய்யும். அ.தி.மு.க-விலேயே பல மூத்த தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் பார்க்க வேண்டாமா என்ற தோற்றத்தில் பேசியிருக்கிறார். இவரது பேச்சின் சாரம்சம் பிரேமலதாவுக்கு எண்டு கார்டு போடும் அளவுக்கு இருந்திருக்கிறது.

பிரேமலதா
பிரேமலதா

கூட்டணியில் சேரும்போது கூட்டணி தர்மத்தை மதிக்கும் உங்களுக்கு உரிய மரியாதை தரப்படும் என்று முதல்வர் எடப்பாடி சொன்னார். ஆனால், இப்போது சீட் இல்லை என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் என்று ஆதங்கப்படுகிறார்கள் தே.மு.தி.க தொண்டர்கள். இந்த நிலையில் அ.திமு.க-வின் உறுதியான தலைமை முடிவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த முடிவை பார்த்த பிறகுதான் அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இருப்பதா வேண்டாமா என்ற நிலைப்பாட்டை எடுக்க இருக்கிறது. தே.மு.தி.க கூட்டணியை விட்டு வெளியேறினாலும் பரவாயில்லை என்று எடப்பாடியும் வேறொரு கணக்குப் போட்டுக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.

அடுத்த கட்டுரைக்கு