திண்டுக்கல் மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையிலிருந்து விமானம் மூலமாக இன்று காலை திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு தே.மு.தி.க நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ``பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வு சாமான்ய மக்களை அதிகம் பாதிக்கும். தொடர்ந்து விலைவாசி உயர்வு என்பது எந்தவிதத்திலும் நியாயமானது இல்லை. கொரோனா காலகட்டத்தில் பலர் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கக்கூடிய வறுமையான சூழலில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வு நிச்சயமாக மக்களைப் பாதிக்கும். இதுசம்பந்தமாக கேப்டனும் நேற்று அறிக்கை கொடுத்துள்ளார். எனவே இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற்று, மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அரசின் சுமையை மக்கள் மீது திணிக்கின்றனர். அரசு மக்களுக்காகத் தான் இருக்கிறது. எனவே, சுமையை மக்களின் மீது சுமத்தாமல் அரசு நடந்து கொள்ள வேண்டும்” என்றார்.

தேர்தல் தோல்விகளால் தே.மு.தி.க தொய்வடைந்த மாதிரி தெரிகிறதே என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா, ``எல்லா கட்சியும் அப்படித்தான். அரசியல்ல வெற்றி தோல்வி சகஜம். 10 வருஷம் ஆட்சியில் இல்லாதவங்க, ஆட்சிக்கு வந்துருக்காங்க இல்லையா... 10 வருஷம் ஆட்சியில இருந்தவங்க, இப்ப இல்லாம இருக்காங்க. அரசியல்ல இது சகஜம் தான். கட்டாயம் எங்கள் இடத்தை நாங்கள் பிடிப்போம். தாலிக்குத் தங்கம் மட்டுமல்ல பெண்களுக்கான எந்தத் திட்டத்தையும் இந்த அரசு நிறுத்திவிடக் கூடாது. அம்மா உணவகத்தை கலைஞர் உணவகம்னு மாத்துன மாதிரி, கடந்த ஆட்சியோட பேர் இருக்கிறது கஷ்டமாக இருந்தா பேரை மாத்திக்குங்க. ஆனால், மக்களை போய்ச் சேர வேண்டிய ஒரு நல்ல திட்டத்தை அரசு மாறியதால் நிறுத்துவது சரியில்லை. பெண்களை வரவேற்கும், பெண்களுக்கு பயனளிக்கும் எந்தவொரு திட்டத்தையும் இந்த அரசு தொடர்ந்து நடைமுறைப்படுத்தணும்” என்றார்.